திருப்பதி பிரம்மோற்சவம்: அன்ன வாகனம், சிம்ம வாகனத்தில் உலா வந்த மலையப்பசாமி
திருப்பதி: திருப்பதி பிரம்மோற்சவத்தின் மூன்றவது நாளான இன்று மலையப்பசாமி சிம்மவாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 23ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 5.48 மணிக்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரவு கோயிலுக்கு எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்துகொண்டு ஊர்வலமாக வந்து, செயல் அலுவலர் அனில்குமார் சிங்காலிடம் வழங்கினார்.
மலையப்ப சாமி பவனி
முதல்நாள் உற்சவமாக இரவு 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள் பெரிய சேஷ வாகனத்தில் நான்குமாடவீதியில் பவனி வந்தார். அப்போது மாட வீதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி கோவிந்தா முழக்கமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் உற்சாக முழக்கம்
பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார். நேற்றிரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்தார். கோலாட்டம், பஜனைகள் களைகட்ட பல்வேறு வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலத்தில் வந்தனர்.

சிம்ம வாகனத்தில் பவனி
பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை மலையப்பசாமி சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக 4 மாட வீதிகளில் பவனி வந்தார். விலங்குகளில் வலியது சிங்கம். ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில் விலங்குகளில் நான் சிம்மமாக இருப்பேன் என கூறியுள்ளார்.

தரிசித்த பக்தர்கள்
பாதி மனிதன், பாதி சிங்கம் உருவம்தான் நரசிம்ம அவதாரம். இதை விளக்கும் வகையில் மலையப்பசுவாமி யோகநரம்சிம்ம அலங்காரத்தில் இந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. சுவாமி ஊர்வலத்தின்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டும், கற்பூர ஆரத்தி எடுத்தும் தரிசனம் செய்தனர்.

27ஆம் தேதி கருடசேவைள
இன்றிரவு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் முத்து பல்லக்கில் காளங்கிநர்த்தன கோலத்தில் மாட வீதிகளில் பவனி வருகிறார். 27ஆம் தேதியன்று கருடசேவை நடைபெறுவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்களை எதிர்நோக்கி திருமலை காத்திருக்கிறது.