For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பனாமா பேப்பர்ஸ் முதல் ஆஃப்ஷோர் லீக்ஸ் வரை : அறிய வேண்டிய ரகசிய தகவல்கள்

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பும் அதன் பங்குதாரர்களும் இணைந்து ஒன்றாக பனாமா பேப்பர்ஸை ஏப்ரல் 3, 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.

By BBC News தமிழ்
|
ஜெர்மன் செய்திதாளான சூட்டைச்சே சைடூங்
Getty Images
ஜெர்மன் செய்திதாளான சூட்டைச்சே சைடூங்

பாரடைஸ் பேப்பர்ஸ் - இது அண்மையில் கசிந்த ரகசிக கோப்புகளின் மற்றொரு தொகுப்பு. இந்த தொகுப்பில் முக்கியமான கோப்புகள் அனைத்தும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒற்றை சட்ட நிறுவனத்துக்கு உரியவை. இந்த கோப்புகள் அனைத்தும் பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் செலுத்திய வரி குறித்தவை. இது போன்ற ரகசிய கோப்பு கசிவுகளில் இதுதான் சமீபத்தியது

இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் பெருமளவில் தரவுகளை கொண்டு இருக்கிறது. இது அனைத்தையும் படிப்பது, ஆராய்வது மிகவும் கடினம். விஷயம் என்னவென்றால், இது போன்ற ரகசிய கோப்புகள் கசிவது இது முதல் முறை அல்ல.

ஏற்கெனவே, பல முறை வரி செலுத்தியது, வரி ஏய்ப்பு செய்தது குறித்த இது போன்ற தகவல்கள் முன்பே கசிந்திருந்தாலும், இது போன்ற ரகசிய தகவல்கள் அளிப்பவர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை உலகம் எப்படி பார்க்கிறது என்பதையும், அந்த விசாரணைகள் வரி செலுத்துவதை எந்த அளவுக்கு முறைபடுத்தி இருக்கிறது என்பதையும் அளவிடுவது கடினம்.

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெரார்டு ரைல் இந்த தகவல் கசிவு குறித்து இவ்வாறாக சொல்கிறார், "வெளிநாட்டிலிருந்து கசியும் இந்த தகவல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை. ஏனெனில், தகவல்கள் எங்கிருந்து எப்போது யாரால் கசியவிடப்படும் என்பது அதில் சம்பந்தபட்டவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது."

இதற்கு முன்பு, கடந்த நான்கு ஆண்டுகளில் இது போன்று வெளியே கசிந்த ரகசிய தகவல்களின் தொகுப்பு குறித்து காண்போம்.

அளவு முக்கியமென்பதால், நாம் பெரிய அளவில் கசிந்த தகவல்களிலிருந்து தொடங்குவோம்.

முதலில் பனாமா பேப்பர்ஸ்.

பனாமா பேப்பர்ஸ் 2016:

தரவுகளின் அளவை கணக்கிட்டால், பனாமா பேப்பர்ஸ்தான் இதுபோன்று ரகசியமாக கசிவும் தரவுகளுக்கெல்லாம் தந்தை. 2010-ம் ஆண்டு கசிந்த விக்கிலீக்ஸ்தான் இதுவரை கசியவிடப்பட்ட தரவுகளில் பெரியது என்று நாம் நினைத்தால் நம் நினைப்பை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். ஏனெனில் பனாமா பேப்பர்ஸ் அதனைவிட 1500 மடங்கு தரவுகளை கொண்டு இருந்தது.

விக்கிலீக்ஸ் பல்வேறு விதமான தகவல்களை கொண்டு இருந்தது. அதன் கிளைகள் பல்வேறு திசைகளில் சென்றன. ஆனால், பனாமா பேப்பர்ஸ் பொருளாதாரத்துடன் மட்டும் தொடர்புடையதாக இருந்தது.

ஒரு அநாமதேய ரகசிய தகவல் அளிப்பவர், ஜெர்மன் செய்திதாளான சூட்டைச்சே சைடூங்கின் நிருபரை 2015-ம் ஆண்டு தொடர்பு கொண்டு மறைகுறியாக்கப்பட்ட சில தரவுகளை அளித்தார்.

அந்த தரவுகள் அனைத்தும் பனாமா சட்ட நிறுவனமான மோசாக் ஃபோன்சிகாவிலிருந்து எடுக்கப்பட்டவை.

இந்த சட்ட நிறுவனமானது வெளிநாட்டில் இயங்கும் அநாமதேயமான நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பிரச்னை வராமல், அந்த நிறுவனங்களை விற்பனை செய்து தரும்.

இதன் மூலம் அந்த நிறுவனங்களின் வணிக தொடர்புகளில் இந்த சட்ட நிறுவனமானது உதவும்.

ஏறத்தாழ 2.6 டெராபைட் தரவுகள் சூட்டைச்சே சைடூங் செய்திதாளுக்கு தரப்பட்டன.

இதனால் உற்சாகமடைந்த அந்த செய்திதாள், சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்புக்கு (ICIJ) தகவலை தெரிவித்து, அவர்களை உதவிக்கு அழைத்தது. இதன் காரணமாக இந்த தகவல்களை ஆராயும் பணியில் ஏறத்தாழ 100 செய்தி நிறுவனங்கள் பங்கெடுத்தன. அதில் பிபிசி பனோரமாவும் ஒன்று.

ஏறத்தாழ ஓராண்டு அந்த தகவல்களை ஆய்வு செய்தபின், சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பும் அதன் பங்குதாரர்களும் இணைந்து ஒன்றாக பனாமா பேப்பர்ஸை ஏப்ரல் 3, 2016-ம் ஆண்டு வெளியிட்டனர். அதன் தரவுகளும் அடுத்த ஒரு மாதத்தில் இணையத்தில் பதிவேற்றப்பட்டன.

யாருடைய பெயர்கள் எல்லாம் இருந்த?

எங்கிருந்து தொடங்குவது? சில செய்திதாள்கள், எப்படி ரசிய அதிபர் விளாடிமிர் புதினின் தோழர்கள் உலகம் முழுவதும் பணத்தை சுழலவிட்டார்கள் என்பதில் கவனம் செலுத்தின. ஆனால், ரஷ்யர்கள் இது குறித்து அதிகம் கவலை கொள்ளவில்லை.

ஆனால், இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டது ஐஸ்லேண்ட் மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள்தான். இவர்களின் பெயர் பனாமா பேப்பர்ஸில் வந்திருந்தது.

இதன்காரணமாக, ஐஸ்லேண்ட் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய, பாகிஸ்தான் பிரமருக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்காரணமாக அவரது பதவி பறிபோனது.

ஏறத்தாழ 120-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பெரும் பணக்காரர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களின் பணபரிவர்த்தனைகள் இந்த பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது.

யார் இந்த தகவல்களை கசியவிட்டது?

ஜான் டூ. ஆனால், இது உண்மையான பெயர் அல்ல. அமெரிக்கா குற்றப்பிரிவில் இந்த பெயர், அநாமதேயமாக பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும்.

இந்த தகவல்களை அளித்த அந்த நபரின் உண்மையான அடையாளம் இன்னும் தெரியவில்லை.

பனாமா பேப்பர்ஸ் வெளியான ஐந்து மாதங்களுக்கு பின்பு சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு பஹாமாஸ் கார்ப்பரேட் ரிஜிஸ்டரி வெளிப்படுத்திய தகவல்களை பிரசுரித்தது.

தற்காலிக சேமிப்பில் இருந்த இந்த 38 ஜி.பி. அளவுள்ள தரவுகள், பிரதமர்கள், இளவரசர்களின் வெளிநாட்டு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியது.

சுவிஸ் லீக்ஸ் 2015

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பைச் (ICIJ) சார்ந்த, நாற்பத்தைந்து தேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களின் ஒரு நீண்ட புலனாய்வு, பிப்ரவரி 2015-ம் ஆண்டு வெளியே கசிந்து மக்களின் கவனத்துக்கு வந்தது.

இந்த புலனாய்வானது, ஒரு பெரும் வங்கியின் துணை நிறுவனமான, HSBC தனியார் வங்கியின் (சுவிஸ்), பரிவர்த்தனை மீது கவனம் செலுத்தியது. இதன் காரணமாக அந்த வங்கியின் பரிவர்த்தனைகள் வெளியே கசிந்தன.

வெளியே கசிந்த தகவல்கள் அனைத்தும், 2007-ம் ஆண்டு வரை, இந்த சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த ஏறத்தாழ 100,000 தனி நபர்கள் மற்றும் 200 நாடுகளின் சட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய வங்கி கணக்குகளை கொண்டிருந்தன.

மதிப்பிழந்த அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும்,சிக்கல்கள் உண்டாக்க கூடியவர்கள் என ஐ.நா சபையால் பட்டியலிடப்பட்டவர்களுக்கும் இந்த துணை நிறுவனமானது சேவை செய்து இருப்பதாக ICIJ கூறுகிறது.

துணை நிறுவனத்தின் 'கலாசாரம் மற்றும் தரம்' அந்த சமயத்தில் இப்போது இருப்பதைவிட மோசமாக இருந்ததாக HSBC நிறுவனம் ஒப்புக்கொண்டது.

யாருடைய பெயர்கள் எல்லாம் இருந்த?

ஆயுத தரகர்கள், மூன்றாம் உலக நாடுகளின் சர்வாதிகாரிகளின் உதவியாளர்கள், வைர கடத்தல்காரர்கள் போன்றவர்களிடமிருந்து HSBC வங்கி லாபம் பெற்றதாக ICIJ சொல்கிறது.

முன்னாள் எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக், முன்னாள் துனுசியன் அதிபர் பென் அலி மற்றும் சிரிய நாட்டின் தலைவர் பஷர் அல்- ஆசாத் ஆகியோரது அரசுக்கு நெருக்குமாக இருந்தவர்களின் பெயர்களையும் சுவிஸ் பேப்பர்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது.

யார் இந்த தரவுகளை கசியவிட்டது?

ஏர்வே ஃபால்ச்சாணி
Reuters
ஏர்வே ஃபால்ச்சாணி

ஃபிரஞ்ச் - இத்தாலியன் மென்பொறியாளரும் மற்றும் ரகசியமாக தகவல்களை அளிப்பவருமான ஏர்வே ஃபால்ச்சாணிதான் இந்த தரவுகளை கசியவிட்டார். இந்த தகவல்களின் அடிப்படையில்தான் ICIJ தனது விசாரணையை மேற்கொண்டது. பின்பு, ICIJ இதே தகவல்களை வேறொருவர் மூலமாகவும் பெற்றது.

ஏர்வே ஃபால்ச்சாணி 2008-ம் ஆண்டு முதல் HSBC தனியார் வங்கி (சுவிஸ்) குறித்த தகவல்களை ஃபிரஞ்ச் அரசாங்கத்திற்கு அளித்து வருகிறார். ஃபிரஞ்ச் அரசாங்கம், அந்த தகவல்களை சம்பந்தப்பட்ட அரசாங்கங்களுக்கு அளித்து வந்தது.

ஃபால்ச்சாணி சுவிஸ் அரசாங்கத்தால் குற்றம்சாட்டப்பட்டார்.

ஸ்பெயினில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். பின்பு, விடுதலை செய்யப்பட்டார். இப்போது ஃபிரான்ஸில் வசித்து வருகிறார்.

லக்ஸெம்பர்க் லீக்ஸ் 2014

இது லக்ஸ் லீக் என்றும் அழைக்கப்பட்டது. சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பின் (ICIJ) விரிவான மற்றொரு புலனாய்வு இது. இந்த புலனாய்வு தனது கண்டுபிடிப்புகளை நவம்பர் 2014-ம் ஆண்டு வெளியிட்டது.

தொழிற்முறை சேவை நிறுவனமான 'பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ்' எப்படி சர்வதேச நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான சாதகமான வரி விதிப்புகளை 2002 - 2010 காலக்கட்டத்தில் லக்ஸெம்பர்க்கில் பெற உதவி செய்தது என்பதை சுற்றியே ICIJ-ன் விசாரணை இருந்தது.

ICIJ கூறுகிறது பல சர்வதேச நிறுவனங்கள் பணத்தை லக்ஸெம்பர்க் மூலம் அனுப்பியது மூலம் பில்லியன் கணக்கான ரூபாய் பணத்தை சேமித்து இருக்கிறது. அதாவது போலியான லக்ஸெம்பர்க் முகவரியை வைத்து இவர்கள் பண பரிவர்த்தனை செய்து பல பில்லியன் பணத்தை சேமித்து இருக்கிறார்கள்.

சில சமயம் இவர்களின் பண பரிவர்த்தனைகளுக்கான வரி ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்திருக்கிறது.

லக்ஸெம்பர்க்கின் ஒரு முகவரியை 1600 நிறுவனங்கள் பயன்படுத்தி இருப்பதாக இந்த லக்ஸ் லீக் தகவல்கள் கூறுகின்றன.

யாருடைய பெயர்கள் எல்லாம் இருந்த?

பெப்ஸி, IKEA, ஏஐஜி, டோயெச் வங்கி ஆகியவை உட்பட பல நிறுவனங்களின் பெயர்கள் லக்ஸ் லீக்கில் இருந்தன.

வால்ட் டிஸ்னி கம்பெனி மற்றும் ஸ்கைபி ஆகிய நிறுவனங்கள் லக்ஸெம்பர்க் துணை நிறுவனங்கள் மூலம் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டு பல மில்லியன் டாலர்கள் லாபம் அடைந்ததாக இந்த லீக்ஸின் இரண்டாவது பகுதி தெரிவிக்கிறது. ஆனால், இந்த நிறுவனங்கள் தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்தன.

லக்ஸெம்பர்க் தேசம் பல வரி விலக்கு விதிகளை கொண்டுவந்த போது ஜாங் க்லோட் யோன்கர் அந்த தேசத்தின் பிரதமராக இருந்தார். இந்த லக்ஸ் லீக்ஸ் கசிவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அவர் ஐரோப்பிய கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுக்கடங்காத மற்றும் அதிகரிக்கும் அதிகாரத்தை எதிர்க்கும் ஈரோசெப்டிக்ஸ், ஜாங் க்லோட்டுக்கு எதிராக கண்டனத் தீர்மான கோரிக்கையை கோரினர். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் இது குறித்து விசாரித்தது. 2016-ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதற்கும் சமமான வரி விதிப்பு திட்டத்தை முன் வைத்தது. ஆனால், அது இன்னும் நிறைவேறவில்லை.

எய்டுவார் பெர்ரின், ரஃபீல் அலேய் and ஆட்வான் டெல்டூர்ட்
AFP/ Getty Images
எய்டுவார் பெர்ரின், ரஃபீல் அலேய் and ஆட்வான் டெல்டூர்ட்

கசியவிட்டது யார்?

ஃபிரஞ்ச் தேசத்தை சேர்ந்த, 'பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ்'நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ஆட்வான் டெல்டூர்ட், தாம் தான் பொதுநலனில் அக்கறை கொண்டு இந்த தகவல்களை கசியவிட்டதாக கூறினார். அதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு ஊழியரான ரஃபீல் அலேய் இவருக்கு உதவி இருக்கிறார்.

பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் அளித்த புகாருக்கு பின்பு, இந்த இருவர் உட்பட, ஊடகவியலாளரான எய்டுவார் பெர்ரின் மீது லக்ஸெம்பர்க்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முதலில் டெல்டூர்டுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பு பின்பு பரிசீலிக்கப்பட்டது.

டெல்டூர் மற்றும் அலேய் இருவருக்கும் குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டது. ஊடகவியலாளரான எய்டுவார் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆஃப்ஷோர் லீக்ஸ் 2013

இதை பனாமா பேப்பர்ஸுடன் ஒப்பிடும் போது, இது பத்தில் ஒரு மடங்குதான். ஆனால், இது வெளிகொணர்ந்த தகவல்கள் அனைத்தும் பூதாகரமானவை.

இது சர்வதேச வரி ஏய்ப்பை வெளிகொண்டு வந்தது.

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பும் அதன் பங்குதாரர்களும் 15 மாதங்கள் இந்த தரவுகளை ஆய்வு செய்து 2013 ஏப்ரல் மாதம் இந்த தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவந்தனர்.

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் மற்றும் கூக் தீவுகளில் பதுங்கி இருந்த 120,000 நிறுவனங்கள் மற்றும் அறகட்டளைபெயர்களை இந்த ஆஃப்ஷோர் லீக்ஸின் ஏறத்தாழ 2.5 மில்லியன் கோப்புகள் அம்பலப்படுத்தியது.

யாருடைய பெயர்கள் எல்லாம் இருந்த?

வழக்கமான சந்தேகத்துக்குரிய நபர்களின் பெயர்கள்தான் இருந்தன. அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர். இவர்கள் அனைவரும் குறிப்பாக ரஷ்யர்கள், மற்றும் சீனர்கள், அஜெர்பைஜான், கனடா, தாய்லாந்து, மங்கோலியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.

பிலிப்பைன்ஸ் தேசத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஃபர்ரினென்ட் மார்கோஸ் பெயரும் இந்த ஆஃப்ஷோர் லீக்ஸ் 2013-ல் இருந்தது.

யார் இந்த தரவுகளை கசியவிட்டது?

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ICIJ) இந்த தகவல்களை இரண்டு நிதி சேவை நிறுவனங்கள், ஜெர்ஸியில் உள்ள ஒரு தனியார் வங்கி மற்றும் பஹாமாஸ் கார்ப்பரேட் ரிஜிஸ்டரி அளித்தது என்று கூறியது. வேறு எங்கிருந்து இந்த தகவல்களை பெற்றது என்று மேலதிக தகவல்களை ICIJ தரவில்லை.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
The Paradise Papers name was chosen because of the idyllic profiles of many of the offshore jurisdictions whose workings are unveiled, including Bermuda, the HQ of the main company involved, Appleby.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X