
பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்த இந்து அமைப்பினர்
(இன்று 25.12.2021 கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் சிறிய அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த இந்து அமைப்பினர் சிலர் நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை கனிகா ஃப்ரான்சிஸ், "பள்ளியில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் , இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்திருந்தோம். இருப்பினும் மாணவர்களின் விருப்பப்படி நேற்று (டிசம்பர் 23) அவர்களே கேக் வெட்டி சிறிய அளவிலான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென பள்ளிக்குள் வந்த இந்து அமைப்பினர் சிலர் இந்து பண்டிகைகளை கொண்டாடாமல் கிறிஸ்துவ பண்டிகைகளை ஏன் கொண்டாடுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சரஸ்வதி புகைப்படத்தை சுவற்றில் மாட்டச் சொல்லி தாக்கவும் முயன்றனர்" எனத் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் மீது வழக்குத் தொடுக்கவுள்ளதாக பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் - போலீஸ் சோதனைச்சாவடி அருகே துணிகரம்
கவல்துறையின் சோதனைச்சாவடி அருகே இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையர்கள் பெயர்த்து திருடிச் சென்றுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் தாஜ்கஞ்ச் நகரில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலால் ஹரியா என்ற பகுதியில் காவல்துறையின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. அங்குள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது.
- தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்: தெரிந்து கொள்ள வேண்டிய 12 முக்கிய அம்சங்கள்
- பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க இந்திய அரசு விரும்புவது ஏன்?
அந்த ஏ.டி.எம் மையத்திற்குள் இன்று அதிகாலை 2.45 மணியளவில் நுழைந்த கொள்ளைகும்பல் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளது. ஆனால், இயந்திரத்தை திறக்கமுடியாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை தரையிலிருந்து முழுவதுமாக பெயர்த்து எடுத்துச்சென்றனர்.
வாடிக்கையாளர் ஏ.டி.எம் மையத்தில் இன்று காலை பணம் எடுக்க வந்தபோது எ.டி.எம் இயந்திரம் உடைத்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரத்தை துக்கிச்சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருவதாகச் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது புகார் கூறி மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்
கோவையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது புகார் கூறி, நடவடிக்கை கோரி மாணவ, மாணவிகள் டிசம்பர் 24ஆம் தேதி போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்து தமிழ்திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
கோவை வெள்ளலூரில், பேருந்து நிறுத்தம் அருகே, அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏராளமான எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் உயர்நிலை கணினி அறிவியல் பிரிவில் ஆசிரியராக விஜய்ஆனந்த் (40) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி, உயர்நிலைப்பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று (டிச.24) மதியம் பள்ளி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்துக்குள், தலைமை ஆசிரியை அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரித்தனர். மாணவ, மாணவிகள் தரப்பில் கூறும்போது,'' இப்பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் விஜய்ஆனந்த் என்பவர், உயர்நிலைப் பிரிவில் படிக்கும் மாணவிகளிடம் பாடங்கள் தொடர்பாக ஆலோசனை கூறுகிறேன் என்ற பெயரில் இரட்டை அர்த்தத்துடன் ஆபாசமாக பேசுவது, தவறான இடத்தில் தொடுவது, வாட்ஸ் ஆப்பில் அவதூறான, ஆபாசமான குறுந்தகவல்கள் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். இதுதொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்த போது, அவர் இதுதொடர்பாக விசாரித்தார். இதைத் தொடர்ந்து ஆசிரியர் பள்ளிக்கு வருவதில்லை. ஆனால், இவர் மீதான புகார் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் சில மணி நேரங்களுக்கு பின்னர் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். இதற்கிடையே, பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து ஆசிரியர் விஜய்ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து, கல்வித்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கிழக்குப்பகுதி மகளிர் போலீசார் விசாரித்து வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ’83’ படத்தில் ரன்வீர் சிங்கை பார்த்தால் அவர் கபில்தேவ் என்றே சொல்வார்கள் - மதன் லால்
- ஆயுள் கைதிகள் முன்விடுதலையை ஆராய அரசு குழு: 34 ஆண்டுகளை கடந்தவர்களுக்கு பலன் உண்டா?
- 83 திரைப்படம்: விமர்சனம்
- இந்தியா 1983 உலக கோப்பையை வென்றது எப்படி? முந்தைய உலக கோப்பைகளில் இந்தியா எப்படி செயல்பட்டது?
- "நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - அண்ணாமலை பேட்டி
- இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்