For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்மாவதி திரைப்பட பிரச்சனையின் முழுப் பின்னணி

By BBC News தமிழ்
|
தீபகா படுகோனே
AFP
தீபகா படுகோனே

வலதுசாரி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், சாதிய குழுக்களும் நாடெங்கும் பத்மாவதி திரைப்பட வெளியீட்டுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இதன்காரணமாக, அத்திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த பிரச்சனை? ஏன் அவர்கள் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். சுதா ஜி திலக் விளக்குகிறார்.

ஏன் இந்த சர்ச்சை?

14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜபுத்திர சாதியை சேர்ந்த இந்து ராணி பத்மாவதி மற்றும் முஸ்லீம் அரசர் அலாவுதீன் கில்ஜி குறித்த கதைதான் இந்த திரைப்படம்.

சஞ்சய் லீலா பன்சாலியால் எடுக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் நாங்கள் மிகவும் மதிக்கும் பத்மாவதியை தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். அவருக்கும் அலாவுதின் கில்ஜிக்கும் காதல் இருந்ததுபோல காட்சிகளும் இடம்பெற்றுள்ளன என்று இந்து குழுக்கள் மற்றும் ராஜபுத்திர சாதியைச் சேர்ந்தவர்களும் குற்றம் சுமத்துகிறார்கள்.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர், இதனை மறுத்துள்ளார்.

பத்மாவதி என்பவர் வரலாற்றில் உண்மையாக வாழ்ந்தவர் இல்லை. அந்த கதாபாத்திரம் ஒரு புனைவு. அந்த புனைவு கவிதை வடிவத்தில் எழுதப்பட்டு இருந்தது.

அதனை எழுதியவர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞரான மாலிக் முகமது ஜயசி.

அந்த கவிதை, அலாவுதீன் கில்ஜியால் கணவன் கொல்லப்பட்ட பிறகு சதி என்று அழைக்கப்படும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த பத்மாவதியின் நல்லொழுக்கத்தை போற்றி புகழ்ந்து அவதி மொழியில் எழுதப்பட்டு இருந்தது.

கைம்பெண்கள் கணவர் இறந்தவுடன், அவர் எரிக்கப்பட்ட அதே சிதையில் தானும் விழுந்து மரணிப்பதுதான் 'சதி'. இந்த வழக்கமானது 700 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபுத்திரர்களால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

போரில் தமது கணவர்கள் தோற்றுவிட்டால், எதிரி படைகளால் தங்கள் மானத்திற்கு எந்த இழுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராஜபுத்திர பெண்கள் இந்த பழக்கத்தை மேற்கொண்டனர். சில ஆண்டுகளுக்குப் பின், பதிபக்தியாக இது பார்க்கப்பட்டது. இந்தியச் சீர்திருத்தவாதிகளின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்த்து, பிரிட்டன் ஆட்சியாளர்கள் இந்த பழக்கத்தை தடை செய்தனர்.

பத்மாவதியை சுற்றிச்சுழலும் இந்த நாட்டார் கதை சர்ச்சைக்குரிய ஒன்று என்று விவரிக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அவர்களின் கருத்து, பத்மாவதி குறித்த அந்த நாட்டார் கதை சதியை புனிதப்படுத்துகிறது.

ராஜபுத்திரர்கள் மத்தியில் இன்றும் பத்மாவதி தெய்வமாக வணங்கப்படுவதைதான் இந்தப் போராட்டங்கள் காட்டுகின்றன.

வலதுசாரி இந்துகுழுக்கள் இந்த படத்தை எதிர்ப்பது ஏன்?

இந்த படத்தில் முஸ்லிம் அரசனான கில்ஜி தன் கனவில், பத்மாவதியுடன் காதல் செய்வதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று வதந்தி பரவி இருக்கிறது. இது பலரை கோபப்படுத்தி உள்ளது. பல அமைப்புகள் படத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். அதில் செல்வாக்கற்ற சாதிய அமைப்பான ராஜபுத்திர கார்னிக் சேனாவும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பு இந்த படத்திற்கு தடை கோருகிறது.

கடந்தவாரம் இந்த அமைப்பு, திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று, படப்பிடிப்புக்கு இடையூறு செய்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில், இதே அமைப்புதான், படத்தின் இயக்குனர் பன்சாலியை அறைந்தது.

இந்த படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்ட திரையரங்குகளை தாக்கியதோடு நில்லாமல், ராமாயணத்தில் சூர்பனகையின் மூக்கு அறுக்கப்பட்டது போல பத்மாவதியாக நடிக்கும் படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்றும் மிரட்டியது.

இந்த அமைப்பு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களான ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் ஆர்ப்பாட்டம் செய்தது.

ராஜபுத்திர சமூகத்தினர் பன்சாலியின் உருவபொம்மையை எரித்தனர். இந்த படத்திற்கு தடை வேண்டும் என்றனர்.

படத்திற்கு எதிராக போராடி வருபவர்கள்.
Reuters
படத்திற்கு எதிராக போராடி வருபவர்கள்.

யாருடைய மனமும் புண்படாதவாரு அந்த படத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்வரை இப்படத்தை வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே.

பா.ஜ.கவின் உள்ளூர் தலைவர் பன்சாலி மற்றும் தீபிகாவின் தலையை வெட்டி வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.

ராஜஸ்தானை சேர்ந்த முன்னாள் அரச வம்சத்தினர், இந்த படத்தின் வெளியீட்டை தடை செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார்கள். அதில் ஒருவரான மகேந்திர சிங், இது ஒரு கலை, வரலாற்று மோசடி என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் வரும் கனவு காட்சியில் பத்மாவதி மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் எல்லோரும் வைக்கும் குற்றச்சாட்டு.

படத்தில் அப்படியான காட்சிகளே இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறார் பன்சாலி.

ஆனால், அவருடைய மறுப்பு செவிடன் காதில் ஊதிய சங்குப்போலதான் இருக்கிறது. தங்கள் ராணியின் புனிதத்தை காக்க விரும்புவார்கள் யாரும் இதை காதில் வாங்கவில்லை.

அதே நேரம், பலர் சமூக ஊடகங்களில் தீபிகாவுக்கும், அந்த படத்தின் இயக்குனர் பன்சாலிக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைக்கு எதிராக தங்கள் அதிர்ச்சியினை பகிர்ந்துள்ளனர்.

வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

வரலாற்றாசிரியர்கள், படத்தின் இயக்குனர் மற்றும் குழுவினருக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்களுக்கு எதிராக தம் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

அலைகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப், பத்மாவதி உண்மையான கதாபாத்திரம் அல்ல, அது கற்பனை பாத்திரம் என்றுள்ளார்.

அதேநேரம் தாராளவாதிகள், படத்தின் முன்னோட்டத்தில் அலாவுதீன் கில்ஜியை இறைச்சி உண்ணும் முரடனாக திரித்துக் காட்டியிருப்பதாக குற்றம்கூறுகின்றனர்.

எழுத்தாளர் தேவ்தத் பட்நாயக், பன்சாலி சதியை புனிதப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

என்ன அடுத்து?

டிசம்பர் 1 வெளியிடப்படுவதாக இருந்த இந்த திரைப்படம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று படத்தை தயாரிக்கும் வியாகாம் 18 ஊடக நிறுவனம் கூறியுள்ளது. பாஜக அரசும், அது ஆளும் மாநிலங்களும் படத்துக்குப் பாதுகாப்பு தரத் தவறியிருப்பதாக நடிகை ஷபானா ஆஸ்மி குற்றம்சாட்டியுள்ளார்.

ட்வின்கில் கண்ணா தனது ட்விட்டர் பதிவில், இந்த படம் பெரும் வெற்றி பெரும் அதுதான் இந்த படத்தை எதிர்ப்பவர்களுக்கு உண்மையான பதிலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Some groups are opposing Padmavati movie saying that it is an insult to queen Padmini.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X