உ.பி., பஞ்சாப்பை விடுங்க.. இழுபறி கணிப்புகளால் பரபரப்பை கிளப்புகிறது கோவா, உத்தராகண்ட்! என்னாகும்?
பானாஜி: உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக இருந்துவந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பிற மாநில மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி உத்தரப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாபில் முதல் முறையாக ஆம் ஆத்மியும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால், உத்தராகண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் இம்முறை இழுபறி நீடிக்கும் என்பதையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சிப்பூசல் காரணமாக 3 முதலமைச்சர்கள் மாறும் நிலை ஏற்பட்டது. இது மக்களிடையே ஆட்சியின் மீதும், பாஜகவின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அம்மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தராகண்ட்
அதையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட உத்தராகண்ட் மாநிலத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி காங்கிரஸ் - பாஜக ஆகிய கட்சிகள் சமமான அளவில் தொகுதிகளை பங்கிட்டுக்கொள்ளும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் அங்கு தனித்துப் போட்டியிட்டுள்ள ஆம் ஆத்மி மற்றும் இதர மாநில கட்சிகளே கிங் மேக்கராக இருப்பார்கள் என கருதப்படுகிறது.

கோவா நிலவரம்
இதே நிலைமைதான் கோவாவிலும் நிலவுகிறது. முதலமைச்சராக இருந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பின்னர் அவரது மகனுக்கு முக்கியத்துவம் தராதது பாஜகவுக்குள் உட்கட்சிப் பூசலாகவே உருவெடுத்தது. இந்த நிலையில் தேர்தலை சந்தித்துள்ள பாஜக, காங்கிரஸுக்கு சமமான இடங்களில் வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கட்சி தாவல்கள்
கடந்த முறை காங்கிரஸை விட குறைவான இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, சுயேட்சைகள் மற்றும் ஓரிரு இடங்களில் வென்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 17, பாஜக 13 தொகுதிகளில் வென்றபோதிலும், பாஜகதான் ஆட்சியமைத்தது. கடந்த முறையே குதிரை பேர நாடகங்களை சந்தித்த கோவாவில் அதிக இடங்களில் வெற்றிபெற்றும் ஆட்சி அமைக்க முடியாத காங்கிரஸ் கட்சி, இம்முறை தேர்தலுக்கு முன்பாகவே வேட்பாளர்களை வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்று சத்தியப் பிரமானம் வாங்கியது.

பரபரப்பு
குதிரை பேரத்தை தவிர்க்க காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏற்கனவே ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்றைய நாளின் முடிவில் ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக இருக்கப்போவது உத்தரப்பிரதேசமோ, பஞ்சாபோ அல்ல... அதிகம் கண்டுகொள்ளப்படாத உத்தராகண்டும், கோவாவும்தான்.