நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் இருந்து ஸ்மிருதி இரானி நீக்கம்- ஜவடேகருக்கு இடம்!
டெல்லி: நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் இருந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இடம்பெற்றுள்ளார்.
அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது ஸ்மிருதி இரானி மனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் தாம் பிரதமர் மோடியின் அதிருப்தியால் மாற்றப்படவில்லை எனக் கூறி வருகிறார் ஸ்மிருதி இரானி.

இந்த நிலையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் இருந்தும் ஸ்மிருதி இரானி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கேபினட் அந்தஸ்துக்கு நியமிக்கப்பட்ட பிரகாஷ் ஜவடேகர் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.
மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகார குழுவில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத்கார் பாதல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, அனந்தகுமார் ஆகியோர் பொருளாதார விவகார கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.