சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி
தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இன்றைய நாளிதழ்கள், அவற்றின் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழான தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோன்று அரசு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா ஜனவரி 26-ந் தேதி (நாளை மறுநாள்) கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதலாவது அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ஊர்தி இடம் பெறுகிறது.
2-வது அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளையார்கோவில் கோபுரம் ஆகியவை இடம் பெறுகின்றன.
3-வது அலங்கார ஊர்தியில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கு இழுக்கும் நிகழ்வு, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிப்படுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் இடம் பெறுகிறது.
4-வது அலங்கார ஊர்தியில் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், இரட்டைமலை சீனிவாசன், வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜோசப் சி குமரப்பா ஆகிய தலைவர்களை சித்தரிக்கும் சிலைகள் இடம் பெறுகின்றன.
இதுதவிர மத்திய அரசின் சார்பில் தரைப்படை, கடற்படை, விமானப்படையின் சாதனைகளை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வருகின்றன. போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது தினத்தந்தி நாளிதழ்.
காந்தியை நான் ஏன் கொன்றேன் படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை
காந்தியை நான் ஏன் கொன்றேன்? என்ற திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
காந்தியை நான் ஏன் கொன்றேன்? என்ற திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது.
இதேபோன்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கும் மாநில காங்கிரஸ் சார்பில் காந்தியை நான் ஏன் கொன்றேன்? என்ற திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க உத்தரவிடக் கோரியுள்ளது.
காந்தியின் நினைவுநாளையொட்டி ஜனவரி 30-ஆம் தேதி காந்தியை நான் ஏன் கொன்றேன்? என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதில் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் தனது தரப்பில் உள்ள நியாயத்தை விவரிக்கும் பின்னணியை கொண்ட வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.காந்தியை நான் ஏன் கொன்றேன்? திரைப்படத்தின் காட்சிகாந்தியை கொன்றது குறித்து நாதுராம் கோட்சேவின் விளக்கத்தை சிறப்பு நீதிமன்றம் விவரிப்பது போன்று காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் இந்த படத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன என்கிறது தினமணியின் செய்தி.
இந்தியஅரசு திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆலோசனை
இந்தியப் பொருளாதாரத்தில் சில பிரகாசமான புள்ளிகள் இருந்தாலும் கூட சில கரும்புள்ளிகளும் இருக்கின்றன ஆகையால் மத்திய அரசு செலவுகளை கவனமாக திட்டமிட வேண்டும் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று தி இந்து தமிழ் நாளிதழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
ரகுராம் ராஜன், பொருளாதார நிலவரம் மீது தனது வெளிப்படையான விமர்சனங்களுக்கென்றே அறியப்பட்டவர். இந்நிலையில் அவர் இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலவரம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அதில் அவர் "பொருளாதாரத்தில் K-வடிவ மீட்சி (K-shaped recovery ) என்ற ஒன்று இருக்கிறது. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் அது K-வடிவ மீட்சியை நோக்கிச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த மாதிரியான மீட்சியில், தொழில்நுட்ப துறையும், பெரும் நிறுவனங்களும் லாபகரமாக செயல்படும். அதே வேளையில் சிறு, குறுந் தொழில்கள் கடனில் சிக்கித் தவிக்கும்.
எனது மிகப் பெரிய கவலையே, நடுத்தர வர்க்கத்தினருக்கும், சிறு, குறுந் தொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தல் தரும் வகையில் வகையில் பொருளாதார மீட்சி இருக்கக் கூடாது என்பதே. நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் வாங்கும் சக்தி குறைந்து வருவது கவலைக்குரியது. ஒரு புறம் ஐடி துறை பளிச்சிட்டாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இவையெல்லாம் K-வடிவ மீட்சியாக மாறலாம்.
பொருளாதாரத்தில் மீண்டு வரும் சூழலில் ஒமைக்ரான் தாக்கியுள்ளது மருத்துவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் அளித்தப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக இந்தி தமிழ் திசை செய்தி கூறுகிறது.
சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள்: நஷ்ட ஈடு செலுத்துவோர் பட்டியலில் ரிக்ஷா தொழிலாளி, நடைபாதை வியாபாரிகள், தினசரி கூலிகள்
ஒரு ரிக்ஷாக்காரர், ஒரு டோங்கா ஓட்டுநர், ஒரு பழ வியாபாரி, ஒரு கோழி வியாபாரி, ஒரு பால் வியாபாரி, ஒரு இளைஞன், அவரது தந்தையின் ஆடைக் கடையில் வேலை செய்பவர், பள்ளியை விட்டு வெளியேறிய ஒரு வாலிபர். அன்றாடம் 200 முதல் 250 ரூபாய் வரை கூலி பெறும் எட்டு தினக்கூலி தொழிலாளர்கள் என நஷ்ட ஈடு செலுத்துவோரின் பட்டியல் செல்கிறது. இதில் குறைந்தபட்சமாக 18 வயதுடையவரும், அதிகபட்சமாக மூத்தவருக்கு 70 வயதும் ஆகிறது.
கடந்த சனிக்கிழமை, லக்னெள மாவட்ட நிர்வாகம் உரிய நடைமுறையை பின்பற்றாமல் டிசம்பரில் ஹஸ்ரத்கஞ்சில் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதத்திற்காக 46 பேருக்கு மொத்தம் ரூ.64.37 லட்சம் நஷ்ட ஈடு மீட்பு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் சர்ச்சையானது. இது குறித்து மாவட்ட கூடுதல் ஆட்சியரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசியபோது, தேர்தல் நடப்பதால் இப்போதைக்கு கருத்து வெளியிட முடியாது என்று கூறினார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- உ.பி தேர்தலில் களமிறங்கும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்