• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

'ஜெய்பீம்' மீது பா.ம.க. காட்டிய அக்கறை, இடஒதுக்கீட்டில் இல்லையா? - விமர்சனமும் பதிலும்

By BBC News தமிழ்
|

ஜெய்பீம்' பட விவகாரத்தில் கடும் எதிர்ப்பு காட்டிய பாட்டாளி மக்கள் கட்சி, கள்ளக்குறிச்சியில் இருளர் பெண்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது. நடிகர் சூர்யாவுக்குக் காட்டிய எதிர்ப்பை இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ம.க காட்டியிருந்தால் ஏதேனும் மாற்றம் நடந்திருக்கும்' என வன்னிய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. என்ன நடக்கிறது?

நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் ஓ.டி.டியில் வெளியான ஜெய்பீம்' படத்தில் காட்டப்பட்ட போலீஸ் எஸ்.ஐ கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் அவரது வீட்டில் மாட்டப்பட்டிருந்த காலண்டர் ஒன்றும் வன்னியர் சமூகத்தினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இருளர் சமூகத்தின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் படம் வெளிவந்திருந்தது. ஆனால், படத்தில் வன்னியர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதால் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ம.கவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்குப் படத்தின் தயாரிப்பாளராக நடிகர் சூர்யாவும் பதில் அறிக்கை வெளியிட்டார்.

ஜெய்பீம்' படத்தில் சொல்லப்படும் கதையின் உண்மை வடிவத்தில் நீதிக்காக போராடிய பலரும் வன்னியர்களாக இருக்கும்போது, அவர்களைக் குற்றவாளிகளாக சித்தரிப்பதாகக் கூறி 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பா.ம.க தரப்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யாவின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த விவகாரம் இரு தரப்புக்குமான மோதலாக இருந்ததால், படத்தின் இயக்குநர் ஞானவேல் தமது வருத்தத்தை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், ஜெய்பீம் திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் இருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம் ஒரு சமுதாயத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தை பிரதிபலிப்பதுதான் அந்த காலண்டரின் நோக்கம்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இயக்குநர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டாலும் பிரச்னை முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை.

திருக்கோவிலூர் சம்பவம்

இந்நிலையில், திருக்கோவிலூரில் இருளர் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநில டி.ஜி.பி சைலேந்திர பாபுவுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளது, வன்னிய அமைப்புகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடந்த 22 ஆம் தேதி டி.ஜி.பிக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம். திருக்கோவிலூர் அருகில் இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவில்லை. தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய இவ்வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கூட இன்னும் தாக்கல் செய்யப்படாதது கவலையும் வேதனையும் அளிக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் அங்கமாக இருந்த திருக்கோவிலூரை அடுத்த தி.மண்டபம் பகுதியில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்த காசி என்பவரை சரியாக பத்தாண்டுகளுக்கு முன் இதே நவம்பர் 22-ஆம் தேதி திருக்கோவிலூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அன்றிரவு இருளர் குடியிருப்புக்குள் நுழைந்த காவலர்கள் சோதனை என்ற பெயரில் அங்குள்ள வீடுகளை சூறையாடினார்கள்.

டி.ஜி.பிக்கு நன்றாகத் தெரியும்

பின்னர் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை விசாரணைக்காக, ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் இரு வாகனங்களில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் பெண்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டும் அங்குள்ள காட்டுக்குள் ஓட்டிச் சென்ற காவலர்கள், அங்கு 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்குத் தொடரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாததை நியாயப்படுத்த முடியாது. வழக்கு தாமதப்படுத்தப்படுவதற்கு காவல்துறைதான் காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக குற்றவழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீண்ட தாமதத்திற்குப் பிறகு, சில ஆண்டுகளுக்கு முன் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்தக் குற்றப்பத்திரிகையில் உள்ள குறைகளை களைந்து அனுப்பும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் அனுப்பியது. ஆனால், காவல்துறை இன்றுவரை திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் தற்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவுக்கு நன்றாகத் தெரியும். இந்த கொடிய நிகழ்வு நடந்த போது வடக்கு மண்டல காவல்துறை தலைவராக இருந்தவர் அவர்தான். இவ்வழக்கு குறித்த அனைத்து உண்மைகளையும் அறிந்த அவருக்கு, இந்த வழக்கை இயல்பான முடிவுக்கு கொண்டு வரும் கடமை உள்ளது' என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏன் இவ்வளவு முரண்பாடு?

The way PMK showed intrest in Jai Bhim and Reservation: A comparison
Getty Images
The way PMK showed intrest in Jai Bhim and Reservation: A comparison

ராமதாஸின் அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வன்னிய சத்திரியர் கூட்டு இயக்கத்தின் தலைவர் சி.ஆர்.ராஜன், வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கை மாநில அரசும் பாட்டாளி மக்கள் கட்சியும் சரியாக எதிர்கொள்ளவில்லை. இடஒதுக்கீட்டுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததும், உச்ச நீதிமன்றத்தில் எங்கள் அமைப்பின் சார்பாக மேல்முறையீடு செய்தோம். இதனை அறிந்து, நாங்களும் மேல்முறையீடு செய்ய வருகிறோம், சற்று பொறுங்கள்' என மாநில அரசுத் தரப்பில் இருந்து எங்களிடம் பேசினார்கள். ஆனால், பத்து நாள் கழித்துதான் மேல்முறையீடு செய்வதற்கு மாநில அரசு முன்வந்தது'' என்கிறார்.

மேலும்,100 ஆண்டுகளுக்குப் பிறகு வன்னிய சமூகத்துக்குக் கிடைத்த வரப் பிரசாதமாக அ.தி.மு.க கொடுத்த இடஒதுக்கீடு என்பது இருந்தது. அதனை பாதுகாக்கத் தவறிவிட்டோம் என எண்ணத் தோன்றுகிறது'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய சி.ஆர்.ராஜன், ஜெய்பீம் விவகாரத்தில் படக்குழுவினருக்கு கொடுத்த அழுத்தத்தை வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ம.க கொடுத்திருந்தால் ஏதேனும் மாற்றம் நடந்திருக்கும். அந்தப் படத்தில் பழங்குடி சமூகம் பாதிக்கப்படுவதைக் காட்சிப்படுத்தி படமாக வெளிவந்தபோது அதனை அன்புமணி எதிர்த்தார். ஆனால், தற்போது ராமதாஸ் டி.ஜி.பிக்கு கடிதம் எழுதுகிறார். ஏன் இவ்வளவு முரண்பாடு எனத் தெரியவில்லை.

திசைதிருப்பும் முயற்சியா?

அக்னி கலசம்' என்பது மதிப்புக்குரிய ஒன்றுதான். அது 1888 ஆம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. அதனை படத்தில் காலண்டர் வடிவில் வைத்ததும் தவறுதான். அந்த விவகாரத்தில் இயக்குநர் வருத்தம் தெரிவித்ததும் அத்துடன் முடித்திருக்கலாம். ஆனால், இடஒதுக்கீடு விவகாரத்தை தள்ளிப் போடுவதற்காக பட விவகாரத்தைப் பா.ம.க கையில் எடுப்பதாகவே பார்க்கிறோம்'' என்கிறார்.

இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பல போராட்டங்களை பா.ம.க முன்னெடுத்தது. இதனை திசைதிருப்புவதாக எப்படிப் பார்க்க முடியும்?'' என்றோம்.

வன்னியர் இடஒதுக்கீட்டை அ.தி.மு.க கொடுத்ததால் அவர்களுக்குப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதால் இந்த விவகாரத்தை தள்ளிப் போடுவதற்கு மாநில அரசு முயற்சிப்பதாக எங்கள் சமூக மக்கள் கருதுகிறார்கள். இதனை தள்ளிப் போடுவதன் மூலம் அடுத்த தேர்தலுக்குப் பயன்படுத்த நினைக்கிறார்களோ எனவும் சந்தேகப்பட வேண்டியுள்ளது. வட தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகம் பின்தங்கியுள்ளது. மாநில அரசின் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் வன்னிய மாணவர்கள் பலரும் இடம்பெறுவதில்லை.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது, ஜெய்பீம் பட விவகாரத்தில் பா.ம.க காட்டிய அக்கறையை இடஒதுக்கீட்டில் காட்டியிருந்தால் அவசரச் சட்டம் கொண்டு வரும் வேலைகள் நடந்திருக்கும். அவ்வாறு பா.ம.க செய்யவில்லை. இருளர் சமூகத்துக்கு எதிராக பா.ம.க செயல்படுவதாக சமூக ஊடகங்களில் காட்டப்படுவதால் அதனை சரிசெய்யும் முயற்சியில் இப்படியொரு அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டதாகவும் பார்க்கிறோம்'' என்கிறார்.

பா.ம.க சொல்வது என்ன?

இதுதொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ஜெய்பீம் படத்தில் அக்னி கலசத்தைப் பயன்படுத்தியதற்காகத்தான் நாங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தோம். அதற்காக இருளர்களுக்கோ, குறவர்களுக்கோ நாங்கள் எதிரானவர்களா என்ன? எங்கள் சமூகத்தைத் தவறாக சித்தரித்ததற்காக எதிர்ப்பைக் காட்டினோம்.

அதேபோல், திருக்கோவிலூரில் இருளர் பெண்கள் பாதிக்கப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளோம். அனைத்தையும் பொறுப்புணர்ந்து செய்யும் கட்சியாக பா.ம.க உள்ளது'' என்கிறார்.

இது முரண்பாடாக உள்ளதாக சில வன்னிய அமைப்புகள் சொல்கின்றனவே?'' என்றோம். வெளியில் உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். இடஒதுக்கீட்டுக்காக பல ஆண்டுகாலம் தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த சமூகத்துக்கு என்ன தேவையோ அதனைச் செய்வோம். அதேபோல், 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை வாங்காமல் ஓய மாட்டோம்'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
The way PMK showed intrest in Jai Bhim and Reservation: A comparison
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X