For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்பவனில் சண்முகநாதன் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்-மேகாலயா பெண் பத்திரிகையாளர் அதிரடி

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

மேகாலாயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வி.சண்முகநாதனின் லீலைகள் அம்மாநிலத்தில் சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. பிஆர்ஓ வேலை கேட்டு நேர்முகத் தேர்வுக்கு வந்த இளம் பெண்ணிடம் தவறாக நடந்தது, ஏராளமான பெண்கள் தொடர்பு, தான்தோன்றித்தனமாக அதிகாரிகளை நடத்தியது போன்ற குற்றச் சாட்டுகளால் சண்முகநாதனின் பதவி பறி போனது. பல குற்றச் சாட்டுகள் இருந்த போதிலும் இளம் பெண்கள் விவகாரம்தான் சண்முகநாதனின் பதவியைப் பறித்திருக்கிறது.

இது பற்றி மேகாலாயாவில் இருக்கும் 'தி ஷிலாங் டைம்ஸ்' ஆங்கில நாளிதழின் ஆசிரியர், மூத்த பெண் பத்திரிகையாளர் பேட்ரீஷியா முக்கீம் அவர்களுடன் ஒன்இந்தியாவுக்காக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை:

Shanmuganathan issue.. A field report

கேள்வி: என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா?

பேட்ரீஷியா முக்கீம்: கடந்த டிசம்பர் 7 ம் தேதி ஒரு இளம் பெண்ணிடமிருந்து எனக்குத் தொலைபேசி வந்தது. அவர் மிகவும் பதற்றத்துடன் தன்னுடையை பெயரை சொன்னார். அந்தப் பெண் என்னிடம் உதவி ஆசிரியராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியவர். தான் பிஆர்ஓ வேலை கேட்ட ஆளுநர் சண்முகநாதனை சந்திக்க இரவு 7 மணிக்குப் போனதாகவும் அப்போது ஆளுநர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். நேர்முகத் தேர்வுக்கு வந்த தன்னிடம் சம்மந்தமில்லாத பல விஷயங்களை ஆளுநர் கேட்டதாகவும், தன்னுடைய பர்சனல் விஷயங்கள் பற்றிக் கேட்டதாகவும் கூறினார். அந்த அறையில் தன்னையும், ஆளுநரையும் தவிர வேறு எவரும் இல்லை. நேர்முகத் தேர்வு முடிந்த தான் அவசர அவசர மாக அந்த அறையிலிருந்து வெளியேறிய போது, திடீரென்று பின்னால் வந்த சண்முகநாதன் தன்னை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்ததாக அந்தப் பெண் கூறினார்.

கேள்வி: உங்களிடம் குறிப்பாக எந்த உதவியை அவர் எதிர்பார்த்தார்?

பதில்: என்னைத் தொடர்பு கொள்ளுவதற்கு முன்பு வேறோர் பெண் பத்திரிகையாளருக்கு நடந்த சம்பவம் குறித்து எஸ்எஸ்எஸ் அனுப்பியிருந்தார் பாதிக்கப்பட்ட இந்த பெண். அந்த எஸ்எம்ஸை தயவு செய்து யாருக்கும் அந்த பெண் பத்திரிகையாளர் அனுப்பி விடாமல் இருக்க வேண்டும் என்றும் அதற்கு என்னுடைய உதவி வேண்டும் என்றும் கேட்டார். அவருடைய பேச்சில் பதற்றமும், அச்சமும் இருந்தது. தான் ஏன் அவசரப்பட்டு அந்த எஸ்எம்ஸை அனுப்பினோம் என்று அவர் நினைத்தார், அதனால் ஏதாவது புதிய பிரச்சனைகள் வருமோ என்றும் அஞ்சிக் கொண்டிருந்தார்.

கேள்வி: அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்'?

பதில்: நான் அந்த விஷயத்தை கவனிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அடுத்த நாள் டிசம்பர் 8 ம் தேதி அந்த எஸ்எம்எஸ் அதற்குள் பல பத்திரிகையாளர்களுக்கும், சிவில் சமூகத்தினர் பலருக்கும் வந்து விட்டது. இதில் முக்கியமான விஷயம் பாதிக்கப் பட்ட பெண் யாருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினாரோ அந்த பெண் பத்திரிகையாளரும் ஆளுநரிடம் நேர்முகத் தேர்வுக்கு போவதற்கு இருந்தார். அந்த எஸ்எம்எஸின் ஸ்க்ரின் ஷாட் இன்னமும் என்னிடமும் வேறு பலரிடமும் இருக்கிறது.

கேள்வி: அதற்கு பிறகு என்ன நடந்தது?

பதில்: போலீசில் புகார் தெரிவிக்குமாறும், விஷயத்தை மேகாலாயா பெண்கள் கமிஷனிடம் கொண்டு செல்லுமாறும் அவரிடம் கூறினோம். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் இதனை செய்யவில்லை.

கேள்வி: பிறகு எப்படி வெளியில் வந்தது?

பதில்; இதனிடையே ஆளுநர் மாளிகையில் பணி புரியும் ஊழியர்கள் சுமார் 100 பேர் கையெழுத்திட்டு சண்முகநாதனுக்கு எதிராக போராட்டங்களைத் துவங்கினர். தான்தோன்றித் தனமாக ஊழியர்களை நடத்துவதாகவும், மனிதாபினம் இல்லாமல் அவர்களிடம் வேலை வாங்குவதாகவும் புகார்கள் எழுந்தன. சண்முகநாதனின் டார்ச்சர் தாங்காமல் துணைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த ஒருவர் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு இறந்து போனார். அந்த போராட்டம் வெடித்த பின்னர்தான் இந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் பற்றிய தகவலும் வெளியில் வந்தது.

கேள்வி: நீங்கள் சண்முகநாதனை சந்தித்தீர்களா? உங்களது கணிப்பு என்ன?

பதில்: மே 2015 ல் அவர் மேகாலயா ஆளுநராக வந்தவுடன் அவரைச் சந்தித்துப் பேசினேன். பல விஷயங்களிலும் அவரது புரிதல் மிகவும் சுமாரானதாகவும், ஏமாற்றம் தருவதாகவும் இருந்தது.

கேள்வி: ஏன் இந்த சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டார் என்று கருதுகீறீர்கள்?

பதில்: என்னுடையை கணிப்பு என்னவென்றால் சண்முகநாதன் கலாச்சார ரீதியில் ஆண் பெண் உறவில் கட்டுப்பாடுகள் மிகுந்த தமிழ் நாட்டிலிருந்து வந்தவர். ஆனால் நாங்கள் இருப்போதோ மேகாலாயாவில். இது பழங்குடிகளின் பூர்வீகம். இங்கு ஆணும், பெண்ணும் எந்த விதமான கல்மிஷங்களும், விகல்பங்களும் இல்லாமல் பழகுவர். இது பழங்குடி பெண்கள் பற்றிய ஒரு தவறான எண்ணத்தை சண்முகநாதனுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு ஆளுநருக்கு இருக்க வேண்டிய கண்ணியம் சுத்தமாக அவரிடம் இல்லாதது இங்கு பலரையும் ஆச்சரியப் பட வைத்துக் கொண்டிருக்கிறது.

கேள்வி: இதற்கு முன்பு இப்படிப்பட்ட சம்பவங்கள் மேகாலாயாவில் நடந்திருக்கிறதா?

பதில்: இல்லவே இல்லை. இதுதான் முதன் முறை. அற்புதமான கவர்னர்கள் மேகாலாயாவில் இருந்திருக்கிறார்கள். பி.கே. நேரு, எம்.எம். ஜேக்கப், கே.கே. பால், ஆர்.எஸ். மூஷாஹரி போன்றோர் அலங்கரித்த மேகாலாயாவின் ஆளுநர் மாளிகை இன்று களங்கப்பட்டு நிற்கிறது.

கேள்வி: பொது வெளியில் பேசும்போது சண்முகநாதன் எப்படி நடந்து கொள்ளுவார்?

பதில்: பெரும்பாலும் சிறுபிள்ளைத்தனமாகத்தான் நடந்து கொள்ளுவார். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேச அழைத்தால் திடீரென்று மாணவர்களை வரிசையாக எழுந்து நிற்க சொல்லி அவர்களது பெயர், ஊர் உள்ளிட்ட விஷயங்களை கேட்கத் துவங்கி விடுவார். வயது வந்த மாணவர்களை சிறு குழந்தைகளை நடத்துவது போல நடத்துவார்.

கேள்வி: தன்னுடைய தமிழக நாட்களை பற்றி உங்களிடம் அவர் என்ன கூறியிருக்கிறார்?

பதில்: வந்த புதிதில் அவர் சொன்னது, தான் தமிழகத்தில் வரதட்சணை கொடுமைக்கு எதிராக கடுமையாக போராடியாதாகவும், இதனால் வரதட்சணை கொடுப்பது மற்றும் வரதட்சணை கொடுமைகள் போன்றவை தமிழ் நாட்டில் கடுமையாக குறைந்திருப்பதாகவும் கூறினார். முந்தய பாஜக ஆட்சிக் காலத்தில் தான் பிரதமர் வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததாகவும் அவர் என்னிடம் கூறினார்.

கேள்வி: இனி அடுத்த என்ன நடக்கப் போகிறது? இந்த விஷயம் அப்படியே அமுங்கிப் போகுமா?

பதில்: எனக்குத் தெரியவில்லை. சம்மந்தப்பட்ட பெண் போலீஸில் முறையாக புகார் தெரிவித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அல்லது மேகாலயா பெண்கள் ஆணையத்திடம் போக வேண்டும். இவை இரண்டையும் அந்தப் பெண் செய்யவில்லை. உத்திரப் பிரதேச தேர்தல்கள் நெருங்கி வருவதால் பாஜக தலைமை துரிதமாக சண்முகநாதன் விஷயத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவ்வளவுதான், தாங்கள் தார்மீக ரீதியில் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த மத்திய ஆளும் கட்சி எடுத்த முடிவு இது.

கேள்வி: இந்த சம்பவத்திற்கு முன்பும் பல பெண்கள் சண்முகநாதனைப் பார்க்க தொடர்ந்து சென்றதாக சொல்லப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நேரடியாக எந்த புகாரும் என்னிடம் வரவில்லை. ஆனால் ஆளுநர் மாளிகை ஒரு லேடீஸ் கிளப்பாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக சிவில் சமூகத்தில் இங்கு நிலவிக் கொண்டிருப்பது உண்மைதான். சண்முகநாதன் விவகாரம் மேகாலாயாவை பொறுத்த வரையிலும், ஒரு கருப்பு அத்தியாயம் தான்.

இவ்வாறு பேட்ரீஷியா முக்கீம் கூறினார்.

இதில் தமிழக பாஜக வினர் சொல்லுவது சுவாரஸ்யமாக இருக்கிறது.

"மத மாற்றத்துக்கு எதிராக குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் மத மாற்றத்துக்கு எதிராக சண்முகநாதன் கடுமையாகப் போராடினார். அவர் மேகாலாயாவுக்குப் போன பின்னரும் கூட ராமகிருஷ்ணா மிஷன் போன்ற அமைப்புகள் மத மாற்றத்துக்கு எதிரான மற்றும் இன்ன பிற தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள சண்முகநாதன் தொடர்ந்து உதவிகளை செய்து வந்தார். அதற்கான விலைதான் இந்த விவகாரம். இது மதமாற்றத்தில் வட கிழக்கில் ஈடுபட்டிருக்கும் சக்திகளின் திட்டமிட்ட சதி. இதற்கு மீடியாவும், மேகாலயா அரசு இயந்திரத்தின் ஒரு பகுதியும் உடந்தையாகி விட்டனர். சண்முகநாதன் பலியாகி விட்டார்," என்று ஒன் இந்தியா விடம் கூறினார் தமிழக பாஜக மூத்த நிருவாகியும், சண்முகநாதனின் நெருங்கிய நண்பருமான என்.ராமசுப்பிரமணியன்.

இதுவரையில் சண்முகநாதனின் வாழ்க்கையில் இது போன்று எந்த புகாரும் ஒரு முறையும் வந்தது கிடையாது என்று அவர் மேலும் கூறுகிறார். இதே கருத்தையே பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, வானதி சீனிவாசன் போன்றோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
What happened in Megalaya Raj Bhavan? Here is a field report from Shillong based journalist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X