For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்வையற்ற சிறார்களுடன் ஒரு நாள்.. ஒரு இளம் மாணவியின் நெகிழ்ச்சி அனுபவம்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மாணவி, பார்வையற்ற சிறார்களுடன் தான் செலவிட்ட ஒரு நாள் அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார்.

அந்த மாணவி கே. திவ்யா. பெங்களூருவைச் சேர்ந்த அவர் தனது அனுபவம் குறித்து ஒரு இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பார்வையற்ற சிறுவர்களுடன் தான் மேற்கொண்ட பயணம் குறித்தும் அந்த அனுபவம் குறித்தும் அவர் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார்.

மாணவி திவ்யாவின் அனுபவம் இதோ...

The Blind Make Us Human

பார்வையற்றோருக்கான பள்ளி

பார்வையற்றோருக்கான பள்ளி என்பது சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் சங்கமிக்கும் இடமாகும். பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் இங்கு பார்க்கலாம். இங்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை, பாகுபாடு இல்லை. ஏழை, பணக்காரரும் இல்லை. அனைவரும் ஒன்றுதான்.

ஒரே மரியாதை

இங்கு படிப்போர் என்ன கிரேட் வாங்குகிறார்கள் என்பது அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. மாறாக, அனைவருக்கும் சம மரியாதை கிடைக்கிறது என்பதுதான் இவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

தொண்டு

நான் கடந்த 2 மாதங்களாக வாரத்திற்கு ஐந்து நாட்கள் இவர்களுடன் செலவிட்டு அவர்களுக்கு தொண்டு செய்து வருகிறேன். ஒவ்வொரு மாதமும் இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியரை அருகில் உள்ள ஏதாவது முக்கியமான இடத்திற்குக் கூட்டிச் சென்று சுற்றிக் காண்பிப்பார்கள்.

லால்பாக் சுற்றுலா

இந்த முறை லால்பாக் பூங்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தோம். மாணவர்களுக்கு செம குஷி. நாங்கள் எங்கு கூட்டிச் சென்றிருந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். சாலைகளைக் கடப்பது அவர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

வேடிக்கைகள்

லால்பாக் பயணம் வேடிக்கை நிரம்பியதாக இருந்தது. அப்போது லேசான மழையும் பெய்து கொண்டிருந்தது. மாணவர்களுக்கு மழை புதிதில்லை. நிறைய முறை நனைந்துள்ளனர். எனேவ நாங்கள் சென்ற வேனுக்கு வெளியே கையை நீட்டி மழையை ரசித்து அனுபவித்தனர். சாலையில் போன காரின் சத்தத்தைக் கேட்டு ஹலா ஹலோ என்று ஜாலியாக கத்தினர்.

வாங்க மலையேறலாம்

லால்பாக்கை ஒன்று அல்லது 2 மணி நேரத்தில் சுற்றிப் பார்க்க முடியாது. அவ்வளவு பெரியது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய சிறிய மரங்கள் நிறைந்து காணப்படும். அங்கு ஒரு மலை உண்டு. அதில் ஏறிப் பார்த்தால் தெற்கு பெங்களூரை முழுமையாக காண முடியும். நாங்கள் மலையேற முடிவு செய்தோம்.

ஒரு பொய் சொன்னேன்!

வேனை விட்டு இறங்கியதுமே மலையேறும் இடத்தையொட்டி உள்ள உணவுப் பொருள் விற்பனையாளர்கள், ஸ்னாக்ஸ் வாங்கிட்டுப் போங்கம்மா, போற வழியில சாப்பிடலாம் என்றனர். நானோ, இல்லை இல்லை எங்க கிட்டேயே இருக்கு (உண்மையில் எதுவுமே இல்லை) என்று பொய் சொல்லி விட்டு அவர்களைக் கண்டு கொள்ளாமல் மலையேற ஆயத்தமானேன்.

ஆறு பேர் குழுவுடன்

என் பொறுப்பில் ஆறு சிறார்கள் விடப்பட்டனர். அவர்களை பத்திரமாக மலை மீது ஏற்றி சுற்றிக் காட்டி விட்டு திரும்பக் கூட்டி வர வேண்டும். முதலில் மலையேறுவது ஜாலியாக இருக்காது, கஷ்டமாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு.

கையைப் பிடிச்சுக்கங்க

ஆறு பேரையும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு வரிசையாக வருமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் போகப் போக பலமாக அடித்த காற்று, உயரம் காரணமாக சிறார்கள் பட்டம் போல அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமாக போய் வந்தனர். ஆனால் நல்லபடியாக மலையை ஏறி முடித்தோம்.

மலைக்கு மேலே குட்டி மண்டபம்

மலைக்கு மேலே ஒரு குட்டி மண்டபம் உள்ளது. நான் சிறார்களை அங்கு கூட்டிச் சென்றேன். அங்கிருந்து பார்த்தால் என்ன தெரியும், எப்படித் தெரியும் என்று தனக்குச் சொல்லுமாறு ஒரு பையன் என்னிடம் கேட்டான். நான் உனது வீட்டை பார்க்கலாமா என்று கேட்டேன். அதற்கு அவன் என் வீடுதானே எனக்கு நல்லாத் தெரியுமே.. நல்லா பெரிய வீடு, ஆனா தூரமாக இருக்கு என்றான் சிரித்துக் கொண்டே.

பார்த்து மெதுவா இறங்கனும்

மலையேற்றம் முடிந்தது. இப்போது கீழே இறங்க வேண்டும். அனைவரும் பத்திரமாக தரையிறங்க வேண்டும் என்று நினைத்த நான் மெதுவாக இறங்குங்க என்று கூறிக் கொண்டே வந்தேன். ஆனால் அவர்களோ சர்ரென்று வேகமாக இறங்கவே ஆசைப்பட்டனர். விட்டால் குடுகுடுவென ஓடிப் போயிருப்பார்கள். எனது சத்தத்தையும், பயத்தையும் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. காரணம் இதுதான் அவர்கள் முதல் முறையாக மலை ஏறி இறங்குவது. எனவே அவ்வளவு ரசித்தார்கள். எப்படியோ ஒரு வழியாக கீழே வந்து சேர்ந்தோம்.

கையில் பணத்தைத் திணித்த கேமராமேன்

அப்போது அங்கு குரூப் போட்டோ எடுக்கும் புகைப்படக்கலைஞர் ஒருவர் எங்களையே உற்றுப் பார்த்தார். பின்னர் திடீரென என்னை நோக்கி வந்தவர் எனது கையில் ரூ. 200 பணத்தை வைத்தார். நான் ஏன் என்று கேட்டேன். என்னால் இவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில் உதவ முடியாது என்றபோது என்னால் பேச முடியவில்லை. அவர் ஒரு நாளைக்கு ரூ. 1000 வரை சம்பாதிப்பாராம். அதில் எங்களிடம் ரூ. 200 பணத்தைக் கொடுத்து விட்டார்.

மரியாதை கூடியது

நான் எப்போதுமே இதுபோன்ற இடங்களில் புகைப்படம் எடுப்பவர்களைப் பார்த்தாலே விலகி ஓடுவேன். காரணம், குரூப்பாக புகை்படம் எடுக்க பெரிய அளவில் பணத்தைக் கறக்கிறார்களே என்ற எண்ணம்தான். ஆனால் அந்த சம்பவம் எனது எண்ணத்தை மாற்றிப் போட்டது. அவரது செயல் என்னை நெகிழ வைத்தது. பின்னர் அவரிடம், நான் சும்மா இவர்களுக்கு உதவி செய்யத்தான் வந்தேன். அவர்களது ஆசிரியரிடம் கொடுங்கள் என்று கூறி அவரிடம் பணத்தைக் கொடுத்தேன்.

ஆரஞ்சுக் கலர் குச்சி ஐஸ்

பின்னர் சிறார்களிடம் சென்றேன். அங்கு அவர்கள் ஆளுக்கு ஒரு குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சரி டீச்சர்தான் வாங்கிக் கொடுத்திருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் பிறகுதான் தெரிந்தது, நான் யாரிடம் எங்களிடம் இருக்கு வேண்டாம் என்று பொய் சொல்லி விட்டுச் சென்றேனோ அவர்கள்தான் அந்த ஐஸை இலவசமாக கொடுத்துள்ளார்கள் என்று. மீண்டும் நெகிழ்ந்தேன். இப்படியும் மனித நேயமா என்று ஆச்சரியப்பட்டேன்.

அவர்கள் மீது தவறில்லை

அதிகமாக விலை வைத்து விற்பவர்கள் என்று பலமுறை நான் நினைத்துள்ளேன். ஆனால் எனது எண்ணம் தவறு என்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அன்று அனைவரும் சாப்பிட்ட ஐஸ் மற்றும் கோன் ஆகியவற்றின் விலை கிட்டத்தட்ட ரூ. 1450 இருக்கலாம். ஆனால் அந்த ஐஸ் வியாபாரிகள் ஒரு பைசா கூட எங்களிடமிருந்து வாங்கவில்லை.

அனுபவம் புதிது

பார்வையற்றோரிடம் அனுபவங்கள் குறைவாக இருக்கும் என்பார்கள். ஆனால் அந்த எண்ணத்தை மாற்றிப போட்டனர் அந்த சிறார்கள். அவர்களுடைய பேச்சுக்கள், செயல்கள் மட்டுமல்லாமல், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டிய அன்பு, வெளிப்படுத்திய உணர்வுகள் எல்லாமே எனக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. நான் தினசரி பார்க்கும் இறுகிய முகத்துடன் மக்களுக்கு மத்தியில் இவர்கள் மிகச் சிறந்தவர்களாக தென்பட்டனர். இவர்கள்தான் உண்மையில் நம்மை மேலும் மனித குணம் கொண்டவர்களாக மாற்றுகிறார்கள் என்று கூறியுள்ளார் திவ்யா.

English summary
Bangalur girl K Divya has narrated her melting exoeriance with the blind in a blog.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X