
"அதிமுக பொதுக் குழு உள்கட்சி விவகாரம், தடை விதிக்க இயலாது" - உச்ச நீதிமன்றம்
ஜூலை 11ஆம் தேதி திட்டமிடப்பட்டிருக்கும் அதிமுக பொதுக் குழு உள்கட்சி விவகாரம் என்பதால் அதில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக் குழு நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது தங்களிடம் கருத்து கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமியும் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
இதேவேளை ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 378 பக்கங்கள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அதில் அதிமுகவின் செயல்பாடுகளை முடக்க ஓ.பன்னீர்செல்வம் முயல்வதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அத்தகைய முயற்சியை ஓபிஎஸ் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த மனுவை விரைந்து விசாரிக்கும்படி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை ஏற்று அவரது மனுவை இன்று நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை (ஜூலை 6) விசாரித்தது.
அப்போது, எடப்பாடி பழனிசாமியின் மனுவுக்கு இரு வாரங்களுக்குள் பதிலளிக்க ஓ. பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெற எந்தத் தடையும் இல்லை என்று கூறியது. அதிமுக பொதுக்குழுவை நடத்துவது அக்கட்சியின் உள்விவகாரம் என்றும் அதில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
- அதிமுக நெருக்கடி: குவியும் வழக்குகள் - ஜூலை 11இல் பொதுக்குழு நடக்குமா?
- அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு: ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் வார்த்தை போர்
இந்த விவகாரத்தில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் ஏற்கெனவே இதை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கையை விசாரிப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
"இந்த கட்டத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிப்பதற்கான தேவை இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது" என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், "அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பாக அதன் உத்தரவை மீறியதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நாளை () விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது," என்று கூறினார். சுயாதீனமாக இயங்கும் கட்சியின் உள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சொல்வதற்கு பெரிதாக ஏதுமில்லை என்றும் கூறிய அவர், ஆதரவே இல்லாத ஒருவரால் உள்கட்சி ஜனநாயகத்தை முடக்க முயற்சி நடக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் மறுஉத்தரவு வரும்வரை நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரிக்கத் தடை விதிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
https://www.youtube.com/watch?v=TsP5V9l7Ong
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்