For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேடிஎம்முக்கு எதிராகக் களமிறங்குகிறது ஆர்எஸ்எஸ்?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இந்தியாவின் முன்னணி செல்ஃபோன்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் நிறுவனமான பேடிஎம் (Paytm) க்கு எதிராக ஆர்எஸ்எஸ் போர் கொடி தூக்கப் போவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படத் துவங்கியிருக்கின்றன.

ஆர்எஸ்எஸின் பொருளாதார விவகாரங்களுக்கான சிந்தனை வடிவாக்கம் மற்றும் செயலாக்க பிரிவான ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச் (எஸ்ஜேஎம்) பேடைம் நிறுவனத்தில் சீனாவின் முன்னணி நிறுவனமான அலிபாபா செய்திருக்கும் முதலீடுகள் பற்றி ஆராயப் போவதாக தெரிவித்திருக்கிறது.

RSS strongly objects PAYTM?

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் சீன பொருட்கள் மற்றும் சீன முதலீடுகளுக்கு எதிராக எஸ்ஜேஎம் தொடரச்சியாக போராடி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற எஸ்ஜேஎம் மின் முக்கிய கூட்டத்தில் இந்த அமைப்பின் நிபுனர்கள் குழு பேடைம் மில் அலிபாபா வின் முதலீடுகள் குறித்து நீண்ட நேரம் விவாதித்துள்ளது.

'சமீபத்தில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி பேடைம் மில் சீன முதலீடுகள் அதிகரித்துள்ளதாக நாங்கள் கேள்விப் படுகிறோம். இது தொடர்பாக பல்வேறு ஊடக செய்திகளை நாங்கள் ஆழமாக ஆராய்ந்து வருகிறோம். பணப் பரிமாற்றத்தை முற்றிலுமாக ஒதுக்கி, மின்னணு மற்றும் செல்ஃபோன் பணப் பரிமாற்றத்தை நோக்கி நாம் விரைந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இந்திய நுகர்வோர் பற்றிய தகவல்கள், அதாவது Dataவை வெளிநாட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. மேலும் இத்தகைய பண பரிவர்த்தனை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்களில் மேற்கொள்ளப் படும் அந்நிய முதலீடுகள் மிகவும் வெளிப்படையானவையாக இருக்க வேண்டும்' என்று சமீபத்தில் ஊடகங்களுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் எஸ்ஜேஎம் மின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறார்.

திடீரென்று எஸ்ஜேஎம் இந்தளவுக்கு செயற் படத் துவங்கியிருப்பதற்கு காரணம் அலிபாபாவின் சர்வதேச செயல் இயக்குநரான கே.கவரியப்பன் பேடிஎம் மின் கூடுதல் இயக்கநராகவும் சமீபத்தில் வேலையில் சேர்ந்திருப்பதுதான். இந்த நியமனத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் பேடிஎம்மில் அலிபாபாவும், அதனது துணை நிறுவனமான அலிபே வும் 400 மில்லியன் டாலர்களுக்கு (2500 கோடி ரூபாய்) முதலீடுகள் செய்வதற்கான பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கின்றன. தற்போதைக்கு பேடிஎம் மில் அலிபாபா வின் முதலீடுகள் 40 சதவிகிதத்திற்கு மேல் இருப்பதாக பங்குச் சந்தை நிபுனர்கள் தெரிவிக்கின்றனர். பேடிஎம் மில் கணிசமான பங்குகளை எடுப்பதன் மூலம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வுச் சந்தையான இந்தியாவில் தடம் பதிக்க அலிபாபா முயற்சிக்கிறது என்றே நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்த விஷயத்தை மிகவும் சீரியஸாகவே எஸ்ஜேஎம் எடுத்துக் கொண்டிருக்கிறது. 'நாங்கள் இது குறித்த எல்லா தகவல்களையும் திரட்டி வருகிறோம். தேவைப் பட்டால் பேடிஎம் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவோம். மத்திய அரசுடனும் பேசுவோம். மின்னணு வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அறவே அனுமதிக்க கூடாது என்பதுதான் எங்களது கொள்கை. இதனை அரசிடம் வலியுறுத்துவோம்,' என்கிறார் எஸ்ஜேஎம் மின் மூத்த நிர்வாகி ஒருவர்.

பேடிஎம் சமீபத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது, ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்ற மோடியின் அறிவிப்புக்குப் பின்னர் தான். அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாள் நவம்பர் 9 ம் தேதி இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் முதல் முழு பக்க விளம்பரங்களை, மோடியின் புகைப்படத்துடன் வெளியிட்டு வரவேற்றது பேடிஎம். இந்த நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் 15,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இதில் சுவாரஸ்யமான மற்றோர் விஷயம் அலிபாபா நிறுவனம் பேடிஎம்மில் மட்டும் முதலீடு செய்யவில்லை. ஸ்னாப் டீலிலும் முதலீடுகளைச் செய்திருக்கிறது. இந்த ஸ்னாப் டீலின் துணை நிறுவனம்தான் ஃப்ரீசார்ஜ், இதுதான் பேடிஎம்மின் நேரடி போட்டி நிறுவனமாகும். பேடிஎம் போலவே ஃப்ரீசார்ஜூம் செல்ஃபோன்கள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனமாகும்.

இந்த செய்தியின் மூலம் எழும் கேள்வி, இன்றைய உலக பொருளாதார சூழலில் இதுபோன்று ஒரு நாட்டின் முன்னணி தொழில் மற்றும் முதலீட்டு நிறுவனத்தை மட்டும் தனிமைப்படுத்தி இன்னோர் நாடு தன்னுடைய நாட்டில் உள்ள மற்றோர் நிறுவனத்தில் முதலீடுகள் செய்ய விடாமல் தடுக்க முடியுமா என்பதுதான். அதிலும் குறிப்பாக ஒரு நாட்டுக்கு எதிராக இப்படிப்பட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுக்க முடியுமா என்பதுதான். இவை எல்லாமே கிட்டத்தட்ட அறவே சாத்தியமற்றது என்கின்றனர் பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் இன்றைய உலக பொருளாதாரம் பற்றி நன்கறிந்த நிபுணர்கள்.

'இது போன்று ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தின் முதலீட்டை மட்டும் ஒரு இந்திய கம்பெனியில் தடுப்பது என்பது சாத்தியமற்றது. அலிபாபா நிறுவனம் ஒரு பன்னாட்டு சீன நிறுவனம். இதே போன்று சீனாவிலும், உலகின் பல நாடுகளிலும் முதலீடுகளை, குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் நூற்றுக்கணக்கான இந்திய நிறுவனங்கள் செய்திருக்கின்றன. இதே நிலைப்பாட்டை அந்தந்த நாடுகள் மேற்கொண்டால் அப்போது இந்த இந்திய நிறுவனங்களில் முதலீடுகள் என்னவாகும்? பொருட்களைக் கொண்டு வந்து ஒரு நாட்டில் மற்றோர் நாடு கொட்டுவதைத் (dumping) தடுப்பது வேறு. இதுபோன்று தடைகளை ஏற்படுத்துவது வேறு' என்று கூறுகிறார், சீனாவை பற்றிய விரிவான புத்தகத்தை எழுதியவரும், பொருளாதார விவகாரங்களில் ஆழமான ஈடுபாடு கொண்டவருமான எழுத்தாளர் ஆழி. செந்தில்நாதன். மேலும் அலிபாபா வால் இந்தியர்களுக்கு நிரம்ப பலன்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

'அலிபாபா வின் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான இணைய வர்த்தக மையம் இந்தியாவில் பலருக்கும் பலன் கொடுத்திருக்கிறது. லட்சக்கணக்கான இந்திய தொழில் முதலீட்டாளர்கள் இதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இந்தியாவின் எந்த கார்ப்போரேட் நிறுவனங்களும் செய்யாத இந்த உதவியை இந்தியாவின் தொடக்க நிலை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அலிபாபா செய்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது,' என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

இதில் மற்றோர் கூடுதலான சுவாரஸ்யமான தகவல் அலிபாபா வின் முதலாளி ஜாக் மா வுடன் பிரதமர் மோடிக்கு இருக்கும் தனிப்பட்ட முறையிலான நட்புறவு. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது அடிக்கடி பயணம் போன நாடுகளில் ஒன்று சீனா. அவர் அப்போதெல்லாம் மறக்காமல் சந்தித்த தொழிலதிபர்களில் ஜாக் மா வும் ஒருவர். மோடி பிரதமரானவுடன் இந்தியா வரும்போதெல்லாம் ஜாக் மா அவரை டில்லியில் சந்திப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். இது தவிர குஜராத் முதலாளிகள் பலரது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பெறுமானமுள்ள முதலீடுகள் சீனா வின் பல நகரங்களில் இருக்கின்றன என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. ஆகவே எந்தளவுக்கு எஸ்ஜேஎம் மின் முயற்சிகள் மோடியிடம் வெற்றி பெறும் என்று தெரியவில்லை.

சீன நிறுவனத்தின் முதலீட்டால் இந்தியாவின் நுகர்வோர் பற்றிய Data கொள்ளை போகும் என்பதற்காக எதிர்ப்பவர்கள் இதுவே ஒரு அமெரிக்க நிறுவனம் அலிபாபா வுக்கு பதிலாக வந்தால் அப்போதும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்களா? இந்தியர்களின் Data வை பாதுகாக்க வேண்டும் என்பது நியாயமான விஷயம். ஆனால் அதற்கு அரசு செய்ய வேண்டியது என்னவென்றால் தேசிய அளவிலான ஒரு Data பாதுகாப்புக் கொள்கை தானே தவிர ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கை கிடையாது. அதற்கு இன்றைய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழிலில் இடமும் கிடையாது என்பதுதான் யதார்த்தம். சீன நிறுவனங்களின் வளர்ச்சி பாகிஸ்தானுக்கு உதவியாக அமைந்து இந்தியாவில் தீவிரவாதம் வளர உதவுகிறது. ஆகவே நாம் சீன நிறுவனங்களை ஆதரிக்க கூடாதென்கிறது எஸ்ஜேஎம்.

அப்படியென்றால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான ஆயுத தளவாடங்களைக் கொடுப்பது அமெரிக்க அரசும், அமெரிக்காவின் தனியார் ஆயுத உற்பத்தி செய்யும் நிறுவனங்களும்தான். இதற்காக அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எஸ்ஜேஎம் எடுக்குமா என்பது ஆர்எஸ்எஸூக்குத்தான் வெளிச்சம்.

English summary
Is it possible to ban Paytm from Indian cashless economy? Here is an analysis of Mani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X