For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொன். மாணிக்கவேல் Vs தமிழக காவல்துறை: மோதல் முற்றுகிறது

By BBC News தமிழ்
|

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியான பொன். மாணிக்கவேல் மீது, அவருக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் இன்றும் காவல்துறை தலைவரை சந்தித்துப் புகார் அளித்ததோடு, செய்தியாளர்களை சந்தித்தும் விளக்கமளித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள் காணாமல் போனால் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஜியான பொன்.மாணிக்கவேலை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்திருக்கிறது.

இந்த நிலையில், அவருக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில் 12 பேர் நேற்று காவல்துறை தலைவர் டிஜிபி டி.கே. ராஜேந்திரனைச் சந்தித்து தங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து விடுவிக்கும்படி கோரினர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தும் இதனைத் தெரிவித்தனர். இதற்குச் சிறிது நேரத்தில் காவல்துறை தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவுசெய்து, கைதுநடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொன்.மாணிக்கவேல் வலியுறுத்துவதால் தங்களை விடுவிக்கும்படி காவல்துறை அதிகாரிகள் கோரியிருப்பதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் புதன்கிழமையன்று பிற்பகல் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் இளங்கோ, சுகுமார் உள்ளிட்டோர் காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினர்.

"ஓர் ஆண்டாகவே சுதந்திரமாக புலனாய்வு செய்ய முடியவில்லை. ஒரு அழுத்தத்தோடுதான் இந்தப் பிரிவில் பணிபுரிந்தோம். சிலை கடத்தல் தொடர்பான 333 வழக்குகளிலும் எந்த குற்றவாளியும் கைதுசெய்யப்படவில்லை. சிலைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

15 நாட்களுக்கு முன்பாகத்தான் நன்னிலம் காவல் நிலையத்தில் இருந்து, ராஜா என்ற அதிகாரி ஒரு குற்றவாளியைக் கைதுசெய்து, இரண்டு கோவிலைச் சேர்ந்த மூன்று சிலைகளைக் கண்டுபிடித்திருக்கிறார். வத்தலக்குண்டு வழக்கில் தியாகராஜன் என்ற விசாரணை அதிகாரி ஒரு குற்றவாளியைக் கைதுசெய்து, ஒரு சிலையை கண்டுபிடித்திருக்கிறார்.

இவை தவிர வேறு எந்தச் சிலையும் கண்டுபிடிக்கப்படவில்லை" என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பொன் மாணிக்கவேலுக்கு அடுத்த நிலை அதிகாரியான கூடுதல் எஸ்.பி. இளங்கோ செய்தியாளர்களிடம் கூறினார்.

21.07.2017-ல் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கான அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை அரசு மாற்றக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இதற்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல அதிகாரிகள் அயல் பணி என்ற வகையில் இந்தப் பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.

அந்த வகையில் இந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் 5 கூடுதல் எஸ்.பி.க்கள், 5 டிஎஸ்பிகள், 17 ஆய்வாளர்கள், 27 துணை ஆய்வாளர்கள், 136 காவலர்கள் பணியாற்றிவந்தனர்.

"ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் காவல் துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டதற்கான காரணமே, அந்தந்த ஊரில் காணாமல் போன சிலை குறித்த வழக்குகளை அவர்களே விசாரிப்பதற்காகத்தான். ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு உதவி ஆய்வாளரும் ஆய்வாளரும் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டோம். ஆனால், யாரையுமே அவர் விசாரிக்க அனுமதிக்கவில்லை. கன்னியாகுமரியில் இருந்து வரும் அதிகாரியை தர்மபுரியில் ஒரு வழக்கை விசாரிக்கச் சொல்வார். அவருக்கு சோர்ஸ் இல்லாததாதல் அதை விசாரிக்க முடியாது. புலனாய்வில் எதையுமே சுதந்திரமாக செய்ய விடமாட்டார். குற்றவாளியை ரிமாண்ட் செய்ய எங்களிடம் கொடுப்பார். அவர் யார், எங்கு பிடிக்கப்பட்டார் என்ற விவரங்கள் ஏதும் தரப்படாது" என்று குற்றம்சாட்டினார் இளங்கோ.

சிலை கடத்தல் விசாரணையின்போது, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு காவல்துறை அதிகாரி தங்கள் அருங்காட்சியகங்களில் பல சிலைகள் இருப்பதாகவும் தகுந்த ஆவணங்களைக் காட்டி அவற்றை மீட்கலாம் என்று தெரிவித்த நிலையிலும் கடந்த ஓராண்டில் இதற்கென எந்த முயற்சியுமே எடுக்கப்படவில்லை என்றும் எந்தக் கோவிலில் இருந்து எந்த சிலை காணாமல் போனது என்ற விசாரணை ஏதும் நடக்கவில்லை என்றும், அப்படிச் செய்திருந்தால் பல சிலைகளை மீட்டிருக்கலாம் என்றும் இளங்கோ குற்றம்சாட்டினார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் எஸ்பி சுகுமார், "தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் சிலை வழக்கில் விசாரணை அதிகாரி நான்தான். அதில் போதுமான ஆதாரமில்லாமல் மயிலாடுதுறை இணை ஆணையரைக் கைதுசெய்ய சொன்னார். அவரைக் கைது செய்ததில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒரு ஆண்டாக நான் மருத்துவ விடுப்பில் இருந்தேன். தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள பொன்.மாணிக்கவேல் இதுபோல செய்வார்" என்று குற்றம்சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிறகு, இந்த காவல்துறை அதிகாரிகள் டிஜிபியைச் சந்தித்து புகார் அளிக்கச் சென்றனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், தன் மீது புகார் அளித்தவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதாகவும் அவர்களுக்குப் பின்னால் இருந்து யாரோ செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

தன் மீது புகார் அளித்திருக்கும் 21 அதிகாரிகளில் யாரும் ஒரு முதல் தகவல் அறிக்கையைக்கூட பதிவுசெய்யவில்லையென்றும் ஒரு குற்றவாளியைக்கூட கைதுசெய்யவில்லையென்றும் தெரிவித்தார்.

பொன். மாணிக்கவேல் மீது புகார் அளித்த அதிகாரிகள்
BBC
பொன். மாணிக்கவேல் மீது புகார் அளித்த அதிகாரிகள்

தன் மீது குற்றம்சாட்டிய ஏடிஎஸ்பி சுகுமாரிடம் பந்தநல்லூர் கோவில் வழக்கை கொடுத்ததாகவும் அவர் அந்தப் பணியைவிட்டு ஓடினார் என்றும் இப்படியாக காவல்துறை பணியைவிட்டு ஓடியவருக்கு உயர்நீதிமன்றத்திலேயே கண்காணிப்புப் பிரிவில் பணி அளித்திருப்பது தவறு என்றும் கூறினார்.

"நான் மீட்ட 17 சிலைகளையும் தனியாகவே, அந்தந்த காவல்நிலைய ஆய்வாளர்களின் உதவியுடன்தான் மீட்டேன். இது சத்தியம். 47 குற்றவாளிகளைப் பிடித்திருக்கிறேன். என் குழுவினர் யாரும் இதற்கு உதவவில்லை. எனக்குக் கீழ் பணிபுரிந்த ஆய்வாளர்களைத் துன்புறுத்தியதற்கான எந்த ஆதாரமுமில்லை. எனக்குக் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளைப் பார்த்தே மாதக் கணக்காகிவிட்டது. கூட்டம்போட்டு வெகு நாட்களாகிவிட்டது" என்றார் பொன் மாணிக்கவேல்.

அந்த காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தை வெளியில் சொன்னது தவறு என்றும், தான் சிறப்பு அதிகாரியாக இருப்பதால்தான் செய்தியாளர்களிடம் பேசுவதாகவும் கூறிய பொன்.மாணிக்கவேல், அதிகாரிகள் செயல்படாமல் தடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் இணை ஆணையர் திருமகள் கைதுசெய்யப்பட்டதுதான் இந்த விவகாரம் வெடித்ததற்குக் காரணமா என்று கேட்டதற்கு, மற்றொரு இணை ஆணையர் கவிதாவைக் கைதுசெய்ததும் தமிழக அரசு இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்றியது என்று சுட்டிக்காட்டினார்.

தன் மீது மனு அளித்தவர்களுக்கும் சட்ட அறிவு இல்லை; அதை வாங்கியவர்களுக்கும் சட்ட அறிவுஇல்லை என்றும் தன்னிடமிருந்து விலகிச் சென்ற அதிகாரிகளுக்குப் பதிலாக புதிய அதிகாரிகளை அளிக்க வேண்டுமென உள்துறைச் செயலருக்கு மனு அனுப்பியிருப்பதாகவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

ஹோம் செகரட்டரிக்கு பத்து மெயில் அனுப்பியுள்ளேன். வெளியேறிய அதிகாரிகளுக்கு பதில் அதிகாரிகளைத் தர வேண்டும். மன உளைச்சல் என்று சொல்லும் காவல்துறை அதிகாரி, அடிப்படையில் மிஸ்ஃபிட் மேன் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து வெளியில் பேசிய காவல்துறை அதிகாரிகள் குறித்து விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல்செய்த பொதுநல மனுவை ஏற்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழக காவல்துறையில் பணி ரீதியான பிரச்சனைகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் பொதுவெளியில் பேசுவது குற்றமாகப் பார்க்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் காவல்துறை தலைவர் அலுவலக வாளகத்தின் அருகிலிருந்தே செய்தியாளர்களைச் சந்தித்தனர். மேலும் டிஜிபி அலுவலகமே இது குறித்து செய்திக் குறிப்பையும் வெளியிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
24 police officials from the idol theft wing given a complaint to the Tamilnadu police DGP on IG Pon Manickavel over alleged harassment in duty. In that complaint they are saying, Pon Manickavel insist them to registered cases against some people without any evidence or proof.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X