For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்மரக் கடத்தல்.. வாழ்வாங்கு வாழும் மோகன் + ''கரகாட்டம்'' மோகனாம்பாள்களும்...!

Google Oneindia Tamil News

பெங்களூரு: செம்மரக் கடத்தல்தான் இன்று ஆந்திரா, தமிழகத்துக்கு இடையே இன்று பெரும் புயலைக் கிளப்பியுள்ள விவகாரமாக திகழ்கிறது. 20 தமிழகத் தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் ஒருபக்கம் உலவி வரும் நிலையில் இந்த கடத்தல் தொழிலில் மிகப் பெரிய பணமுதலைகளின் ஈடுபாடு குறித்து பெரிதாக யாரும் கவனிக்காமல் உள்ளனர்.

20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் இன்று தமிழகம், மற்றும் ஆந்திரா இடையே மிகப் பெரிய மோதலாக வெடித்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய மோதலை ஏற்படுத்தியுள்ளது.

எப்பாடுபட்டாவது செம்மரக் கடத்தலைத் தடுப்போம் என்று ஆந்திரா கூறி வருகிறது. அதேசமயம், இந்த செம்மரக் கடத்தலை ஒழிக்க வேண்டுமானால், முதலில் தனது மாநிலத்தில் இந்த செம்மரக் கடத்தலை நடத்தி வரும் பெரும் பெரும் திமிங்கலங்களை அது கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்பதையும் அந்த மாநில அரசு மறந்து விடக் கூடாது.

 மோகனாம்பாள் விவகாரம்:

மோகனாம்பாள் விவகாரம்:

கரகாட்டக்கார மோகனாம்பாள்தான் செம்மரக் கடத்தல் விவகாரத்தின் விஸ்வரூபத்திற்கு பிள்ளையார் சுழி போல அமைந்தது. 2014ம் ஆண்டு ஜூன் மாதம் மோகனாம்பாள் என்ற கரகாட்டக் கலைஞர் வேலூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவர் மீது செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் இதன் மூலம் கோடி கோடியாக சம்பாதித்தார் என்ற தகவலும் வெளியானது.

60 வயதான மோகனாம்பாளின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ. 4.4. கோடி பணமும், 72 பவுன் தங்க நகைகளும் சிக்கின. இதன் மூலம் செம்மரக் கடத்தல் பிசினஸ் எந்த அளவுக்கு மிகப் பெரிய பண பலம் வாய்ந்ததாக உள்ளது என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர்தான் செம்மரக் கடத்தலில் மிகப் பெரிய பிரபலங்கள் தலையிட்டிருப்பது முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்தது. இதன் பிறகுதான் செம்மரக் கடத்தல் தொடர்பான பரபரப்பும் கூடியது. பல கோடி ரூபாய் பணம் இதில் புழங்குவதும் தெரிய வந்தது.

செம்மரக் கடத்தலில் மோகனாம்பாள், அவரது சகோதரி, சகோதரி மகன் சரவணன் உள்ளிட்டோர் ஈடுபட்டிருப்பதை தமிழக போலீஸார் கண்டுபிடித்துக் கொண்டு வந்தனர்.

 அரசியல்வாதிகளின் ஏஜென்ட்டா மோகனாம்பாள்?

அரசியல்வாதிகளின் ஏஜென்ட்டா மோகனாம்பாள்?

மோகனாம்பாள் குறித்த பின்னணியை விசாரிக்க ஆரம்பித்த போலீஸாருக்கு அவர் பல அரசியல்வாதிகளுக்கு ஏஜென்ட் போல செயல்பட்டதைக் கண்டுபிடித்தனர். மேலும் மோகனாம்பாள் போன்றோர் இவ்வளவு பெரிய அளவில் செயல்படுவதாக இருந்தால் நிச்சயம் அரசியல் பின்புலம் இல்லாமல் இருக்காது என்பதும் போலீஸாரின் கூற்றாகும்.

விசாரணையின்போது மோகனாம்பாளுக்கும், அவரது சகோதரி மகன் சரவணனுக்கும் துபாய் வரை தொடர்புகள் இருப்பது தெரிய வந்து போலீஸார் அதிர்ந்தனர். ஆந்திரக் காடுகளிலிருந்து வெட்டிக் கொண்டு வரப்படும் செம்மரங்களை சென்னைக்குக் கொண்டு வந்து அங்கிருந்து துபாய்க்கு அனுப்பி வைத்து வந்துள்ளனர் மோகனாம்பாள் அன் கோவினர்.

துபாயில் உள்ள மாபியா கும்பல் மூலம் மோகனாம்பாள் கும்பலுக்கு பணம் வந்து விடுமாம். இந்தப் பணத்தை பின்னர் பல்வேறு அரசியல்வாதிகளுக்கும் பிரித்து அனுப்பி விடுவார்களாம்.

 பெரும் பணக்கார புரோக்கர்கள்:

பெரும் பணக்கார புரோக்கர்கள்:

சீனாவில் செம்மரத்துக்கு நல்ல கிராக்கி உள்ளது. பர்னிச்சர் தயாரிப்புக்கு மட்டுமல்லாமல் மருத்துவ பயன்பாட்டுக்கும் இதை அவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் ஜப்பான், மியான்மரிலும் இதற்கு மார்க்கெட் உள்ளது. ஒரு டன் செம்மரக் கட்டை ரூ. 10 முதல் 20 லட்சம் வரை விற்பனையாகிறது.

மோகனாம்பாளுக்கு கரகாட்டத்தை விட செம்மரக் கடத்தல்தான் கோடி கோடியாக பணத்தைக் கொண்டு வந்து கொட்டியுள்ளது. மோகனாம்பாள் போன்ற புரோக்கர்கள், வாரத்திற்கு ரூ. 70,000 முதல் 90,000 வரை சம்பாதித்து வருகிறார்களாம். மரம் வெட்டும் தொழிலாளர்களுக்கோ ஒரு நாளைக்கு ரூ. 1000 வரை சம்பாதித்துள்ளனர்.

துபாயில் உள்ள முக்கியக் கும்பல்களுடன் சரவணனுக்கு நேரடியான தொடர்புகள் உள்ளது என்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

செம்மரக் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து 28 வகையான சொத்துக்களை வாங்கிக் குவித்தார் மோகனாம்பாள் என்பது போலீஸாரின் தகவலாகும்.

 அரசியல் தொடர்புகள்:

அரசியல் தொடர்புகள்:

செம்மரக் கடத்தலில் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து தமிழகத்தி்ல் முனுமுனுப்புகள் இருந்த போதிலும், அரசியல்வாதிகள் தொடர்பு இல்லாமல் இதை யாரும் செய்ய முடியாது என்பது போலீஸாரின் வாதமாகும். மேலும் இலங்கையிலிருந்து கோடியக்கரைக்கு வந்த ஆயுத விவகாரத்திலும் கூட அரசியல்வாதிகள் பலருக்குத் தொடர்பு இரு்ப்பதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.

தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் இந்த அரசியல்வாதிகள், செம்மரக் கடத்தல் பத்திரமாக, பாதுகாப்பாக, இடையூறு இல்லாமல் நடைபெற கவனம் செலுத்துகின்றனர். இதில் பல வனத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு. இவர்கள் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்து செம்மரக் கடத்தலைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.

ஆந்திராவிலிருந்து வெட்டப்பட்டு கொண்டு வரப்படும் செம்மரங்களை விமானம் மூலமும், படகுகள் மூலமும், கப்பல் மூலமும் கடத்தி வருகின்றனர். சமீப காலமாக விமானம் மூலம் அனுப்புவதை குறைத்துள்ளனர்.

 பாவம், ஏழைத் தொழிலாளர்கள்:

பாவம், ஏழைத் தொழிலாளர்கள்:

இதில் என்ன கொடுமை என்றால் இந்த புரோக்கர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் யாரிடமும் சிக்குவதில்லை. சிக்குவதும், மாட்டிக் கொள்வதும் இந்த அப்பாவி தொழிலாளர்கள்தான். சட்டத்தின் பிடியில் சிக்குவதும் இவர்கள்தான். கடைசியில் துப்பாக்கி குண்டுகளுக்கும் இவர்களே இரையாகியுள்ளனர்.

இந்தத் தொழிலாளர்களுக்கும் சரி, இவர்களின் குடும்பத்தினருக்கும் சரி, இவர்களின் தொழில் குறித்து தெரிவதில்லை. கடத்தல்காரர்களின் ஆசை வார்த்தைகளுக்கு இக்காகி, புரோக்கர்கள் சொல்வதைக் கேட்டு செயல்பட்டு பரிதாபமாக பலியாகிறார்கள். ஒரு நாளைக்கு ரூ. 800 முதல் 1000 வரை கூலிக்கு ஆசைப்பட்டு இப்படி பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

ஏழைகளிலும் பரம ஏழைகளாக உள்ளவர்களைத்தான் மரம் வெட்டுவதற்கு புரோக்கர்கள் குறி வைத்து அழைத்து வருகிறார்கள். அதிலும் தமிழகத்தில் மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏழைகளைத்தான் இந்த புரோக்கர்கள் குறி வைத்து அழைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படியோ ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு ஏவி வந்தவர்கள் அத்தனை பேரும் உத்தமர்களாகி விட்டனர்.. இடையில் அகப்பட்டு அழிந்து போவது இந்த பரிதாபத்துக்குரிய ஏழைகள்தான்.

English summary
The issue of red sandalwood smuggling is a hot topic today. While there are claims and counter claims over the authenticity of the operation in which the Andhra Pradesh police gunned down 20 persons, the other issue is how this racket of red sandalwood smuggling has the involvement of the high and mighty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X