For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளி விபத்து... இறந்ததாகக் கருதப்பட்டு அடக்கம் செய்யப் பட்ட சிறுவன் உயிர் பெற்ற அதிசயம்!

Google Oneindia Tamil News

Telangana bus crash: 'Dead' boy comes alive on birthday
ஹைதராபாத்: பள்ளிப் பேருந்து ரயிலில் மோதிய விபத்தில் பெயர்க் குழப்பம் காரணமாக தவறுதலாக ஒரு மாணவனின் சடலம் உயிருடன் இருந்த மாணவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட குழப்பம் தற்போது தெரிய வந்துள்ளது.

இதனால் தங்கள் மகன் இறந்து விட்டதாகக் கருதிய பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சியும், தங்கள் மகன் உயிருடன் சிகிச்சைப் பெற்று வருகிறான் எனக் கருதிய பெற்றோருக்கு சோகமும் உண்டாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டையில் பள்ளிப் பேருந்து ஒன்று நாந்தேடு பயணிகள் ரயில் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 16 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர்.

தடை...

படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காயமடைந்த குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வெளியே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இறுதிச் சடங்கு...

இதற்கிடையே, விபத்தில் பலியான மாணவ - மாணவியரின் உடல்கள் அவர்களது பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. முகம் சிதைந்த நிலையில் இருந்த சிறுவனது உடலை கிருஷ்ணாபூரை சேர்ந்த சுவாமி கவுடு என்பவரின் மகன் தனுஷ் என ஒப்படைத்துள்ளனர். சுவாமி கவுடுவும் சோகத்துடன் கிருஷ்ணாபூரில் இறுதிச் சடங்குகளை நடத்தி அடக்கம் செய்தார்.

சிகிச்சைப் பெற்ற மாணவன்...

இந்த நிலையில் செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு சிறுவன் இன்று காலை மயக்கம் தெளிந்து கண் விழித்தான். அவனிடம் மருத்துவர்கள் உன் பெயர் என்ன? தந்தை பெயர், எந்த ஊர் என்ற விவரங்களை கேட்டனர். அப்போது அவன் என் பெயர் தர்ஷன் கவுடு, வீட்டில் தனுஷ் என்று செல்லமாக கூப்பிடுவார்கள். எனது தந்தை சுவாமி கவுடு, கிருஷ்ணாபூர் எனத் தெரிவித்துள்ளான்.

பெயர்க் குழப்பம்...

ஆனால் ஆஸ்பத்திரி பதிவேட்டில் அவனது பெயர் தத்து என்றும் தந்தை இஸ்லாம்பூரை சேர்ந்த வீரபாபு என்றும் இருந்ததால் மருத்துவர்கள் குழப்பமடைந்தனர். வீரபாபுவின் மகள் புவனா இந்த ரயில் விபத்தில் உயிரிழந்து விட்டாள். அவளது உடலை அடக்கம் செய்துவிட்டு, மகன் தத்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பட்டியலில் இருந்ததால் மருத்துவமனைக்கு அருகிலேயே காத்திருந்தார்.

போலீசாருக்குத் தகவல்...

இந்நிலையில் பெயர்க் குழப்பம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இரு சிறுவர்களின் பெற்றோரையும் (சுவாமி கவுடு, வீரபாபு) அழைத்து வந்து இந்தக் குழப்பத்தை விவரித்துள்ளனர்.

இன்ப அதிர்ச்சி...

அப்போது தனது மகன் தனுஷ் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்திருந்த சுவாமி கவுடுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மகன் தனுஷை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவனும் தனது தந்தையை மருத்துவர்கள் மற்றும் போலீசாருக்கு அடையாளம் காட்டினான்.

சோகம்...

அதேசமயம் மகளை இழந்தாலும், மகனாவது கிடைத்தானே என்ற ஆறுதலில் இருந்த வீரபாபுவுக்கு தனது மகன் தத்துவும் இறந்துவிட்டான் என்ற தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது. அதோடு தனது மகனின் உடலையும் காணமுடியாமல் அவர் அதிர்ச்சியானார்.

ஒப்படைப்பு....

இது தொடர்பாக மருத்துவமனைக்கு வந்த தெலுங்கானா மாநில அமைச்சர் ஹரிஷ் ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இருவரின் பெற்றோரையும் அழைத்து சமாதானப்படுத்தினார். தனது மகன் உடலை கேட்டதால், வீரபாபுவை கிருஷ்ணாபூருக்கு அழைத்துச் சென்று சிறுவன் உடல் அடக்கம் செய்த இடத்தில் இருந்து தத்துவின் உடலை தோண்டி எடுத்து ஒப்படைத்தனர்.

இறுதிச் சடங்கு...

அந்த குழியை வெறுமனே மூடக்கூடாது என்ற சம்பிராயம் காரணமாக அந்த குழியில் ஒரு சேவலை போட்டு மூடினர். பின்னர் வீரபாபு தனது மகன் தத்துவின் உடலை இஸ்லாம்பூருக்கு கொண்டு சென்று தங்கள் வழக்கப்படி இறுதி சடங்குகளை செய்தார்.

பிறந்தநாள்...

இது குறித்து சுவாமி கவுடு கூறுகையில், ‘எனது மகனை பள்ளி பஸ்சில் ஏற்றிவிட்ட 10வது நிமிடத்தில் விபத்து பற்றி தகவல் கிடைத்தது. நானும், எனது மனைவி புஷ்பாவும் சம்பவ இடத்தை பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டோம். இன்று (நேற்று) எனது மகன் பிறந்த நாள். இந்த விழாவை கொண்டாட வந்த எனது மைத்துனர் விசாரித்து எனது மகனை மருத்துவமனையில் சேர்த்ததாக கூறினர்.

அடக்கம்...

பின்னர் நாங்கள் மருத்துவமனைக்கு சென்றபோது எங்கள் மகன் இறந்துவிட்டதாக கூறினர். விபத்தில் முகம் சிதைந்து இருந்தது. ஒரே உயரம், பருமன், வயது, சீருடை ஆகியவை காரணமாக எனக்கு சரியாக அடையாளம் காணமுடியவில்லை. எனவே உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்தேன்.

மறுபிறவி...

ஆனால் பிறந்த நாளிலேயே மீண்டும் மறுபிறவி எடுத்தது போல எனது மகன் எங்களுக்கு கிடைத்துள்ளான். தத்துவின் தந்தை வீரபாபுவிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவருக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அஞ்சலி....

இதற்கிடையே 18 பள்ளி மாணவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

English summary
It is like "rebirth" for six-year-old Darshan Goud, who was mistakenly believed to have been killed in the terrible train-school bus collision at an unmanned railway crossing that left 18 persons, including 16 children, dead in Telangana's Medak district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X