
மீண்டும் கொரோனா: தமிழ்நாடு நான்காவது அலையை நோக்கிச் செல்கிறதா?
தமிழ்நாட்டில் கடந்த வாரம் கொரோனா தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 2,000 தாண்டியதை அடுத்து, பள்ளிகளில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், 10 நபர்களுக்கு மேல் கூடும் இடங்களில் முக கவசம்அணிவதோடு, சமூக இடைவெளியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நான்காவது அலையை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாம் அலையின் போது, அரசு மருத்துவமனைகள், பொது இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த முறை தொற்று அதிகரிப்பு இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முன்பு செய்தது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவில்லை. பல அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் எந்த முன்னேற்பாடுகளுமின்றி செயல்படுவதாக அரசு மருத்துவர்களே வருத்தம் தெரிவிப்பதை பிபிசி தமிழ் அறிந்தது.
- கோவிட் 19 பூஸ்டர் தடுப்பூசி பலன் தருகிறதா? ஆய்வு சொல்லும் 7 விஷயங்கள் என்ன?
- தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு வருவதற்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருப்பது சரியா?
- கொரோனா வைரஸ் - பிபிசி தமிழில் வெளிவந்த முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஓர் உயர்அதிகாரி (பெயரை வெளியிட அவர் விரும்பவில்லை), கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில் மிகவும் மோசமான பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
இந்த செய்தி வெளிவரும் வேளையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குறைந்தது 10 நபர்கள் கொரோனாவுக்கான சிகிச்சையில் இருக்கிறார்கள்.
அதாவது 20 நபர்கள் பாதிப்புடன் வந்தால், 10 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த 20 நபர்களில் இளவயது நபர்கள், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், சுவாச பிரச்சனை இல்லாத நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அனுப்பிவைக்கப்படுகின்றனர்,''என்கிறார்.
''பள்ளிகள் திறந்துள்ளதால், பல குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி பிரச்னைகள் வந்திருக்கும். அதிலும், மூன்று நாட்களுக்கு மேலும் காய்ச்சல்,சளி பாதிப்பு இருந்தால்தான் அவர்கள் வருகிறார்கள். பலரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவதில்லை. பள்ளிகள், பணியிடங்கள், ஹாஸ்டல் போன்ற இடங்களில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானால், அனைவரும் சோதனை செய்துகொள்ளவேண்டும் என அரசு வலியுறுத்துவதால் ஒரு சிலர் கொரோனா சோதனை செய்துகொள்கிறார்கள்.
மற்ற வகையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை என்பது தினமும் வெளியிடப்படும் எண்ணிக்கையைவிட 10 முதல் 20 மடங்கு அதிகமாகதான் இருக்கும்,''என்கிறார். மேலும் பல மருத்துவமனைகளில் கடந்த கால கொரோனா தாக்கத்தின்போது சிறப்பு வார்டுகளாக செயல்பட்ட பல வார்டுகள் தற்போது கொரோனா வார்டாக இல்லை என்றும் குறிப்பிட்டார்.
''ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டாக இருந்த டவர் பிளாக் வார்டு தற்போது புறநோயாளி பிரிவாக செயல்படுகிறது. அதனால், வெறும் 20 நபர்கள் சிகிச்சை பெறும் இடமாக தற்போது ஒரு வார்டு கொரோனா வார்டாக செயல்படுகிறது,''என்கிறார்.
தற்போது அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு நான்காவது அலையாக இருக்குமா என்ற கேட்டபோது, ''நான்காவது அலை வந்துவிட்டதா என்று உடனே சொல்லமுடியாது. கொரோனா வைரஸின் ஜெனிடிக் சோதனை செய்தால் மட்டுமே அது தெளிவாகும். அதனால், சுவாச பிரச்சனை, ஆஸ்துமா, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்
மற்றொரு மருத்துவர் சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில்,ஒரு சில குழந்தைகளுக்கு, மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் (எம்ஐஎஸ்-சி) என்ற பல உறுப்புகளை பாதிக்கும் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறுகிறார். ''சுமார் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த எம்ஐஎஸ்-சி ஏற்படும். இந்த வகையான நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவதை பார்க்கமுடிகிறது. இந்த தாக்கம் கொரோனாவுடன் தொடர்புடையதுதான் என்பதால், அதிக கவனம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டால், அவர்களுக்கு அதிகப்படியாக சிக்கல்கள் ஏற்படுகின்றன,'' என்கிறார் அந்த மருத்துவர்.
எம்ஐஎஸ்-சி தாக்கம் என்பது இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, தோல், கண்கள் அல்லது இரைப்பை குடல் உறுப்புகள் உட்பட பல்வேறு உடல் பாகங்களை பாதிக்கும் என்கிறார் மருத்துவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்