For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாதி ஏற்றத்தாழ்வு உள்ளவரை இடஒதுக்கீடு தேவை-தற்போதைய முறையில் மாற்றம் அவசியம்: மீண்டும் மோகன் பகவத்

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: சமூகத்தில் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடும் அவசியம்தான்; அதே நேரத்தில் தற்போதைய இடஒதுக்கீட்டு முறையில் மாற்றமும் தேவை; இடஒதுக்கீட்டுக்கான தகுதியை கண்டறிய புதிய கமிட்டி அமைக்க வேண்டும் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது முதல் இடஒதுக்கீட்டுக்கு எதிரான குரல்கள் பல திசைகளில் இருந்தும் வெளிப்பட்டு வருகிறது. "எங்களுக்கும் இடஒதுக்கீடு கொடு; இல்லையேல் இடஒதுக்கீட்டு முறையையே ஒழி" என்று குஜராத்தின் படேல்கள் சமூகம் பெரும் போராட்டத்தை நடத்தியது.

New Committee for Reservation, says Mohan Bhagwat

அப்போது கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இடஒதுக்கீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றார். இதற்கு சமூக நீதிக்கு ஆதரவான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் இந்த இடஒதுக்கீடுக்கு எதிரான பேச்சு மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இந்த இடஒதுக்கீட்டு எதிர்ப்பு பேச்சால்தான் பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியைத் தழுவியது. இதன் பின்னர் இடஒதுக்கீடு விவகாரங்களில் மிகவும் நிதானத்தையே பாஜகவும் இந்துத்துவா அமைப்புகளும் கடைபிடித்து வருகின்றன.

தற்போது ஜாட் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய உடன், ஒரு கமிட்டி அமைக்கப்படும் என அறிவித்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தது மத்திய அரசு. இந்நிலையில் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை இடஒதுக்கீட்டு முறை அவசியம்தான்.... ஆனால் தற்போதைய இடஒதுக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பகவத் பேசியதாவது:

தற்போது இடஒதுக்கீடு தேவை என பலதரப்பும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இடஒதுக்கீடு பெறுவதற்கு தகுதியானவர்கள் யார் என்பதை ஆராய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும்.

இந்த கமிட்டியில் அரசியல்வாதிகள் இடம்பெறக் கூடாது. எந்த சமூகத்தை முன்னேற்ற வேண்டும்? அவர்களுக்கு எவ்வளவு காலம் இடஒதுக்கீடு தேவை என்பதையும் அந்த கமிட்டி வரையறை செய்ய வேண்டும்.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தையும் அக் கமிட்டி பெற்றிருக்க வேண்டும். சமூகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவருக்கான வாய்ப்புகளை நாம் மறுக்கக் கூடாது.

இந்த சமூகத்தில் ஜாதிய ரீதியான ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடும் தேவையே. பொருளாதார விடுதலையோடு சமூக ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுதலை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் அம்பேத்கர்.

நகரங்களில் வாழ்கிற நமக்கு இந்த ஜாதிய ஒடுக்குமுறைகள் குறித்து தெரிவதில்லை. ஆனால் இந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் இன்னமும் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சமூக ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.

ஐக்கிய ஜனதா தளம் கண்டனம்

தற்போதைய இடஒதுக்கீட்டு முறையில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையிலான மோகன் பகவத்தின் இப்பேச்சுக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கே.சி. தியாகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போதைய இடஒதுக்கீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் முயற்சிகளை மேற்கொள்வது கடும் கண்டனத்துக்குரியது.

இதற்கு முன்னர் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதேபோல் ஒரு அரசியலமைப்பு சாராத கமிட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார் மோகன் பகவத். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் வைத்யாவும் ஜாதி அடிப்படையிலான அனைத்து இடஒதுக்கீட்டையும் ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் இத்தகைய கருத்துகள் அரசியல் சாசன அம்சங்களுக்கு எதிரானதாகும். தற்போதைய மத்திய பாஜக அரசு, இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு போன்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களின் பெயரால் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறது.

தற்போதைய இடஒதுக்கீட்டு முறைக்கு மாற்றான எந்த ஒரு யோசனை முன்வைக்கப்பட்டாலும் அதை ஐக்கிய ஜனதா தளம் கடுமையாக எதிர்க்கும். இது பழங்குடி இனம் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது என்றார்.

English summary
Rashtriya Swayamsevak Sangh chief Mohan Bhagwat has suggested that a non-political committee should be formed to decide on eligibility for reservation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X