ஒடிசா மாணவிகள் விடுதியில் நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க மந்திரவாதிகளை அழைக்கும் ஆசிரியர்கள்!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மாணவிகள் விடுதி ஒன்றில் நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு பதிலாக மந்திரவாதிகள் தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடைசியாக மந்திரவாதி வந்தபோது புறா பலி கொடுக்கப்பட்டாக கூறப்படுகிறது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் ஜெய்பட்னா என்ற இடத்தில் மாணவிகள் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் 110 பெண்கள் இலவசமாக தங்கி வருகின்றனர்.

இந்த விடுதியில் நோயுற்ற மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டருக்கு பதிலாக, மந்திரவாதிகள் தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் விடுதிக்குள் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. அவ்வப்போது முதல்வர் மந்திரவாதிகளை மட்டும் அனுமதிக்கிறார்.
கெட்ட ஆவிகளை விரட்டுவதற்கு பூஜைகள் செய்வதாக கூறி அந்த மந்திரவாதிகள் ஏதோ செய்கிறார்கள். இதில் சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நிலைமை மோசமடைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னரே அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருப்பினும் அந்த மாணவி குணமடையவில்லை.
மந்திரவாதிகளால் குணமடைந்ததாக நம்பும் மாணவி ஒருவர் கூறுகையில், "எப்பொழுதெல்லாம் எங்களுக்கு பேய் பிடிக்கிறதே அப்பொழுது ஆசிரியர்கள் மந்திரவாதியை அழைப்பார்கள். மந்திரவாதியின் கடைசி வருகையின் போது புறா பலி கொடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு பிறகு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.