
கட்சியிலிருந்து கழன்று கல்தா கொடுக்கும் எம்எல்ஏக்கள்.. தொடரும் தலைவலியால் அதிர்ச்சியான கோவா பாஜக
பானஜி : கோவாவில் பாஜக தலைமையிலான அரசு துணிச்சலான முகத்தை காட்டி வந்தாலும் கட்சியில் இருந்து தொடர்ந்து கிறிஸ்தவ எம்எல்ஏக்கள் விலகி வருவது அக்கட்சியினருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
கோவா மாநில சட்டசபைக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களைப் போன்றே பஞ்சாப் மாநிலத்திலும் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பிரச்சார வியூகங்கள் வேட்பாளர் தேர்வு என அடுத்தடுத்து முக்கிய நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வரும் நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என பாஜக தலைமையிலான அரசு துணிச்சலாக இருந்தாலும் தொடர்ந்து அங்கிருந்து கிறிஸ்தவ எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.
போலீஸ் எஸ்பி கைகளை வெட்ட பிளான் போட்டாரா நடிகர் திலீப்.. பாய்ந்தது புதிய வழக்கு.. நடந்தது என்ன?

விலகும் பாஜக எம்எல்ஏகள்
இந்த நிலையில் திங்களன்று கலங்குட் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மைக்கேல் லோபோ தனது எம்எல்ஏ பதவியையும் பாஜகவின் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். தற்போது ராஜினாமா செய்துள்ள லோபோ கட்சியில் சில காலங்களாகவே அதிருப்தியில் இருந்ததாகவும், தனது மனைவி கலாவுக்கு சியோலில் தொகுதியில் சீட்டு பெற அவர் முயற்சி செய்து வந்த நிலையில் அவரது திடீர் ராஜினாமா கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் திட்டம்
மைக்கேல் லோபோ காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வார் என வலுவான யூகங்கள் வெளியாகிய நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேரும் திட்டத்தை தற்போது அவர் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கோவாவில் களம் கண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மைக்கேலை தங்களது பக்கம் இழுத்துக் கொள்ள ஆர்வமாக உள்ளது என்றும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அவருடன் பேசியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜகவுக்கு பின்னடைவு
கலங்குட் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ வாக இருந்த மைக்கேல் லோபோ கோவாவில் வலுவான தலைவராக இருந்தார். குறைந்தது ஐந்து முதல் ஆறு தொகுதிகளில் அவர் செல்வாக்கு பெற்றிருந்ததாக கூறப்படும் நிலையில், பாஜகவின் நடவடிக்கைகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் பாஜக இனி சாமான்களின் கட்சி அல்ல என்று தனக்கு வாக்களித்த அவர்கள் தன்னிடம் கூறியதாகவும் கட்சி ஊழியர்களுக்கு தற்போது எந்த முக்கியத்துவமும் இல்லை எனக் கூறியதால் தான், தான் விலகியதாக கூறினார். மைக்கேல் லோபோ காங்கிரஸ் கட்சியில் இணைய முயற்சி வெற்றி பெற்றால் பாஜக வலுவாக இருக்கும் வடக்கு கோவாவில் அது மிகப்பெரிய பின்னடைவை பாஜகவினருக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் பட்டியல்
மைக்கேல் லோபோ மட்டும் பாஜக கட்சியில் இருந்து விலகிய முதல் எம்எல்ஏ கிடையாது. கடந்த மாதம் கார்டோலிம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான அலினா சல்தான்ஹா பாஜகவில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். வாஸ்கோ சட்டமன்ற தொகுதி கிறிஸ்தவ எம்எல்ஏ கார்லோஸ் அல்மேடா பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். வேலிம் எம்எல்ஏவும் அமைச்சருமான பிலிப் நேரி ரோட்ரிக்ஸ் மற்றும் நுவெம் எம்எல்ஏ வில்ஃப்ரே டிசோசா ஆகியோரும் விரைவில் பாஜகவில் இருந்து விரைவில் விலகலாம் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.

தோல்வி அச்சம்
இந்த எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியதற்கு முக்கியக் காரணம் பாஜக கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடுவதில் ஏற்பட்ட அசௌகரியம்தான் எனவும், இந்த எம்எல்ஏக்கள் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதால் , அங்கு பாஜகவுக்கு ஆதரவு இல்லை எனவும், தோல்வி அடைய வாய்ப்புண்டு என்ற பயத்தில், காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவுக்கு பயமில்லை
எனினும், முதல்வர் பிரமோத் சாவந்த் கட்சி விலகல்களால் கவலையடையவில்லை எனவும் கூறப்படுகிறது . பாரதிய ஜனதா கட்சி தாய்நாட்டிற்கு முழு ஈடுபாட்டுடன் தொடர்ந்து சேவை செய்யும் ஒரு பெரிய குடும்பம் எனவும், ஒரு சில விலகல்கள் பேராசை மற்றும் தனிப்பட்ட நலன்களுக்காக இருந்தாலும், எங்கள் நல்லாட்சி நிகழ்ச்சி நிரலைத் தடுக்க முடியாது என்று மைக்கேல் லோபோவின் ராஜினாமாவுக்குப் பிறகு முதல்வர் பிரமோத் சவந்த் ட்வீட் செய்துள்ளார். இதற்கிடையில் மேயம் தொகுதியின் மற்றொரு பாஜக எம்எல்ஏ பிரவீன் ஜான்டி திங்களன்று ராஜினாமா செய்ததோடு, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியில் இணைந்தார்.