சபரிமலை மண்டலபூஜை : ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 பவுன் தங்க அங்கி ஊர்வலம்
பத்தனம்திட்டா: சபரிமலையில் மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று ஊர்வலமாக புறப்பட்டது.பல்லக்கு வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு 73 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பந்தளம் சித்திரை திருநாள் மகாராஜா 453 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கினார். மண்டல பூஜை தினத்தில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும் அந்த அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு மட்டும் அந்த நகைகள் அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துவரப்படும்.

ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து இன்று காலை தங்க அங்கி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாகப் புறப்பட்டது. இன்று மாலையில் ஓமல்லூர் ரத்தகண்ட சுவாமி கோவிலை வந்தடைகிறது. பின்பு அங்கு தங்கிவிட்டு 23ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்படுகிறது. பல்லக்கு வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு 73 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
25 ஆம் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு வந்து சேரும் தங்க அங்கியை மேள, தாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்வர். அன்று மாலை சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து 18 ஆம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு மண்டல பூஜை விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஐயப்பனை தரிசனம் செய்ய தினமும் 45 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று முதல் இந்த எண்ணிக்கை 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. சபரிமலை கோவிலில் பக்தர்கள் நேரடியாக வழிபடும் நெய் அபிஷேக நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கோவிலில் படி பூஜையும் நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவிலுக்கு வருவாயும் அதிகரித்து உள்ளது. உண்டியல், வழிபாடு மற்றும் பிரசாத விற்பனை மூலம் இதுவரை கோவிலுக்கு ரூ.58 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் அப்பம், அரவணை விற்பனை மூலம் மட்டும் ரூ.27 கோடி கிடைத்திருப்பதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பனுக்கு வரும் 25ஆம் தேதி மண்டல பூஜை முடிந்ததும், மகர விளக்கு திருவிழா தொடங்குகிறது. ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது.