• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாஜகவை கடுமையாக உறுத்தி வந்த ராஜ்யசபா டிவிக்கு.. விரைவில் மூடு விழா!

By Staff
|

-ஆர். மணி

தரமான, விஷய ஞானம் நிறைந்த விவாதங்களை இந்தியர்கள் அனைவருக்கும் வழங்கி வந்த ராஜ்ய சபா டிவி அநேகமாக மூடு விழாவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

விஷயம் இதுதான் ... சென்னையிலிருந்து வெளிவரும் ''தி ஹிந்து'' ஆங்கில நாளிதழ் ராஜ்ய சபா டிவி யில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட விருப்பதாகவும், இதற்கான முதல் அறிகுறியாக அதனுடைய தலைமை அதிகாரியாகவும், ஆசிரியராகவும் இருந்த குர்ப்ரீத் சிங் சப்பாலின் ராஜினாமா பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

ராஜ்ய சபா டிவி 2011 ம் ஆண்டு அப்போதைய குடியரசு துணை தலைவரும், ராஜ்ய சபா வின் தலைவராகவும் இருந்த ஹமீத் அன்சாரியால் துவக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் செய்திகள் மட்டுமின்றி, தரமான விவாதங்களும் நடத்தப்பட்டு வந்தன. சமகால அரசியல், (current affairs) பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில் விருப்பு, வெறுப்பின்றி எல்லா தரப்பினரின் கருத்துக்களும் இடம் பெற்றன. டில்லி மற்றும் மும்பையிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் சுமார் அரை டஜன் தனியார் ஆங்கில மற்றும் ஹிந்தி செய்தி சேனல்களின் தரத்தை விட, அதிகமான தரங் கொண்டதாக ராஜ்ய சபா டிவி யில் சமகால அரசியல் மற்றும் அனைத்து முக்கியமான துறைகள் சார்ந்த விவாதங்களும் நடத்தப்பட்டன.

அரசியல் பாகுபாடு இல்லை

அரசியல் பாகுபாடு இல்லை

"இதில் எந்த பாகுபாடும் கிடையாது. விவாதங்களில் காங்கிரஸ் பிரதிநிதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவும் ஆர்எஸ்எஸ் பிரமுகருக்கும் கொடுக்கப்படும். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 2013 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று நடந்த விவாதம். அதுவும் நேரடி ஒளிபரப்பு. அதில் ஹைதராபாத்தில் வசித்து வரும் தலித் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் காஞ்சன் இலையா காந்திஜிக்கு எதிராக பல குற்றச் சாட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்தார். அவருக்கு அந்த விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகர் திக் விஜய் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் தங்களுடைய பதில்களை முன் வைத்தனர். ‘காந்திஜி அடிப்படையிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்று நான் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகிறேன்' என்று காஞ்சன் இலையா, அதுவும் காந்தி ஜெயந்தி அன்று, மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு தொலைக் காட்சியில், அதனுடைய நேரடி ஒளிபரப்பில் கூறியது எந்தளவுக்கு கருத்துரிமைக்கு ராஜ்ய சபா டிவியில் இடங் கொடுக்கப்பட்டது என்பதற்கு சரியான எடுத்துக் காட்டு'' என்று அடிக்கடி கூறுவார் காலஞ்சென்ற பத்திரிகையாளர் கிரீஷ் நிகம்.

வெங்கையா நாயுடு கட்டுப்பாட்டில்

வெங்கையா நாயுடு கட்டுப்பாட்டில்

ராஜ்ய சபா டிவி என்பது குடியரசு துணை தலைவரின் நேரடி கட்டுப் பாட்டில் இயங்கும் டிவி யாகும். தற்போதய குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு சமீபத்தில் ராஜ்ய சபா தலைமையகத்தின் மூத்த நிருவாகிகள் கூட்டத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார்; ‘'எதற்காக ராஜ்ய சபா டிவியில் செய்திகள் மற்றும் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே பல தனியார் தொலைக் காட்சி அதிபர்கள் இந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றனர். இதற்காக ஏராளமான பணத்தை அரசு செலவழித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இது தேவையற்ற ஒன்று'' என்று பேசியிருக்கிறார். ராஜ்ய சபா நடக்கும் போது அதில் நிகழும் விவாதங்களை மட்டும் இனிமேல் ராஜ்ய சபா டிவி காட்டினால் போதும்'' என்று வெங்கய்யா நாயுடு பேசியிருக்கிறார். இது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை தெளிவு படுத்தி விட்டது'' என்று கூறுகிறார் ராஜ்ய சபா டிவியில் செய்தியாளராக தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவர்.

ராஜ்யசபா டிவிக்கு புதிய தலைவர்

ராஜ்யசபா டிவிக்கு புதிய தலைவர்

ராஜ்ய சபா டிவி யின் புதிய தலைமை அதிகாரியாக பிரசார் பாரதியின் தலைவர் சூர்ய பிரகாஷ் நியமிக்கப் பட்டிருக்கிறார். ராஜ்ய டிவி க்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஒரு குழு நியமிக்கப் படும், அந்த குழுவின் தலைவராக சூர்ய பிரகாஷ் இருப்பார் என்று அதிகார பூர்வமாக ராஜ்ய சபா வின் தலைமை செயலகம் அறிவித்து விட்டது. ராஜ்ய சபா டிவி முழுக்க, முழுக்க ராஜ்ய சபா தலைமை செயலகத்தின் கீழ் (Rajya Sabha secretariat) செயற்படும் ஒரு அமைப்பாகும். ஆகவே குடியரசு துணை தலைவரும், ராஜ்ய சபா வின் தலைவருமாக இருப்பவர்தான் இதனது தலைமை அதிகாரி என்றே நாம் கூறலாம். அதனால்தான் வெங்கய்யா நாயுடுவே நேரில் இந்த மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறார். ஏராளமான பணம் தேவையின்றி ராஜ்ய சபா டிவிக்காக ஏன் செலவிடப்பட வேண்டும் என்பதுதான் வெங்கய்யா நாயுடு சொல்லும் காரணமாகும். ‘'ராஜ்ய சபா டிவி ஆரம்பத்தில் டில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் இருந்து தான் செயற்பட்டு வந்தது. பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டில்லி டல்கோடோரா மைதானத்தின் அருகில் உள்ள டில்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஒரு இடத்திலிருந்து இயங்க ஆரம்பித்தது. இதற்காக டில்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு மாதந் தோறும் 2 கோடி ரூபாய்களை வாடகையாக ராஜ்ய சபா தலைமயகம் கொடுத்து கொண்டிருக்கிறது'' என்கிறார் ராஜ்ய சபா டிவியில் பணியாற்றும் ஒருவர்.

எந்த இந்தி சேனலும் செய்யாத செயல்

எந்த இந்தி சேனலும் செய்யாத செயல்

2016 ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது ராஜ்ய சபா விலிருந்து ஒரு செய்தியாளர் மற்றும் அவரது கேமிராமேன் தமிழகம் வந்திருந்தனர். அவர்ளுகடன் பணியாற்றும் வாய்ப்பு இந்தக் கட்டுரையாளருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த செய்தியாளர் சொன்ன தகவல் சுவாரஸ்யமானது. அவர் சொன்னார்; ‘'இந்தியா வில் வேறெந்த ஆங்கில தொலைக் காட்சி சேனல்களும் செய்யாத காரியங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கும். இதில் முக்கியமாக இந்தியாவின் மூலை,முடுக்கெல்லாம் சென்று நாங்கள் செய்திகளை சேகரிக்கிறோம். மற்ற தனியார் முன்னணி ஆங்கில மற்றும் ஹிந்தி சேனல்கள் செய்யாத பல காரியங்களை நாங்கள் செய்திருக்கிறோம். இதன் மூலம் மக்களின், மற்ற தொலைக் காட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட இந்திய மக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். குறிப்பாக மணிப்பூர் விஷயத்தில் சொல்லலாம்.

மணிப்பூரின் மூலை முடுக்கெல்லாம்

மணிப்பூரின் மூலை முடுக்கெல்லாம்

மணிப்பூர் தேர்தல்கள் கடந்தாண்டு நடந்த போது நான் ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்தேன். நானும், என்னுடைய கேமிரா மேனும் மணிப்பூரின் மூலை, முடுக்கெல்லாம் சென்று, இதுவரையில் எந்த இந்திய பத்திரிகையாளனும் செய்யாத வற்றை நாங்கள் செய்தோம். அதேபோல ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் மூலை, முடுக்கெல்லாம் சென்று செய்திகளை சேகரித்தோம். மணிப்பூர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் விவகாரங்களில் செய்தி சேகரிக்க செல்லும் போது எல்லா தரப்பு மக்களின் குரல்களுக்கும், தனி நாடு கோருபவர்களின் கருத்துக்களை தவிர, ஆயுதந் தாங்கிய கும்பல்களின் கருத்துக்களை தவிர, மற்ற எல்லா தரப்பு மக்களின், அரசியல் கட்சிகளின், இந்த இரண்டு மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பல தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி நபர்களின் கருத்துக்களையும் நாங்கள் ராஜ்ய டிவி யில் ஒளிபரப்பினோம்". இனிமேல் அவை எல்லாம் கடந்த காலத்தின் கரிய நிழலாய் போய் விடும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரிகிறது'' என்று நெகிழ்ச்சியுடன் இந்த கட்டுரையாளரிடம் கூறினார் அந்த செய்தியாளர்.

மோடி மட்டுமல்ல, மன்மோகன் காலத்திலும்

மோடி மட்டுமல்ல, மன்மோகன் காலத்திலும்

மோடி அரசுடன் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மன்மோஹன் சிங் கின் ஆட்சிக் காலத்திலும் அன்றைய மத்திய அரசுக்கு எதிராக பல விவாதங்கள் ராஜ்ய சபா டிவியில் நடத்தப்பட்டன. குறிப்பாக 2010 - 2011 ம் ஆண்டுகளில் 2ஜி ஊழல் வழக்கு பற்றி எறிந்த போது, பல தனியார் தொலைக் காட்சிகளிலும் கூட இடம் பெறாத விவாதங்கள் ராஜ்ய சபா டிவியில் நடத்தப்பட்டன. அவை பொருள் நிறைந்த, விவரம் அறிந்தவர்கள் கலந்து கொண்ட விவாதங்கள். ஒரு கட்டத்தில் இது அன்றைய மன்மோஹன் சிங் அரசுக்கும், குடியரசு துணை தலைவருக்கும் இடையிலான மோதலாக மாறத் துவங்கியது. ஆனாலும் ஒரு போதும் ராஜ்ய சபா டிவி தன்னுடைய தொழில் முறை தர்மத்தை, அதாவது ஆங்கிலத்தில் சொன்னால், "Professional Ethics" விட்டுக் கொடுக்கவே இல்லை.

இழுத்து மூடுவதற்கான முதல் கட்ட வேலைகள்

இழுத்து மூடுவதற்கான முதல் கட்ட வேலைகள்

மோடி அரசு வந்த பின்னர் ஹமீத் அன்சாரி மீதான பாஜக அரசின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனால் மோடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் இந்திய அரசியல் சாசனம் குடியரசு துணைத் தலைவருக்கு வழங்கியிருக்கும் அதிகாரங்கள்தான். ராஜ்ய சபா டிவியில் 67 ஊழியர்கள் முழு நேர பணியாளர்கள். 487 நபர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இனிமேல் ராஜ்ய சபாவில் நடக்கும் விவாதங்களை தவிர வேறெந்த நிகழ்ச்சிகளையும் ராஜ்ய சபா டிவி ஒளிபரப்பு செய்யாது என்று சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தெரிந்து விட்டது. குறிப்பாக எதிர்கட்சிகளை சார்ந்தவர்களுக்கு இது இழப்பாகவே கருதப்படுகிறது. ராஜ்ய சபா டிவி யை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கான முதல் கட்ட வேலையாகவும் இது விவரம் அறிந்தவர்களால், குறிப்பாக, மோடியை நன்கு அறிந்துவர்களால் பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sources say that the Centre is planning to close Rajyasabha TV soon.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more