
100 வயதாகும் மோடியின் தாயார் பெயரில் சாலை! காந்தி நகர் மாநகராட்சி அதிரடி! குஜராத்தில் நெகிழ்ச்சி
காந்தி நகர்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் சாலை ஒன்றுக்குப் பிரதமர் மோடியின் தாயார் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் 14ஆவது பிரதமராகக் கடந்த 2014ஆம் ஆண்டு பதவி ஏற்றவர் நரேந்திர மோடி. பல ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களவையில் ஒரு கட்சியைத் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க வைத்த பெருமை மோடியையே சேரும்.

உலக அளவில் இருக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவரது தாயார் ஹிராபா இப்போது குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார்.
99 வயதாகும் ஹிராபாவுக்கு வரும் சனிக்கிழமை (ஜூன் 18) தனது 100ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்தச் சூழலில் குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள சாலை ஒன்றுக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பெயரை வைக்க அம்மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பெயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யவும் வருங்கால சந்ததியினர் அவரிடம் இருந்து பாடம் கற்கும் வகையிலும் அவரது பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காந்திநகர் மேயர் ஹிதேஷ் மக்வானா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவுக்கு 100 வயதாகிறது, மக்களின் கோரிக்கை மற்றும் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இங்குள்ள சாலைக்கு ஹிராபா பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலை "புஜ்யா ஹிராபா மார்க்" என்று அழைக்கப்படும் வருங்கால சந்ததியினர் ஹிராபாவின் துறவு, தவம், சேவை குறித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.