அஸ்ஸாமில் நூலிழை பலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே!
குவாஹாத்தி: அஸ்ஸாமில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் கடும் போட்டி நிலவும் என்றும் மிக குறைந்த பெரும்பான்மையில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 126 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை பலம் பெற 64 இடங்களில் வெல்ல வேண்டியது அவசியமாகிறது.
பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்க வைக்க போராடுகிறது. அது போல் காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. இந்த நிலையில் டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் பாஜக கூட்டணி 67 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 57 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 74 இடங்களில் பாஜக கூட்டணியும் 39 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றது. அடுத்த முதல்வராக தற்போதைய முதல்வர் சர்பானந்த சோனோவாலே வர வேண்டும் என 45.2 சதவீதம் பேர் விரும்புகிறார்கள். காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் மக்களின் அடுத்த சாய்ஸாக உள்ளார்.
மத்திய அரசின் செயல்பாடுகளில் மிகவும் திருப்தி இருப்பதாக 41.04 சதவீதம் பேர் கூறுகிறார்கள். அது போல் மோடியின் செயல்பாடுகளில் 42.42 சதவீதம் பேருக்கு மிகவும் திருப்தி ஏற்பட்டுள்ளது. நாட்டில் முக்கிய பிரச்சினையாக உள்ளூர் விவகாரங்கள், விலையுயர்வு, வேலையின்மை உள்ளிட்டவை இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.