ரியல் எஸ்டேட் 'மாஃபியாக்கள்' தான் ஆக்கிரமிப்புக்கு காரணம்... நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை சொல்லுது!
சென்னை : சென்னை நகரம் தத்தளிப்பதற்கு ஆக்கிரமிப்புகளே காரணம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆக்கிரமிப்புகளை எவ்வளவு முயற்சி செய்தும் அகற்ற முடியவில்லை என்று அரசும் ஒப்பு கொண்டுள்ளது. ஆனால் ஆக்கிரமிப்பு என்று தெரிந்திருந்தும் அந்த இடத்திற்கான பத்திரப்பதிவு செய்தது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
2015 வெள்ளத்தின் போது பாராளுமன்ற நிலைக்குழுவால் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு 2016 ஆகஸ்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆக்கிரமிப்புகள் என்பது ரியல் எஸ்டேட் மாஃபியாக்களால் செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு என்பது குடிசைகள் ஆக்கிரமிப்பு என்பது மட்டுமல்லாமல் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என்று பல விதமாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று சென்னை வாழத் தகுதியற்ற நகரமாக மாறி வருவதற்கு மற்றொரு காரணம் முறையான நகரமயமாக்கல் கொள்கை இல்லை. சென்னை நகரில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் எதுவும் முறையான திட்டமிடலோடு இல்லை என்பது நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை. கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு திட்டமிடல் செய்யப்படுகின்றன.

வடிகால்கள் இல்லை
ஆனால் நம்மால் அவற்றை சரியாகப் பாதுகாக்க முடியவில்லை. புதிதாக எந்த நீர்நிலைகளையும் ஏற்படுத்த முடியாவிட்டாலும், ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளை பாதுகாக்காமல் விட்டதன் விளைவையே நாம் தற்போது அனுபவித்து வருகிறோம். காலம்காலமாக உள்ள நீர்நிலைகளை முறையாக சுத்தப்படுத்தி வடிகால்களை அமைத்திருந்தாலே சென்னைப் புறநகர் தத்தளிக்கும் நிலையை பருவமழையின் தொடக்கத்திலேயே நாம் எட்டியிருக்க மாட்டோம்.

துறைகள் ஒன்றிணைந்து செயல்படவில்லை
நகரமயமாக்கல் என்று சொல்லும் போது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி, மின்சாரத்துறை, பெருநகர குடிநீர் வாரியம் உள்ளிட் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாமல் தனித்தனியே செயல்படுவதும் பிரச்னையைத் தான் ஏற்படுத்தும். ஒரு வீடு கட்டுவதற்காக அனுமதி வாங்கும் முன்னர், அதனை சுற்றி இருக்கும் நீர்நிலைகளின் நிலை என்ன, வடிகால்வாய் எங்கு உள்ளன என்பதை ஆராய்ந்து அனுமதி அளிக்க வேண்டும். இந்தத் துறைகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயல்படாததும் ஆக்கிரமிப்பிற்கான மற்றொரு காரணியாக பார்க்கப்படுகிறது.

சர்வே எண் ஏன் கொடுத்தார்கள்
கால்வாய்க்குள் வீடு கட்ட முயற்சித்தால், அந்த இடத்திற்கு சர்வே எண் வழங்காமல் தடுப்பதற்கு சர்வேயர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலருக்கு உள்ளது. ஆனால் அவர்கள் ஏன் இது போன்ற ஆக்கிரமிப்புகளுக்கு தொடக்கத்திலேயே அனுமதி மறுக்காமல் ஆக்கிரமிப்புக்கு துணை போனார்கள் என்றும் கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.

போங்கு காரணங்கள்
மழை பாதிப்புகளால் மக்கள் கடும்கோபத்தில் இருக்கும் நிலையில் இது எதிர்பார்க்காத அளவில் பெய்த மழை என்று அதிகாரிகள் தங்களது செயல்திறனற்ற நடவடிக்கைக்கு காரணம் சொல்லி தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் பருவநிலை மாற்றத்தின் தாக்கமாக இது போன்ற மழை மற்றும் கடுமையான வெப்பம் இருக்கும் என்பதே ஏற்கனவே தெரிந்த ஒன்று தான்.

எதிர்காலத்திலாவது செய்வார்களா?
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஓடாமல் ஏன் தேங்குகிறது, அப்படியானால் அந்தப் பகுதியில் இருந்த கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தான் அதன் அர்த்தம். இனி எதிர்காலத்திலாவது பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப நாமும் மாறுவதோடு, மழை நீர் வடிகால் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டியதே உடனடித் தேவையாக உள்ளது.