For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீரா ராடியா உரையாடல்கள் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

Nira radia
டெல்லி: தனிநபர்கள் ஆதாயத்துக்காக ஊழல்கள் நடந்திருப்பதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதால் அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள்பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசு தரப்பு சாட்சி நீரா ராடியா. இவர் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் தலைவர்களின் தரகராக செயல்பட்டு வந்தார். இவர் 9 ஆண்டு காலத்தில் ரூ.300 கோடி அளவுக்கு தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை வளர்த்தார். இதுதொடர்பாக 2007-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்துக்கு புகார் சென்றது.

அதைத் தொடர்ந்து மத்திய அரசின் உத்தரவின்பேரில் 2008-ம் ஆண்டு, ஆகஸ்டு 20-ந்தேதி தொடங்கி அக்டோபர் 19-ந்தேதி வரை 60 நாட்களும், பின்னர் 2009 மே மாதம் 11-ந்தேதி முதல் மேலும் 60 நாட்களும், நீரா ராடியா அரசியல் தலைவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் உள்பட பல்வேறு நபர்களுடன் தொலைபேசியில் பேசிய உரையாடல்கள் இடைமறித்து கேட்டு பதிவு செய்யப்பட்டன.

இந்த உரையாடல்களில் சில ஊடகங்களிலும் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொழில் அதிபர் ரத்தன் டாட்டா மற்றும் பொது நல வழக்குகளுக்கான மையம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

நீரா ராடியாவுடனான தமது உரையாடல் அம்பலத்துக்கு வந்ததால் அந்தரங்கம் பாதுகாக்கப்பட வழிமுறைகள் வகுத்து வெளியிட வேண்டும் என்று ரத்தன் டாட்டா தனது வழக்கில் முறையிட்டுள்ளார்.

இதேபோன்று பொது நல வழக்குகளுக்கான மையம், நீரா ராடியா உரையாடல்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என முறையிட்டுள்ளது.

இந்த வழக்குகளை நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து ஆராய்வதற்கு உச்சநீதிமன்றம் ஒரு குழுவையும் அமைத்தது. இக் குழு, நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை ஆராய்ந்து ஒரு ரகசிய அறிக்கை தாக்கல் செய்தது.

அதை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், நீரா ராடியாவின் உரையாடல்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பானது மட்டுமல்ல, பல்வேறு கோணங்களில் அவை ஆராயப்பட வேண்டியவை என கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தனியார் நிறுவனங்களும், அரசு அதிகாரிகளும் மிகத்தீவிரமான தீய நோக்கத்துடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளனர். தனி நபர்கள் ஆதாயம் அடைவதற்காக செல்வாக்குமிக்க நபர்கள், புறம்பான நோக்கத்துடன் ஊழல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நீரா ராடியா உரையாடல்கள் காட்டுகின்றன. இதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது.

தனிநபர்கள் ஆதாயம் அடைந்தது தொடர்பான 6 பிரச்சினைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. 2 மாதங்களில் இந்த விசாரணையை சி.பி.ஐ. முடித்து தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவினை வாசித்தபோது. சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டிய 6 பிரச்சினைகள் குறித்து விரிவாக கூற வில்லை. நீதித்துறை தொடர்பான ஒரு விவகாரத்தினை உரிய உத்தரவு பிறப்பிப்பதற்காக தலைமை நீதிபதியின் பார்வைக்கும், மற்றொரு விவகாரத்தை சுரங்கத்துறை தலைமை கண்காணிப்பு அதிகாரியின் பார்வைக்கும் நீதிபதிகள் அனுப்பினர்.

மேலும், நீரா ராடியாவின் ஒட்டுமொத்த உரையாடல் தொகுப்புக்களை ஆராய உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான ஆய்வுக்குழுவில் மேலும் 10 வருமான வரித்துறை சப்-இன்ஸ்பெக்டர்களை சேர்த்துக்கொள்ளவும் அனுமதி அளித்தனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிபதிகள் டிசம்பர் மாதம் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

English summary
The Apex court has directed the CBI to investigate the 15 conversations of Nira Radia, who is a corporate lobbyists, suspecting that government officials may also be involved in the scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X