For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தயாநிதிமாறனை கைது செய்ய துடிப்பது ஏன்?... சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி...

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்ய செப்டம்பர் 14ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், மாறனை கைது செய்ய துடிப்பது ஏன் என்றும், இதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கல் உள்ளதா? " எனவும் சிபிஐ-யிடம் சரமாரி கேள்வி எழுப்பியது.

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

dhayanithi maran

அதேவேளையில், 6 வாரங்களுக்கு வழங்கிய இடைக்கால முன் ஜாமீனை, நிரந்தர ஜாமீனாக வழங்க வேண்டும் என தயாநிதிமாறன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ததோடு, 3 நாட்களுக்கு சரணடைய வேண்டும் என தயாநிதிமாறனுக்கு அவகாசம் அளித்தது.

இந்நிலையில், முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தயாநிதிமாறன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாகூர், வி.கோபால கவுடா, ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மாறனிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடுவார் என்ற ஆபத்தோ அல்லது சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற நிலை இருந்தால் மட்டுமே ஒருவரது ஜாமீன் ரத்து செய்யப்படும்.

மாறனை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ கோருகிறது. தற்போது மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்யும் முன்னர் சென்னை உயர் நீதிமன்றம், சட்ட சூழல்களை கருத்தில் கொள்ளவில்லை. முன் ஜாமீனை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் சட்டப்பிழை உள்ளது. எனவே, மாறன் முன் ஜாமீன் ரத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

அப்போது நீதிபதி டி.எஸ். தாகூர், " மாறனை கைதை நோக்கி தள்ளுவதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கல் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதோடு, மாறனை சிக்க வைக்க சிபிஐ முயற்சிக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், " ஒரு கோடி ரூபாய் தொலைபேசி கட்டண பாக்கிக்காக ஒருவரை சிபிஐ கைது செய்யவேண்டியதன் அவசியம் என்ன? இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டபோது ஏன் அவரை கைது செய்யவில்லை. ஏறக்குறையை 3 ஆண்டுகளாக நீங்கள் ( சிபிஐ) என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய கிராமப்புற சுகாதார திட்ட ( NRHM ) ஊழலில் சுமார் 800 கோடி ரூபாய் பொதுமக்கள் பணம் இழப்பு ஏற்பட்டது. ஆனால் ஒருவர் கூட அதற்காக கைது செய்யப்படவில்லை. ஆனால் இங்கே நீங்கள் ஒரு கோடி ரூபாய் பில் பாக்கிக்காக ஒருவரை கைது செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் அவரை ( சிபிஐ) உங்கள் பிடிக்கு கொண்டு வர முயற்சிக்கிறீர்களா?

தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டது சதி திட்டத்தின் ஒரு பகுதி என்று நீங்கள் (சிபிஐ) கருதினீர்கள் என்றால் அவரை ( மாறனை ) விசாரியுங்கள்...பிஎஸ்என்எல் அதிகாரிகளை விசாரியுங்கள். அதை விடுத்து அவரை ஏன் கைது செய்யவேண்டும்?

அவரை கைது செய்வது என்பது உங்களது கவுரவ பிரச்னையா? பொதுமக்கள் பணத்திற்கு இழப்பு ஏற்படுத்திய யாரும் தப்பித்துவிடக்கூடாதுதான். ஆனால் கஸ்டடி விசாரணை தேவையா? ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பதை எவ்வாறு மதிப்பிட்டீர்கள்? பில் எதுவும் போடப்படவில்லை என்று நீங்கள் ( சிபிஐ) கூறுகிறீர்கள். எப்படியோ... அவர் பில்லுக்கான பணத்தை கட்ட தயாராக உள்ளாரா? இப்போது நீங்கள் பில் போட்டு கொடுத்தால் அவர் அந்த தொகையை கட்டுவார்" என்று காட்டமாக கூறினார்.

அப்போது மாறன் வழக்கறிஞர் ஷியாம் திவான், " இந்த வழக்கில் கிரிமினல் குற்றம் எதுவுமில்லை. பணம் கட்ட வேண்டும் என்பது மட்டும்தான்" என்றார்.

இதனையடுத்து சிபிஐ சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, " இது ஒரு மிகப்பெரிய ஊழல்; அரசாங்கத்தில் இருந்த தனது செல்வாக்கு காரணமாக அவர் தனது குடும்பத்தினர் நடத்தும் தொலைக்காட்சிக்கு தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த சதியில் மாறனுக்கு உள்ள தொடர்பை நிரூபிக்க அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க விரும்புகிறோம்" என்றார்.

இதனையடுத்து நீதிபதி தாக்கூர், " அரசு பங்களாக்களில் காலக்கெடு முடிந்த பின்னரும் பல பேர் காலி செய்யாமல் தங்கி உள்ளனர். அதனை நீங்கள் ஊழல் என்று கூறுவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து நீதிபதி கோபால கவுடா, "பொருளாதார குற்றங்களில் ஏன் முன் ஜாமீன் அளிக்கப்படுவதில்லை? உங்கள் ஆட்சேபனைகளை நீங்கள் விளக்க வேண்டும்" என அட்டார்னி ஜெனரலிடம் கூறினார்.

இதனையடுத்து தயாநிதி மாறன் முன்ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

English summary
The Supreme Court on Wednesday restrained the CBI from arresting former Union telecom minister Dayanidhi Maran till further orders in a case related to alleged installation of telephone exchange at his residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X