For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜிவ் வழக்கு: குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கே... எழுத்துப்பூர்வ மனு தாக்கல்

Google Oneindia Tamil News

டெல்லி : முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை முடிவு செய்யும் அதிகாரம் உள்ள அரசு தமிழக அரசுதான்' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துபூர்வ மனுவை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

supreme court

இதை தொடர்ந்து அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து சட்டப்பேரவையிலும் அறிவித்தது. இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் கடந்த 4 வாரங்களாக விசாரிக்கப்பட்டது.

விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், சிபிஐ விசாரித்த வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும் மாநில அரசுக்கு இல்லை எனவும் வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஆயுள் தண்டனை கடந்து சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசிடம் கேட்க வேண்டும் என்பது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாகும், என்று வாதிட்டார்.

முருகன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானி, யூக் சவுத்ரி ஆகியோர், தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக நீதிமன்றம் குறைத்தால், அதோடு நீதிமன்றத்தின் கடமை முடிந்து விட்டது. ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது என்று வாதிட்டனர்.

வழக்கு விசாரணை கடந்த 12 ஆம் தேதியுடன் முடிந்தது. அப்போது, வழக்கில் சம்பந்தப்பட்ட யாரேனும் தங்களது எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது...

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவில் எந்த சட்டவிதி மீறலும் இல்லை.

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 432 (7) ல், இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே, இவர்களின் விடுதலை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தை நீதித்துறை கேள்வி கேட்க முடியாது. ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை விதிக்க முடியாது. இவர்கள் விடுதலையில் சம்பந்தப்பட்ட அரசு தமிழக அரசு தான். மத்திய அரசு இல்லை. எனவே, தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Government lawer filed written petition in the supreme court that the power of release Rajiv assassination convicts to the state government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X