For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: தனிச் சின்னத்தில் போட்டியிடுமா விசிக.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி

By BBC News தமிழ்
|

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இரவிலும் பரபரப்பாக இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பு, திருமணம் போன்ற விழாக்களுக்கு அழைக்க காத்திருக்கும் தொண்டர்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு தேதி கேட்கும் நிர்வாகிகள் என ஒவ்வொருவராக சந்தித்து அனுப்புகிறார் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த இந்தப் பிரத்யேகப் பேட்டியில், வரவிருக்கும் இந்தத் தேர்தலின் மையப் பிரச்சனை என்ன, இந்து வாக்கு வங்கி இருக்கிறதா, தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது, பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் வி.சி.கவின் நிலைப்பாடு என்ன என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார் திருமாவளவன். அவரது பேட்டியின் முதல் பகுதி இது:

Tamil Nadu Assembly Election 2021: Will VCK contest under a separate symbol ?: Thirumavalavan Exclusive Interview

கே. வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கியமான பிரச்சனையாக, மையப் பிரச்சனையாக எது இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள்?

ப. எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை, தமிழ்நாடும் இந்தியாவும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடிய ஒன்று அல்ல. இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் ஆபத்திலிருந்து இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டும். சனாதன சக்திகள் மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சக்திகளிடமிருந்து இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டும். அ,தி.மு.கவைப் பொறுத்தவரை, பா.ஜ.கவிடம் சிக்கி அவர்களது விருப்பப்படி செயல்படும் ஒரு பொம்மலாட்ட அரசாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் அதிகரித்துள்ளன. ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் தலித் ஊராட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை நுகர முடியவில்லை.

இந்த மாநில அரசையும் மோடி தலைமையிலான சனாதன அரசையும் மக்களிடம் அம்பலப்படுத்துவதுதான் எங்களது முதன்மையான செயல்திட்டமாக இருக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ஆட்சியை நிறுவதற்கான முயற்சியை இந்தக் கூட்டணி மேற்கொள்ளும்.

கே. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்களும் இடம்பெற்றிருந்த தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றிபெற்றது. அதே கூட்டணி அப்படியே மீண்டும் தொடருமென நினைக்கிறீர்களா?

ப. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தக் கூட்டணிக்குள் உரசலோ, கருத்து மாறுபாடோ இல்லை. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அண்மையில்கூட எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். மக்கள் பிரச்சனைகளுக்காக ஒருங்கிணைந்து செயல்படும் நல்லிணக்கம் இந்தக் கூட்டணிக் கட்சிகளிடம் நிலவுகிறது. பா.ஜ.க. இங்கே காலூன்ற அ.தி.மு.கவைப் பயன்படுத்தி வேலைகளை செய்துகொண்டிருக்கிறது. எனவே அவர்களிடம் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்றுவதும் இந்தக் கூட்டணியின் முக்கியமான செயல்திட்டமாக இருப்பதால், கூட்டணிக் கட்சிகள் கொள்கை அடிப்படையில் இணைந்து செயல்படும் என்று நினைக்கிறேன்.

கே. 2019ல் இருந்த வாக்காளர் மனநிலைக்கும் இப்போதுள்ள வாக்காளர் மனநிலைக்கும் எந்த அளவுக்கு வித்தியாசம் இருக்குமென நினைக்கிறீர்கள்? இந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க. தமிழகத்தில் கடுமையாகப் பணியாற்றியிருக்கிறது...

ப. ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர்களின் மனநிலை மாறும். ஒவ்வொரு முறையும் புதிய வாக்காளர்கள் வருகிறார்கள். அவர்கள் மாற்றம் வேண்டுமென நினைப்பார்கள். ஆகவே ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றம் இருக்கத்தான் செய்யும். பாரதிய ஜனதா இங்கே மக்கள் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யவில்லை. அம்மாதிரி பிரச்சனைகளுக்காக எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்காக, பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக, பெண்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்ததில்லை. எல்லா இடங்களிலும் செய்வதைப் போல இங்கேயும் மக்களைப் பிளவுபடுத்துவதற்கான அரசியலைத்தான் செய்கிறார்கள். ஆகவே, அவர்கள் இங்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென நம்பினால் ஏமாந்து போவார்கள். தமிழ்நாடு பிற மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, பக்குவப்பட்ட மண். ஆகவே. பா.ஜ.கவின் மத அரசியல் இங்கே எடுபடாது.

கே. பா.ஜ.கவின் தீவிர செயல்பாடுகளால் இந்து வாக்கு வங்கி என்ற ஒன்று உருவாகியிருப்பதாக நம்பப்படுகிறது. நீங்கள் அதை ஏற்கிறீர்களா?

ப. அது ஒரு மூடநம்பிக்கை. தமிழ்நாட்டில் அப்படி மதம் சார்ந்த வாக்கு வங்கியை உருவாக்க நினைக்கிறார்கள். நீண்ட காலமாக அதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை மக்கள் மதத்தின் பெயரால் பிளவுபட்டதில்லை. தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார்கள், அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார்கள். தனியே நின்றார்கள். ஏதேதோ செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால், இந்த முறை மட்டும் தாங்கள் சாதித்துவிடுவோம் என அவர்கள் நம்புவதற்கு ஒரு காரணம்தான் இருக்கிறது. கலைஞர் இல்லை; ஜெயலலிதாவும் இல்லை. இந்த இரண்டு தலைவர்கள் இல்லாததால் மக்களைக் கவர்ந்துவிட முடியும்; வாக்குகளை தம் பக்கம் இழுத்துவிட முடியுமென நினைக்கிறார்கள். நிச்சயம் அப்படி நடக்காது.

எம்.ஜி.ஆர். இறந்த பிறகும், ஜெயலலிதா இறந்த பிறகும் அ.தி.மு.க. இருக்காது எனக் கருதினார்கள். ஆனால், அ.தி.மு.க. இங்கே இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதேபோல, அண்ணாவுக்குப் பிறகு, கலைஞருக்குப் பிறகு தி.மு.க. இருக்காது என கணக்குப்போடுகிறார்கள். அப்படி அல்ல. இரண்டு கட்சிகளுக்குமே கீழ் மட்ட அளவில் மக்கள் அமைப்பாக திரண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென வாக்குவங்கி இருக்கிறது. இரண்டு தலைவர்களும் இல்லை என்பதைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கென ஒரு வாக்கு வங்கியை, மதம் சார்ந்த வாக்கு வங்கியை உருவாக்கிவிட முடியுமென நம்புகிறார்கள். அது தப்புக்கணக்காகத்தான் முடியும்.

கே. சமீபகாலமாக இந்துக்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் கட்சிகள் மிகுந்த கவனமாக இருப்பதால்தான் இந்தக் கேள்வி...

ப. யாருக்குமே அந்த நோக்கம் கிடையாது. கட்சி நடத்துகிறவர்களுக்கு, பொதுவான நலனை முன்னிறுத்துபவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் உணர்வுகளைக் காயப்படுத்துவது என்பது எப்படி ஒரு செயல்திட்டமாக இருக்க முடியும்? தி.மு.கவுக்கோ, விடுதலைச் சிறுத்தைகளுக்கோ, இடதுசாரிகளுக்கோ எப்படி இது செயல் திட்டமாக இருக்க முடியும்? பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு, தி.மு.கவும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரான கட்சிகள் என்பதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

நாங்கள் தத்துவார்த்த அடிப்படையில் சில விமர்சனங்களை வைக்கிறோம். சங்க பரிவார அமைப்புகளையும் பாரதிய ஜனதா கட்சியையும் அம்பலப்படுத்துகிற வகையிலே அதனை முன்வைக்கிறோம். அவர்களைப் பார்த்துப் பேசுவதையெல்லாம் மொத்தமாக இந்துக்களைப் பார்த்துப் பேசுவதைப் போல திசை திருப்பப் பார்க்கிறார்கள். தி.மு.கவில் 80-90 சதவீதம் இந்துக்கள்தான். அ.தி.மு.கவிலும் அப்படித்தான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் அப்படித்தான். யதார்த்தத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த சமூகத்தில், ஒவ்வொரு கட்சியிலும் இந்துக்கள்தான் பெரும்பான்மையாக இருக்க முடியும். என்னுடைய கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களே இந்துக்களாக இருக்கும்போது, இந்துக்களைப் புண்படுத்துவதை எப்படி திட்டமிட்டு செயல்படுத்த முடியும்?

பா.ஜ.கவை நாம் அம்பலப்படுத்துகிறோம். அவர்களை காயப்படுத்துகிறோம் என்று சொல்வதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த இந்துக்களையும் காயப்படுத்துவதாக அதை திசைதிருப்பிவிட்டு அரசியல் ஆதாயம் பெறப்பார்க்கிறார்கள்.

கே. சனாதன தர்மத்தை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். தேர்தல் நெருக்கத்தில் எங்கள் கட்சியில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என நீங்களும் சொல்கிறீர்கள், பெரிய கட்சியான தி.மு.கவும் சொல்கிறது...

ப. சனாதன எதிர்ப்பு என்பது எப்படி இந்துக்களை எதிர்ப்பதாகும்? சனாதனம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டம். ஆர்.எஸ்.எஸ்சும் பா.ஜ.கவும் மதத்தை மட்டும்தான் கையில் எடுக்கிறார்கள். பிறப்பின் அடிப்படையிலான உயர்வு - தாழ்வை நியாயப்படுத்தக்கூடிய சமூகக் கட்டமைப்பாக சனாதனம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம். மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும். பெண்களுக்கு கல்வி, அதிகாரம் போன்ற உரிமைகள் தேவை; இதற்குத் தடையாக இருக்கக்கூடியது சனாதனம் என்கிறோம். இது எப்படி இந்துக்களுக்கு எதிராக இருக்க முடியும்?

உண்மையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது பா.ஜ.கதான். நீட் தேர்வால் யார் பாதிக்கப்படுவது, வேளாண்மை சட்டங்களால் யார் பாதிக்கப்படுவது... பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் யார் பாதிக்கப்பட்டது... இவற்றில் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டது இந்துக்கள்தான். அப்பாவி சமூகமாக இருக்கக்கூடிய இந்துக்களிடம் மதவெறியைத் தூண்டிவிடுகிறது; வன்முறையை ஏற்படுத்துகிறது. இதில் பாதிப்பை எதிர்கொள்வது இந்துக்கள்தான். ஆகவே, இந்துக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க.தான்.

கே. இந்து, மதம் குறித்த கேள்விகளுக்கு இந்தத் தேர்தலில் உங்களைப் போன்ற கட்சிகள் பதில் சொல்ல வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது என்பதை ஏற்கிறீர்களா...

ப. தி.மு.க. இந்துக்களுக்கு எதிரி, தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் இந்துக்களுக்கு எதிரி என்ற பிரசாரத்தை பா.ஜ.க. திரும்பத் திரும்ப செய்கிறது. இதனை இந்து மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் வேறு எந்தப் பிரச்சனையையாவது பேசியிருக்கிறார்களா? மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையாவது அவர்கள் பேசியிருக்கிறார்களா? எதற்கெடுத்தாலும் இந்துக் கடவுள்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்று பேசி, இந்த மக்களை மதவெறிக்குள் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ஓட்டுக்காக இதைச் செய்கிறார்கள்.

கே. தி.மு.க. கூட்டணியில் இந்தத் தேர்தலில் எத்தனை இடங்களை எதிர்பார்க்கிறீர்கள்...

ப. பேச்சு வார்த்தை நடப்பதற்கு முன்பாக இது குறித்து ஊடகங்களில் பேசுவது சரியாக இருக்காது.

கே. கூட்டணிக் கட்சிகளைத் தங்கள் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க. வலியுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. உங்களுக்கு அப்படி அழுத்தம் இருக்கிறதா?

ப. இதுவும் தி.மு.கவைக் குறிவைத்து, திட்டமிட்டு செய்யப்படும் சதிவலை என நான் நினைக்கிறேன். பதிவுசெய்யப்பட்ட ஆனால், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஒன்று சுயேச்சை சின்னத்தில் நிற்கலாம். அல்லது கூட்டணிக் கட்சிகளின் சின்னத்தில் நிற்கலாம். இது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, எந்தச் சின்னம், எந்தச் சின்னம் என்ற கேள்வியை ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கேட்பதும், மற்ற விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு, இதைப் பெரிதுபடுத்தி விவாதிப்பதும் ஏதோ உள்நோக்கம் இருப்பதைத்தான் காட்டுகிறது.

ஆனால், நான் இந்த விஷயத்தை வெளிப்படையாகப் பேசிவிடுகிறேன். நாங்கள் பதிவுசெய்யப்பட்ட கட்சி. ஆனால், அங்கீகரிக்கப்படாத கட்சி. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் எல்லாம் பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் மட்டுமே. ம.தி.மு.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தது. இப்போது அந்த அங்கீகாரம் போய்விட்டது. அ.தி.மு.க. கூட்டணியிலிலும் இதுபோல கட்சிகள் உண்டு. ஆனால், யாரும் சென்று அங்குள்ள கட்சிகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லையே... அது ஏனென்று தெரியவில்லை. ஆகவே, உள்நோக்கம் இருக்கிறது. அல்லது டிஆர்பிக்காக செய்கிறார்களா என்று தெரியவில்லை.

தி.மு.க. தான் மட்டும் ஜெயித்தால் போதுமென்று நினைத்தால், கூட்டணிக் கட்சிகளிடம் எந்தச் சின்னத்திலும் நின்றுகொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். 2006ல் அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இருக்கும்போது மறைந்த எம். நடராஜன் என்னிடம் பேசினார். "கடைசி நேரத்தில் சுயேச்சை சின்னத்தை வாங்கி, 10 தொகுதிகளையும் இழந்துவிடாதீர்கள். மக்களிடம் அந்தச் சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் பிரச்சனை வரலாம்; நம்மோடு இணக்கமாக இருக்கும் சூழலில் இரட்டை இலையிலேயே நின்று ஜெயித்துவிட்டு, சுயேச்சையாக செயல்படுங்களேன். இதற்கு முன்மாதிரிகள் இருக்கிறதே" என்றார். "நாங்களும் ஒரு சக்தியாக வளர வேண்டுமென நினைக்கிறோம். அங்கீகாரம் பெற வேண்டுமென நினைக்கிறோம். அதனால், சொந்த சின்னத்திலேயே நிற்கிறோம்" என்று நான் சொன்னேன். அதன் படி மணி சின்னம் கிடைத்தது. 14 நாட்களில் அதை மக்களிடம் கொண்டு சேர்த்து 2 இடங்களில் ஜெயித்தோம்.

அப்போது அ.தி.மு.க. எங்களைக் கட்டாயப் படுத்தியதாக சொல்ல முடியாது. அது ஒரு ஆலோசனைதான். 2001ல் கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தபோது, தமிழ்நாட்டில் 8 இடங்கள், புதுச்சேரியில் இரண்டு இடங்கள் என மொத்தமாக 10 இடங்களை எங்களுக்குக் கொடுத்தார்கள். அப்போதும் தி.மு.க. தரப்பில் எங்களுக்கு ஆலோசனை கொடுத்தார்கள். "நீங்கள் குறைந்த நாட்களுக்குள் சின்னத்தை வரைய வேண்டியிருக்கும். பிட் நோட்டீஸ் அடிக்க வேண்டியிருக்கும். போஸ்டர் அடிக்க வேண்டியிருக்கும். கடைசி நேரத்தில் பெரிய வேலையாக இது மாறிவிடும். அதனால், நீங்கள் உதயசூரியனில் நின்றுவிடுங்களேன்" என்று சொன்னார்கள். அந்தத் தருணத்தில் அரசியல் எங்களுக்குப் புதிது. உதயசூரியன் சின்னத்தில் நின்றோம். நான் மட்டும் மங்களூர் தொகுதியில் வெற்றிபெற்றேன்.

ஆகவே அங்கீகரிக்கப்பட்ட சின்னம் மட்டும் வெற்றியைத் தந்துவிட முடியாது. இரட்டை இலையே பல இடங்களில் தோற்றுப் போயிருக்கிறது. எம்.ஜி.ஆர். இருக்கும்போதே நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் தோற்று 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றார்கள். ஆகவே பிரபல சின்னம்தான் வெற்றிபெறும், புதிய சின்னம் வெற்றிபெறாது எனச் சொல்ல முடியாது. இப்போதைய டிஜிட்டல் உலகில் ஒரு சின்னத்தை உடனடியாக பிரபலப்படுத்திவிட முடியும்.

2009ல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொன்னார்கள். விழுப்புரம் உள்பட இரண்டு இடங்கள் கிடைத்தன. உச்ச நீதிமன்றம் சென்று நட்சத்திரம் சின்னத்தை வாங்கினோம். சின்னத்தை வாங்கிய பிறகு 10 - 12 நாட்கள் இடைவெளிதான் இருந்தது. இருந்தபோதும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். இந்த முறை கடைசி நேரத்தில்தான் பானைச் சின்னத்தை வாங்கினோம். தேர்தலுக்கு பத்து நாட்கள் இருக்கும்போதுதான் சின்னம் கிடைத்தது. ஆனால், ஐந்து லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றோம். ஆகவே சின்னம் என்பது பெரிய பிரச்சனை கிடையாது.

தி.மு.கவும் அ.தி.மு.கவும் தோழமைக் கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குகிறார்களே தவிர, அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை. ஆலோசனையைச் சொல்கிறார்கள். அதை ஏற்பதும் ஏற்காததும் நமது விருப்பம். எங்கள் சின்னத்தில் போட்டியிட்டால்தான் இத்தனை இடங்களைத் தருவோம் என்று சொல்வதில்லை.

ஆகவேதான் இம்மாதிரி கேள்வி கேட்கப்படும்போது, "அவர்கள் கேட்பார்கள். நாங்கள் அதை பரிசீலனை செய்து, எங்கள் கண்ணியம் குறைவுபடாதபடி முடிவெடுப்போம்" என்று சொல்வோம். நாளை என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்பதை இப்போதே சொல்ல முடியாது அல்லவா? நாங்களும் ஒரு அரசியல் சக்தியாக இந்த மண்ணில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் முடிவு இருக்கும். நாங்கள் பெரும்பாலும் தனிச் சின்னத்தில் நிற்பதையே விரும்புவோம் என்பதை பல முறை சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் நாங்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம்.

(தொடரும்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
What is the main problem of this coming election, whether there is a Hindu vote bank, what symbol to contest in the election, IF PMK join DMK alliance. . what VCk's position , Thirumavalavan spoke in detail about various issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X