நான் ஒன்றும் மல்லையா போல நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை : சோனியாகாந்தி மருமகன் காட்டம்
டெல்லி : அரசியல் காரணங்களுக்காகவே தான் பழி வாங்கப்பட்டதாகவும், மல்லையா போல நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதோரா தெரிவித்து உள்ளார்.
கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் உள்ளது. வங்கிகள் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவைத்துவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனில் பதுங்கி இருக்கிறார் என்று அவர் மீது இந்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

லண்டனில் இருக்கும் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க அனுமதி கோரும் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அதில் நேற்று ஆஜரான விஜய் மல்லையா, 'தற்போதைய அரசால் அரசியல் காரணங்களால் நான் பழிவாங்கப்படுகிறேன். இதுபோல ஹிமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங், சோனியா காந்தி மருமகன் வதோரா ஆகியோர் பழிவாங்கப்பட்டுள்ளார்கள்' என்று லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராபர்ட் வதோரா, ' எனது பெயரை சிலர் அவதூறாக பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டவன் தான்.

ஆனால், மல்லையா போல வங்கிப் பணத்தைக் கையாடல் செய்துவிட்டு, அதை சமாளிக்க வெளிநாடுகளில் போய் அமர்ந்துகொள்ளவில்லை. இந்திய நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. அதுபோல, மல்லையாவும் வெளிநாடுகளில் பதுங்காமல் இந்தியா வந்து நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவேண்டும். அதுபோல, மக்களின் வரிப்பணத்தை திரும்ப செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.