For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் ப. சிதம்பரம் தவறு செய்துள்ளார்; கோர்ட்டில் சிபிஐ வாதம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் 2006-இல் வாங்குவதற்கு அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் அளித்த அனுமதி "தவறான நடவடிக்கை' என்று டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ கடந்த மாதம் 29-ந் தேதி சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான வாதத்தை வரும் அக்டோபர் 13-ந் தேதி தொடரும்படி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.

Probing former Finance Minister P Chidambaram's role in Aircel-Maxis deal: CBI to court

மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி. அனந்தகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சௌத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட் ஹோல்டிங், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் மீது சிபிஐ கடந்த மாதம் 29-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிகை சொல்வது என்ன?

அதன் மீது கடந்த 11-ஆம் தேதி நடந்த விசாரணையின்போது ஏர்செல் நிறுவனப் பங்குகளை விற்க அதன் நிறுவனர் சிவசங்கரனுக்கு 2007-இல் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்குதல் கொடுத்ததாகவும், அந்த பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியவுடன் அந்நிறுவனத்துக்கு பல்வேறு தொலைத்தொடர்பு வட்டங்களில் சேவை வழங்க அனுமதி அளித்ததாகவும் சிபிஐ வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

ரூ3,500 கோடி முதலீடு

மேலும், இந்த பேரம் கைகூடியதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம், தனது துணை நிறுவனங்கள் மூலம் ரூ3,500 கோடி முதலீடு செய்ததாகவும் சிபிஐ வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

மேக்சிஸ் அனுமதி எப்படி?

அப்போது ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்குவதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் எஃப்ஐபிபி (அன்னிய நேரடி முதலீட்டு வாரியம்) அளித்த அனுமதி தொடர்பாக சிபிஐ வழக்கறிஞர் கே.கே. கோயலிடம் சிறப்பு நீதிபதி சைனி சில கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு கோயல் அளித்த பதில்:

தன்னிச்சையாக அனுமதி

இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் செய்யும் ரூ.600 கோடி அளவிலான முதலீடுகளுக்கு மட்டுமே எஃப்ஐபிபி அனுமதி அளிக்க முடியும். அதற்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைதான் அனுமதி வழங்க முடியும். ஆனால், விதிகளை மீறி மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன், சில துணை நிறுவனங்கள் மூலம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த செயலை எஃப்ஐபிபி கண்டுபிடிக்கவும் இல்லை; அது பற்றி விசாரிக்கவும் இல்லை. மாறாக, அந்த நிறுவனங்களின் முதலீடுகளை எஃப்ஐபிபி தன்னிச்சையாக அனுமதி அளிக்கப் பரிந்துரை செய்துள்ளது.

சிதம்பரத்தின் தவறு குறித்து விசாரணை

இது தொடர்பான கோப்பு அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்ட போது, "அமைச்சர்' என்ற முறையில் அதில் இடம் பெற்றுள்ள விவரங்களை சரிபார்த்த பிறகே அவர் அனுமதி அளித்திருக்க வேண்டும். "அமைச்சருக்கான அதிகாரம்' இதைத்தான் தெளிவுபடுத்துகிறது. ஆனால், தனது பணியை சரிவர மேற்கொள்ளாமல் சிதம்பரம் தவறினாரா என்பது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே, ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் விற்பனை விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

இவ்வாறு கோயல் வாதிட்டார்.

ஒத்திவைப்பு

அவரது வாதத்தைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி சைனி, குற்றப்பத்திரிகை மீதான வாதத்தை வரும் அக்டோபர் 13-ந் தேதி தொடரும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

English summary
The CBI on Monday told the special 2G court hearing the Aircel-Maxis case that the foreign investment promotion board's approval in the deal was a "mistake". The agency said it was investigating how former finance minister P Chidambaram Chidambaram had cleared the nearly Rs3,500-crore deal in 2006 as he was competent to give approval of up to Rs600 crore only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X