For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சார்க்' வியூகத்துடன் தொடங்கும் மோடி 'சர்க்கார்' சறுக்குமா? சாதிக்குமா?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சியான பாஜக தனிப்பெரும்பான்மையுடன் நாட்டின் புதிய அத்தியாயமாக ஆட்சியில் அமருகிறது.. பாஜக அரசு பதவியேற்கும் போதே "தெற்காசிய புவிசார் அரசியலை' இலக்காகக் கொண்டு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. பாஜகவின் மோடி தலைமையிலான அரசின் இந்த "சார்க்" வியூகம் சறுக்குமா? சாதிக்குமா? என்பதுதான் அரசியல் ஆய்வாளர்களின் விவாத களமாக உருவெடுத்திருக்கிறது.

இந்தியா விடுதலை பெற்ற தொடக்க காலத்தில் அணிசேரா கொள்கையை வெளியுறவுக் கொள்கையாக கொண்டிருந்தது. அதே நேரத்தில் சுற்றியுள்ள சின்னஞ்சிறிய நாடுகளான நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவுகள், மியான்மர் போன்றவற்றை தமது கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளாகவும் வைத்திருந்தன. அறிவிக்கப்படாத இந்தியாவின் கட்டுப்பாட்டு 'அங்கங்களாக' அந்த நாடுகளும் இணங்கிப் போயிருந்தன.

பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அந்த நாட்டின் விடுதலை காலம் முதல் 'யுத்த' போக்கு கொள்கையாகவே இருந்தது. நேரு காலம் போய் அம்மையார் இந்திரா காலம் இந்தியாவில் வேர்பிடித்தது. அம்மையாரின் காலத்தில் பாகிஸ்தானையே துண்டாடி வங்கதேசம் எனும் இன்னொரு "அண்டை நாட்டை' இந்தியாவே உருவாக்கியும் கொடுத்தது. அப்போதும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அணிசேரா கொள்கையாக இருந்தாலும் 'அண்டை நாடுகள்' மீதான பிடி இறுக்கமாகவே இருந்தது.

டிகாகோ கார்சியோ தீவு

டிகாகோ கார்சியோ தீவு

இப்போது போல் சீனா, தென்னாசியாவின் வல்லரசாக இல்லை. ஆனால் தென்னாசியாவை குறித்து வைத்துக் கொண்டே இருந்தது அமெரிக்கா. 1974-75ஆம் ஆண்டு காலத்தில் இந்தியப் பெருங்கடலில் தென்பகுதியில் டிகாகோ கார்சியோ தீவில் அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க முயன்றபோது பிரதமராக இருந்த இந்திரா காந்தி 'கண்டனம்' தெரிவித்து அதை தடுத்தார்.

திருகோணமலை துறைமுகம்

திருகோணமலை துறைமுகம்

அதைத் தொடர்ந்து இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடார்களை அமைக்க அமெரிக்கா முயன்றது. அந்த ராடார் அமைப்பின் மூலமாக திருகோணமலை துறைமுகத்தின் எண்ணெய் கிடங்குகள் உள்ளிட்டவற்றை பெற்று ஒட்டுமொத்த திருகோணமலை துறைமுகத்தை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்காவின் கணக்கு. ஆனால் அதை இந்திரா கடுமையாக எதிர்த்து தடுத்து நிறுத்தினார்.

தமிழீழ உருவாக்கம்

தமிழீழ உருவாக்கம்

பின்னர் இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது "இனப்படுகொலை" என்று இந்திய நாடாளுமன்றத்திலே பதிவு செய்தார். அத்துடன் தமிழீழத்தை அமைப்பதற்காகவே போராளிக் குழுக்களுக்கு பயிற்சிகளைக் கொடுத்தார். வங்கதேசத்தை ஒரே வாரத்தில் உருவாக்கிய இந்திரா அதே பாணியில் தமிழீழத்தை உருவாக்க திட்டமிட்டார். ஆனால் காலம் அவரை பலி கொண்டுவிட்டது. அதன் பின்னர் அண்டை நாடுகள் மீதான இந்தியாவின் இறுக்கம் மெல்ல மெல்ல தளரவும் தொடங்கியது என்பதும் வரலாறு.

சார்க் நாடுகள்

சார்க் நாடுகள்

இந்த காலகட்டத்தில்தான் "தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பான" சார்க் அமைப்பு உதயமானது. 1985ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூட்டான் ஆகிய நாடுகளால் உருவானது சார்க் நாடு. பின்னர் ஆப்கானிஸ்தானும் இணைந்தது. இதில் இணைய சீனா விரும்பினாலும் இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை.

பெயரளவுக்கு தாதா

பெயரளவுக்கு தாதா

இந்த சார்க் நாடுகளில் இந்தியாதான் பெரிய நாடு.. பரப்பளவில்தான்.. ஆனால் சார்க் அமைப்பில் இடம்பெற்றிருக்கக் கூடிய நாடுகள் மீது இருந்த இந்தியாவின் செல்வாக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அரசியல் ஆதிக்கமற்ற உறவுகளுக்கு இந்த சார்க் கதவைத் திறந்துவிட்டது.

ராஜீவுக்கு பிந்தைய இந்தியா

ராஜீவுக்கு பிந்தைய இந்தியா

அதாவது இப்படி சொல்லலாம்.. ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமரானது முதலே நாட்டின் வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட அத்தனையும் தலைமை அரசியல்வாதிகள் வசமிருந்து அதிகாரிகள் வசமாகின. அதனால் அண்டை நாடுகள் மீதான இந்திய இறுக்கம் மெல்ல மெல்ல தளர்ந்து கொண்டே போயின. குறிப்பாக 1990களுக்குப் பின்னர் தெற்காசியாவில் இந்தியாவின் பேராதிக்கம் கை கழுவியே போகத் தொடங்கியது. அதே காலகட்டத்தில் 1991ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுகின்றன. இந்த இரு அம்சங்களின் விளைவுதான் சீனாவின் விஸ்வரூபம்.

சீனாவின் முத்துமாலை திட்டம்

சீனாவின் முத்துமாலை திட்டம்

உலகின் மிகப் பெரும் நாடான சீனா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு பயணிக்கும் எண்ணெய் கப்பல்கள், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், மலாக்கா ஜலசந்தி வழியே பாதுகாப்பாக சீனாவை சென்றடைவதற்காக உருவாக்கப்பட்டதுதான் முத்துமாலைத் திட்டம். இது நீண்டகால திட்டம்.. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக தெற்காசிய பிராந்தியத்தையும் தென் சீனக் கடல் பிராந்தியத்தையும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகவும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்பது சீனாவின் இலக்கு.

என்னமாதிரி செயல்பாடுகள்?

என்னமாதிரி செயல்பாடுகள்?

முத்துமாலை திட்டத்தின்படி அரபிக் கடல், இந்திய பெருங்கடல், அதை ஒட்டிய வங்கக் கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி நாடுகளின் துறைமுகங்களை கையகப்படுத்தி அங்கு வலுவான கடற்படை தளங்களை அமைத்துவிடுவது என்பதுதான் முத்துமாலை திட்டத்தின் உள்நோக்கம்.

இந்தியாவில் அரசியல் குழப்பம்

இந்தியாவில் அரசியல் குழப்பம்

சீனாவின் இந்த முத்துமாலைத் திட்டம் தொடங்கப்படும் நிலையில் இந்திய அரசியல் நிலையற்ற ஒன்றாகிப் போனது. வலுவான மத்திய அரசும் இல்லை, வலுவான தலைவர்களும் இல்லை... அதிகாரிகளே அரசைத் தீர்மானித்து நடத்தக் கூடியவர்களாக இருந்தனர். சுருக்கமாக இப்படி சொல்லலாம்.. ஒரு கம்பெனியின் நிறுவனர் இல்லாமல் போனால் இதர அதிகாரிகள் எப்படியெல்லாம் சட்டாம்பிள்ளைகளாவார்களோ அந்த கதியில்தான் இந்தியா இருந்தது.

விரைவுபடுத்திய சீனா

விரைவுபடுத்திய சீனா

இந்தியாவின் நிலையற்ற அரசியல் தன்மைகளால், இதுவரை இந்தியாவின் பிடிகளில் இருந்த "சார்க்" நாடுகள் விடுதலை பெற்றதைப் போல உணர்ந்தன. இந்த விடுதலை உணர்வை சீனா சரியாக பயன்படுத்திக் கொண்டது. இதன் விளைவாக கடந்த 20 ஆண்டுகளில் இந்த தெற்காசிய பிராந்தியம் கண்டது என்ன?

இலங்கை

இலங்கை

சார்க் நாடுகளில் ஒன்றான இலங்கை, முற்று முழுதாக சீனாவின் கட்டுப்பாட்டு நாடாகப் போய்விட்டது. அங்கே தென்னிலங்கையில் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை நிர்மாணித்து தன்வசமாக்கிக் கொண்டது. வட இலங்கையிலோ மன்னார் வளைகுடாவில் மீன்பிடி உரிமையை பெற்றுக் கொண்டுவிட்டது. அத்துடன் 'தமிழீழம்' உருவானால் இந்தியாவுக்கு பாதுகாப்பு என்ற இந்திரா நினைத்ததை பின்னர் வந்த இந்திய கொள்கையே அழித்து நிர்மூலமாக்கிட அதற்கு சீனாவும் கை கோர்த்த வரலாற்று வினோதமும் இலங்கைத் தீவில் அரங்கேறியது. இப்போது திரிகோணமலை துறைமுகம் கிடைக்குமா கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் உள்ளடங்கிய வடபகுதி தரைப்பகுதியில் மட்டும் இந்தியா ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

வங்கதேசம்

வங்கதேசம்

மற்றொரு சார்க் நாடான இந்தியா உருவாக்கிக் கொடுத்த வங்கதேசத்தையும் தம் வசமாக்கி அதன் சிட்டஹாங்கிலே கடற்படை தளம் அமைத்துக் கொண்டது சீனா. இது, இந்தியாவின் மிகப்பெரிய கடற்படை தளமான அந்தமான் தீவுகளுக்கு அருகே இருக்கிறது குறிப்பிட வேண்டிய ஒன்று.

பாகிஸ்தான்..

பாகிஸ்தான்..

சீனாவின் விஸ்வரூப வளர்ச்சி கண்டு பெருமிதம் கொண்ட நாடு சார்க் உறுப்பு நாடான பாகிஸ்தான். என்னதான் கராச்சியில் மிகப் பெரிய துறைமுகத்தைக் கொண்டிருந்தாலும் எப்போதும் இந்தியாவால் ஆபத்துக்குரிய இடம். அதனாலேயே சீனா கூறிய யோசனையை ஏற்று பலுசிஸ்தானத்தின் கவ்தார் துறைமுகத்தை தாரை வார்த்துக் கொடுத்தது பாகிஸ்தான். இப்போது கவ்தார் துறைமுகத்தை சீரமைத்துவிட்ட சீனா, அங்கிருந்து இமயமலையை இணைக்கிற பணியை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது.

மாலத்தீவுகள்

மாலத்தீவுகள்

மற்றுமொரு சார்க் நாடான மாலத்தீவுகள், அண்மைக்காலம் வரை இந்தியாவுடன் அனுசரணையாக இருந்த நாடுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைக்க இடம் கொடுத்தது. பொங்கிப் போன இந்திய அதிகாரிகள் இன்று வரை மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கத்துக்காக போராடிக் கொண்டே இருக்கின்றனர்.

மியான்மர்..

மியான்மர்..

அத்துடன் சார்க் அமைப்பில் பார்வையாளராக இருக்க விரும்புகிற மியான்மரும் அதன் காக்கோஸ் தீவுகளில் வலுவான கடற்படை தளம் அமைத்துக் கொண்டு இந்தியாவை மிரட்டிக் கொண்டிருக்கிறது சீனா.

ஆப்கானிஸ்தான்..

ஆப்கானிஸ்தான்..

சார்க் நாடான இந்திய- சீன எல்லையோடு ஒட்டிய ஆப்கானிஸ்தானில் இன்று பாகிஸ்தானையும் மீறி இந்தியாவின் கை மேலோங்கி இருந்தாலும் இங்கும் ஆப்பு வைக்க தொழில் முதலீடுகளை சீனா குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை சார்க் நாடுகள்...

பெரும்பான்மை சார்க் நாடுகள்...

இப்படி திபெத், பூடானைத் தவிர அனைத்து சார்க் நாடுகளிலும் கடந்த கால்நூற்றாண்டில் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது சீனா.

இந்தியாவின் அமெரிக்க சார்பு

இந்தியாவின் அமெரிக்க சார்பு

இதே காலகட்டத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது அணிசேராக் கொள்கை என்பதைக் கைவிட்டுவிட்டு அமெரிக்கா சார் கொள்கையாகவும் உருமாறிக் கிடக்கிறது இப்போது என்பதும் நினைவில் கொள்ள வேண்டும்.

மோடி அரசு

மோடி அரசு

இந்த நிலையில் காங்கிரஸ் அல்லாத இந்து தேசியவாதத்தின் தலைவரான மோடி பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். மோடியின் சகாப்தமும் அதிகாரிகளின் அரசாக இருக்குமா? அல்லது எப்படி இருக்கிறப் போகிறது என்பதற்கான அக்னிப் பரீட்சை இப்போதே தொடங்கிவிட்டது.

சார்க் நாடுகளுக்கு அழைப்பு

சார்க் நாடுகளுக்கு அழைப்பு

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக நாட்டின் பிரதமர் பதவியேற்கும் பொழுதே "சார்க் நாடுகளின்' தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சார்க் அழைப்பிதழ் விவகாரமே பெரும் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் உருவாக்கிவிட்டிருக்கிறது.

ஏன் சார்க் நாடுகளுக்கு?

ஏன் சார்க் நாடுகளுக்கு?

சார்க் நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கத்தான் அழைப்பு அனுப்புகிறோம் என்கிறார்கள் பாரதிய ஜனதாவினர்.. தொடக்கத்திலேயே அழைத்து "பிரச்சனைகளை" இப்போதே பேசப்போகிறோம் என்கிறார்கள் அவர்கள்..

இலங்கை

இலங்கை

இந்த அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று துடிக்கிறது இலங்கை. ஆனால் பதவியேற்காத மோடி அரசுக்கு முதலாவது பெரும் நெருக்கடியாக இங்கே உள்நாட்டில் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலமே ஒட்டுமொத்தமாக இலங்கை அதிபரை அனுமதிக்கவே கூடாது என்று போர்க்கோலம் பூண்டிருக்கிறது.

இலங்கை சாயுமா?

இலங்கை சாயுமா?

உள்நாட்டு எதிர்ப்பை மீறி இலங்கைக்கு இந்தியா செங்கம்பளம் விரித்தாலும் நிச்சயமாக அதன் சீனா சார்பு தன்மையை கைவிடப் போவதே இல்லை. அதாவது சீனாவின் காலனி நாடாக இலங்கை உருமாறி ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இங்கே எப்படி மோடி சர்க்காரின் "சார்க்" வியூகம் செல்லுபடியாகுமோ தெரியவில்லையே..

பாகிஸ்தான்..

பாகிஸ்தான்..

இந்தியா அழைப்பு கொடுத்தும் இன்னமும் முடிவெடுக்கிறோம்..முடிவெடுக்கிறோம் என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது சார்க் நாடான பாகிஸ்தான்.. இந்திய ஊடகங்களோ பாகிஸ்தான் பிரதமர் ஒப்புக் கொண்டார் என்கின்றன. ஆனால் இந்திய ஊடகங்கள் பொய்ச்செய்தி வெளியிடுகின்றன. இன்னமும் ஒப்புக் கொள்ளலையே என்று கண்ணாமூச்சி காட்டுகிறது பாகிஸ்தான். அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக ஆட்டம் காட்டி வரும் பாகிஸ்தானை வளைத்துவிடப் போகிறதா மோடி சர்க்காரின் "சார்க் வியூகம்"?. சந்தேகமே.

வங்கதேசம்..

வங்கதேசம்..

என்னதான் சார்க் உறுப்பு நாடான வங்கதேசத்தின் அதிபர் இங்கே வந்து போனாலும்.. "சட்டவிரோத வங்கதேசத்தவரை மூட்டை முடிச்சுகளுடன் விரட்டியடிப்போம்" என்ற ஏற்கெனவே மோடியின் விரட்டல் பேச்சு விரோதமாகத்தான் வேரூன்றி இருக்கும்.. நிச்சயமாக மோடி சர்க்காரின் சார்க் வியூகம் வங்கதேசத்தில் சாதிக்கப்போவதே இல்லை. அந்த நாட்டின் சார்பில் யாரும் வரப் போவதும் இல்லை.

மாலத்தீவு

மாலத்தீவு

சார்க் நாடுகளில் மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு வர ஒப்புக் கொண்டாலும் அதனது சீனாவின் நெருக்கம் இந்தியாவுக்கு சிக்கலாகத்தான் தொடரப்போகிறது

எஞ்சியவை

எஞ்சியவை

இப்படி சார்க் நாடுகளில் எஞ்சியிருப்பவை நேபாளம், பூடான் ஆகியவைதான். இவை ஒன்றும் இந்தியாவுக்கு எதிராகப் போகப்போவதில்லைதான்.

தொடக்கமே சறுக்கல்தான்..

தொடக்கமே சறுக்கல்தான்..

தற்போது சார்க் நாடுகளை முன்வைத்து மோடி அரசாங்கம் தொடங்கிய விளையாட்டு தொடக்கத்திலே இலங்கையாலும் பாகிஸ்தானாலும் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. வங்கதேசத்துடன் சர்க்கார் அமைப்பதற்கு முன் மோடியே விரோதமாக்கிக் கொண்டார்.

முத்துமாலை திட்டம்

முத்துமாலை திட்டம்

மேலும் ஏற்கெனவே சார்க் நாடுகளை முத்துமாலைத் திட்டத்துக்குள் முடக்கி வைத்திருக்கிறது சீனா.. அதன் முத்துமாலைத் திட்டத்துக்கு போட்டியாக மிகப் பெரும் வேலியை அதன் பின்னாலேயே அமெரிக்காவும் போட்டுக் கொண்டு வருகிறது.

உடைக்குமா மோடி சர்க்கார்

உடைக்குமா மோடி சர்க்கார்

தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த கால் நூற்றாண்டுகாலமாக இப்படி வேரூன்றிவிட்ட சீனா, வேர்பிடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா ஆகியவற்றை எதிர்கொள்ள மோடி சர்க்காரின் இந்த "சார்க்" அழைப்பு வியூகம் கை கொடுக்குமா? காலை வாருமா? என்ற பதிலுக்கு காலம் காத்திருக்கிறது.

English summary
Now many SAARC countries like Srilanka, Pakistan, Bangaladesh were controlled by China. But India's new Modi govt now taking SAARC strategy from his swearing-in ceremony. Narendra Modi hit the diplomatic equivalent of a home run starting out his tenure with the unexpected —by inviting all Saarc leaders to his swearing in ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X