சீனா, பாக். போல வங்கதேசமும் ஆபத்து தான்... மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர்
டெல்லி : வங்கதேசமும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைக்கும் நாடு தான் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்து உள்ளார்.
சீனா, பாகிஸ்தான் போல வங்கதேசமும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நாடு தான் என்று அசோசெம் கூட்டமைப்பு நடத்திய உள்நாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கருத்து தெரிவித்து உள்ளார்.

வங்கதேசம் உலக அரங்கில் நம்மை நண்பன் என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் அப்படி நடந்து கொள்வது இல்லை. அதிகபட்சமாக இந்தியாவில் அத்துமீறி உள்நுழையப் பார்ப்பவர்கள் அவர்கள் தான் என்றும் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்து உள்ளார். மேலும் அவர்களால் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகவே நான் உணர்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், காஷ்மீரில் நவீன ஆயுதங்கள், தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தி எதிரிகள் உள்நுழையாதவாறு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதுபோலவே, இந்தியாவின் அனைத்து எல்லைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நக்ஸலைட்டுகள், கேரளாவில் அதிகரித்து வரும் இளைஞர்களின் தீவிரவாதம், ரயில்வே பாதுகாப்பு என பல விஷயங்களில் பாதுகாப்புத்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் சீனாவின் அத்துமீறல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இப்போது சீனா நமக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது. அவர்களால் தான் நாட்டில் பல பிரச்னைகள் வருகிறது. சீனா, மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் என அனைவரையும் சமாளிக்க இராணுவம் தயாராக இருக்கிறது என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பதிலளித்த அவர், முந்தைய அரசின் தவறாலேயே பாகிஸ்தான் அங்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. நாங்கள் அதை மீட்க வேண்டும் என்று நினைத்தால் எங்களை யாராலும் தடுக்க முடியாது. காரணம் அது எங்கள் உரிமை என்றும் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்து உள்ளார்.