For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேதாஜி ஆவணங்களை வெளியிட அரசு முடிவு! - பிரதமர் மோடி

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான நடவடிக்கை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

PM Modi's announcement on Nethaji documents release

பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி நாடுகளின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போரிட்டார். தற்போதைய மியான்மர் நாட்டின் ரங்கூன் நகர் வரை, நேதாஜியின் படைகள் முன்னேறின.

இந்நிலையில், இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் படைகள் தோல்வியடையவே, இந்திய தேசிய ராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, அப்போதைய சோவியத் ஒன்றியத்துக்கு விமானம் மூலம் நேதாஜி தப்பிச் சென்றார். ஆனால், நேதாஜி சென்ற விமானம், தைவானில் கடந்த 1945ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானதாகவும், இதில் அவர் இறந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதை நேதாஜியின் குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களும் நம்ப மறுத்து வருகின்றனர். சோவியத் ஒன்றியத்தால் நேதாஜி சிறைபிடிக்கப்பட்டு, சைபீரியாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம், அந்த ஆவணங்களை வெளியிட்டால், வெளிநாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு மறுத்து வந்தது.

இந்நிலையில், நேதாஜி தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் இருந்த 64 ரகசிய ஆவணங்களை அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த மாதம் 17ஆம் தேதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தைப் பின்பற்றி மத்திய அரசும் தன்னிடம் இருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.

இதையடுத்து, நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலியின் மூலம் பிரதமர் மோடி வழக்கமாக உரையாற்றும் நிகழ்ச்சியான 'மனம் திறந்து...' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் கடந்த மாதம் 20ஆம் தேதி பேசியபோது, நேதாஜி குடும்பத்தினரை டெல்லியில் இந்த மாதம் சந்திக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின்படி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நேதாஜியின் குடும்பத்தினர் 35 பேரை பிரதமர் மோடி புதன்கிழமை சந்தித்தார். அப்போது, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பு, சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

சந்திப்பின்போது, பிரதமர் மோடியிடம், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதேபோல, வெளிநாடுகளிடம் இருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அப்போது அவர்களிடம் பிரதமர் மோடி, நேதாஜி குடும்பத்தினரின் ஆலோசனைகள்தான், தனது எண்ணம், அரசின் திட்டம் என்று தெரிவித்தார். அத்துடன், இதுதொடர்பாக வெளிநாடுகளுக்கு கடிதம் எழுதுவதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டுத் தலைவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றும் உறுதியளித்தார்.

இதுகுறித்து சமூகவலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகளில், "சுபாஷ் பாபுவின் (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்) பிறந்த தினமான 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதியன்று, நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடும் நடவடிக்கை தொடங்கப்படும். நேதாஜி தொடர்பாக வெளி நாடுகளிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படும். இதுதொடர்பாக வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பின்போது வலியுறுத்தவுள்ளேன். ரஷியாவில் வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ள இருக்கும் பயணத்தில் இருந்து, இந்த நடவடிக்கையைத் தொடங்க இருக்கிறேன்.

சுபாஷ் பாபுவின் குடும்பத்தினருடனான சந்திப்பின்போது, என்னை அவர்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக நினைக்கும்படி அவர்களிடம் கூறினேன். அப்போது முக்கியமான பல்வேறு ஆலோசனைகளை என்னிடம் அவர்கள் தெரிவித்தனர். பிரதமரின் இல்லத்துக்கு வந்த நேதாஜியின் குடும்பத்தினரை வரவேற்றதை எனக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவதென்று பிரதமர் மோடி அறிவித்திருப்பதை அவரது குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

English summary
Prime Minister Narendra Modi says that the govt has decided to release the secret documents of Nethaji Subash Chandra Bose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X