• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஒமிக்ரான் கொரோனா: மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாரா?

By BBC News தமிழ்
|
கொரானா
Getty Images
கொரானா

கொரானா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் தனது போராட்டத்தில் இருந்து இந்தியா என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தொற்றுநோயியல் நிபுணர் சந்திரகாந்த் லஹரியா எழுதுகிறார்.

இந்தியாவின் வட மாநிலங்களில் பயணம் செய்யும் எவரும் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக நினைத்தால், அவர்களை மன்னித்து விடுங்கள். ஏனென்றால் அவர்களுக்கு காணக் கிடைக்கும் காட்சிகள் அப்படி.

சிறிய நகரங்களில், சிலரே முகக் கவசங்களை அணிகிறார்கள். தனிநபர் இடைவெளி என்பது எப்போதோ கேட்ட சொல்லாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு அடிக்கடி பேசப்பட்ட கொரோனா குறித்த தகவல்கள் இப்போது உரையாடல்களில் மிகவும் அரிதாகவே தென்படுகின்றன. கொரோனா வைரஸை விளம்பரப் பலகைகள் மட்டுமே நினைவூட்டுகின்றன. அதுவும் அரசியல்வாதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக.

தேசிய தலைநகரான டெல்லியில், பெரும்பாலான மக்கள் முகக் கவசங்களை அணிந்திருக்கிறார்கள். காரணம் விதிமுறைகள். ஆனால் நகரம் முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊசிகூட கீழே விழாத நெரிசலான சந்தைகள், கூட்டமான உணவகங்கள் முதல் வழக்கமான சமூகக் கூட்டங்கள் வரை எல்லாமே மக்களால் நிரம்புகின்றன.

இந்தியாவில் இப்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவுதான். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 10 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. தடுப்பூசி பற்றாக்குறை என்று பேச்சும் பெரிதாக இல்லை. அது மங்கிய நினைவுக்குப்போய்விட்டது. பெரியவர்களில் அதாவது, 94 கோடி பேரில் 80 சதவிகிதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

ஆனால் நோய்த் தொற்று முடிவுக்கு வரவில்லை என்பதே உண்மை. ஐரோப்பாவில் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நிலைமை "கவலையளிப்பதாக" உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியிருக்கிறது.

கொரானா
Getty Images
கொரானா

ஆகவே, தவிர்க்கவே முடியாத கேள்வி ஒன்று தோன்றுகிறது: கோவிட்-19 இன் மூன்றாவது அலை உருவாகுமா? அப்படி உருவானால் அதற்கு இந்தியா தயாரா?

தற்போது பெரும்பாலான இந்தியர்களின் உடலில் டெல்டா திரிபுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவே இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணமாக இருக்கலாம். மேலும் நாட்டிலுள்ள பெரியவர்களில் ஐந்தில் நான்கு பகுதியினருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆனால் இதை மட்டுமே வைத்து மகிழ்ச்சியடைந்து விடமுடியாது.

பல இந்திய மாநிலங்களில் டெங்கு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. புதிதாகத் தோன்றக்கூடிய, மீண்டும் பரவக்கூடிய நோய்களைக் கண்டறிந்து சமாளிக்க சுகாதார அமைப்பு இன்னும் தயாராக இல்லை என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

இங்குதான் பிரச்சனை இருக்கிறது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோய் பரவத் தொடங்கிய போது, கடுமையான ​பொதுமுடக்கத்தின் மூலமாக ​​​குறைவான பணியாளர்களைக் கொண்ட, கட்டமைப்புகள் குறைந்த சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

உயர்நிலை அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், மூத்த சுகாதாரக் நிபுணர்களும், கொள்கைகளை வகுப்பவர்களும் கூட பொதுமுடக்கத்தின் நோக்கம் இதுவே என்று மீண்டும் மீண்டும் கூறினார்கள்.

ஆனால் ஓராண்டுக்குப் பிறகு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கியபோது, நாட்டில் பேரழிவு ஏற்பட்டது. மருத்துவமனைகள் படுக்கைகள் இல்லை. ஆக்சிஜனுக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரும்பாலும் காப்பீடு செய்யாத மக்கள் சொத்துகளை விற்று சிகிச்சைக்கான கட்டணங்களை நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.

கொரானா
Getty Images
கொரானா

2021 ஜூலையில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த இரண்டாவது கோவிட்-19 உதவித் தொகுப்பை அரசு அறிவித்தது. ஆனால் அதற்காக ஒதுக்கிய தொகை மிகக் குறைவு என்றும், அதைச் செயல்படுத்த வேண்டிய அவசரம் அரசிடம் இல்லை என்றும் சிலர் வாதிட்டனர்.

2017 இல் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் தேசிய சுகாதாரக் கொள்கையில், 2025 ஆம் ஆண்டிற்குள் சுகாதாரத்திற்கான செலவை GDP-யில் 2.5% ஆக உயர்த்த உறுதியளிக்கப்பட்டது. ஆனால் 2022-இல் முடிவடையும் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.3% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் பாதையில் இந்தியா இல்லை என்பது தெளிவாகிறது.

இந்தியாவின் "ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா" என்பது உலகின் மிகப்பெரிய பொது சுகாதார காப்பீட்டு திட்டங்களில் ஒன்றாகும் என்று அரசு அடிக்கடி கூறி வருகிறது. ஆனால் இந்த திட்டம் மிகவும் அவசியமானவர்களுக்கு உதவவில்லை என்று பல செய்திகள் கூறுகின்றன.

ஆனால் இந்தியாவுக்கு முன்னால் உள்ள சவால் இன்னும் பெரியது; கொரோனா தொற்றுநோய்க்கு அப்பாற்பட்டது.

காசநோய்க்கு எதிரான போரில் மோசமான பின்னடைவு

சுகாதார அமைப்பின் பெரும்பகுதி கோவிட் -19 ஐக் கையாள்வதில் கவனம் செலுத்தியிருந்தாலும், பிற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டன. டெங்கு பாதிப்பை சமாளிக்க பல இந்திய மாநிலங்கள் போராடிக் கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

கொரோனா தொற்றால் "காசநோயைக் கையாள்வதில் பல ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த உலகளாவிய முன்னேற்றம்" தலைகீழாகிவிட்டது என உலக சுகாதார அமைப்பு கடந்த அக்டோபரில் கூறியது. மக்கள் சிகிச்சையை அணுக முடியாமல் போனதே அதற்குக் காரணம். 2019 மற்றும் 2020 க்கு இடையே காசநோயைப் பற்றித் தெரிவிப்பதில் ஏற்பட்ட உலகளாவிய வீழ்ச்சியில் இந்தியாவின் பங்கு 41% ஆகும் என்றும் WHO தெரிவித்தது.

தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுவதில் சிரமப்படுகிறார்கள்.

ஆகவே, இந்தியா என்ன செய்ய வேண்டும்?

கொரானா
Getty Images
கொரானா

முதலாவதாக, அதன் தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளை பற்றிய பாரபட்சமற்ற மதிப்பீட்டைச் செய்வதற்கு அரசாங்கம் சுயாதீன நிபுணர்களை நியமிக்க வேண்டும்.

இரண்டாவதாக, இந்தியா தனது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த மீண்டும் உறுதியளிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால், நாடு மிகவும் வலுவான சுகாதார அமைப்பைப் பெற்றுவிடும்.

மூன்றாவதாக, அனைத்து கொள்கை வகுப்பவர்கள், மருத்துவ நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் பீதியையும் தவறான தகவல்களையும் தவிர்க்கும் வகையில் அறிவியல் தகவல் தொடர்புகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

நான்காவதாக, இந்தியாவின் தொற்றுநோய்க்கான நடவடிக்கைகளில் ஆரம்ப சுகாதார சேவைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஐந்தாவது, சுகாதாரப் பணியாளர் பணியிடங்களில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலியிடங்களை இந்தியா உடனடியாக நிரப்ப வேண்டும். நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் சமமான சுகாதாரச் சேவைப் பரவலுக்கான விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். அதில் பின்தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்தியா மற்றொரு பெரிய கோவிட் அலையை எதிர்கொள்ளலாம். அல்லது அப்படியொன்று வராமலேயே போகலாம். ஆனால் பிற நோய்களின் பெரும்பரவல், உள்ளூர் தொற்றுநோய்கள் போன்றவை கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போலவே தொடர்ந்து நீடிக்கும்.

எந்தவொரு நோய் பரவுதலையும் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு நாடு தயாராக இருக்கிறது என்றால், அது ஒரு தொற்று நோயைத் தடுக்கவும் தயாராக உள்ளது என்றே பொருள்.

எனவே, ஒவ்வொரு பெரும்பரவலைத் தடுப்பதற்கும் தயாராக வேண்டும்.

ஆனால், இந்தியா இன்னும் தயாராகவில்லை என்பதற்கு 15 இந்திய மாநிலங்களில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நடக்கும் போராட்டமே சாட்சி.

இப்போது நடவடிக்கை தேவை. யாரோ ஒருவர் நம் குரலைக் கேட்கிறார் என்பது மட்டுமே நம்பிக்கையாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Omicron: Is India ready to face 3rd wave of Coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion