For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசாரணைக்காக டீஸ்டாவை கைது செய்வதா?: குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தன்னார்வ அமைப்பின் நிதி மோசடி தொடர்பான வழக்கின் விசாரணைக்காக சமூக ஆர்வலர் டீஸ்டா சேடல்வாட்டை ஏன் கைது செய்ய வேண்டும் என்று குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் டீஸ்டாவை கைது செய்வதற்கான தடையை நீட்டித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது இந்துமதவெறி அமைப்புகள் முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். உலகை உலுக்கிய இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

SC extends stay on arrest of Teesta Setalvad and her husband

இதில் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் குடும்பம் குடும்பமாக பலர் உயிரோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொடூரங்களை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியவர்களில் டீஸ்டா சேவல்ட்டின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

அத்துடன் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ நிதியையும் டீஸ்டா திரட்டினர். பின்னர் இப்படி நிதி திரட்டியதில் டீஸ்டாவும் அவரது குடும்பத்தினரும் மோசடி செய்துவிட்டதாக புகார் வந்துள்ளது என்று கூறி கடந்த ஆண்டு குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

குஜராத் படுகொலை அம்பலப்படுத்தியதற்காகவே டீஸ்டா மீது பழிவாங்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் டீஸ்டாவும் அவரது குடும்பத்தினரும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று இருந்தனர். இந்த முன்ஜாமீன் வழக்கின் முடிவில் டீஸ்டாவின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் டீஸ்டா எந்நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்ற நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஜே முகோபாத்யா மற்றும் என்.வி ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு முன் ஜாமீன் வழங்க தகுதியானதா இல்லையா என்பது குறித்து தனியாக ஆய்வு செய்ய உள்ளோம். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை நாங்கள் ரத்து செய்யபோவது இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு டீஸ்டா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், நாங்கள் முன் ஜாமீன் கேட்டு மட்டுமே கேட்டுள்ளோம் என்றார் ஆனால் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேக்தா, டீஸ்டாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வரை (பிப்.19) டீஸ்டாவை கைது செய்ய தடை விதித்தது.

இந்நிலையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆதர்ஷ் குமார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் இன்று மீண்டும் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வியெழுப்பினர்.

சுதந்திரத்தின் மீதான மதிப்பை வானில் உள்ள நட்சத்திரத்துடன் கூட ஒப்பிட முடியாது என கூறிய நீதிபதிகள் விசாரணை செய்வதற்காக ஏன் இருவரையும் கைது செய்யவேண்டும் என கேள்வி கேட்டனர். இது ஒன்றும் கிரிமினல் வழக்கல்ல. பின் எதற்கு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்ட நீதிபதிகள், இருவரையும் கைது செய்வதற்கு எதிரான தடை தொடரும் என உத்தரவிட்டனர்.

விசாரணைக்கு இருவரும் ஒத்துழைக்கவில்லை என்றால் போலீசார் மீண்டும் நீதிமன்றத்தை அணுகி தடையை விலக்க கோரலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

English summary
Supreme Court on Thursday extended the stay on arrest of Teesta Setalvad and her husband Javed Anand in a case of alleged embezzlement of funds for a museum at Ahmedabad's Gulbarg Society that was devastated in the 2002 riots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X