For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலின் சதிக்கு உயிரிழக்கும் தமிழக தொழிலாளர்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம். தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப்போய் வாழ்வாதரத்திற்காக தவித்துக்கொண்டிருக்கும் அப்பாவி ஏழை தொழிலாளர்கள் சிலர் சர்வதேச கடத்தல் கும்பலின் சதிக்கு ஆளாகி இப்படி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில், குறிப்பாக ஆந்திராவில் விளையும் செம்மரக்கட்டைகளுக்கு சீனாவிலும், தெற்காசிய நாடுகளிலும் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இதனால், சர்வதேச அளவிலான ஒரு மாபியா கும்பல், செம்மரக்கட்டைகளை வெட்டி, கடத்தி வருகிறது. ஆந்திராவில் வெட்டப்படும் செம்மரங்கள் வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டு, சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. செம்மரக்கடத்தலில் சர்வதேச பின்னணி உள்ளதாக ஆந்திர போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் கடத்தல்காரர்கள், தமிழக கூலித் தொழிலாளர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி கூலி தொழிலாளர்கள் உயிரிழக்கும் பரிதாப சம்பவங்கள் நடக்கின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடத்தல் கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN workers fell victim for red wood gangs

ஆந்திரா செம்மரங்கள்

ஆந்திராவின், திருப்பதி வனப்பகுதியில், செம்மரங்கள் அதிகளவில் உள்ளன. ஆண்டுகள் பல ஆன, பழமை வாய்ந்த இந்த செம்மரங்கள், முதல் தரமானதாக விற்பனையாளர்களால் கருதப்படுகின்றன. சந்தையில் அதிக விலை போகின்றன. மருந்துகள், பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி, மேஜை, இருக்கைகள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் செய்வதற்கும், இந்த மரங்களுக்கு கடும் வரவேற்பு உள்ளது.

கடத்தப்படும் மரங்கள்

ஆந்திர மாநில வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள, திருப்பதியிலிருந்து, செம்மரங்களை இரவோடு இரவாக வெட்டி, தமிழகம் கடத்தி வந்து, அங்கிருந்து மேற்குவங்கம் வழியாக, மியான்மருக்கு கடத்தப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு கடத்தல்

அங்கிருந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு, அனுப்பப்படுகிறது. ஆந்திர மாநில கடத்தல்காரர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, தமிழகத்தை சேர்ந்த கடத்தல்காரர்கள், செம்மர கடத்தல் தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் பார்த்து வருகின்றனர்.

கடத்தப்படுவது எப்படி

திருப்பதி காட்டில் இருந்து செம்மரத்தை வெட்டி, துண்டு போட்டு கொடுத்தால், புரோக்கர்களுக்கு கிலோவுக்கு, 70 ரூபாய் கொடுக்கப்படுகிறது. மரங்களை வாகனங்களில் எடுத்து வந்து கும்மிடிபூண்டி, செங்குன்றம் சென்று சேர்த்தால், கிலோவுக்கு, 200 ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு கோல்கட்டா, மணிப்பூர் வழியாக, மியான்மர் எடுத்து சென்று சேர்த்தால், கிலோ, 1,000 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.

பல லட்சம் லாபம்

கார்களில் சீட்டை கழற்றி, அதில், 1.50 டன் செம்மரங்கள் திருப்பதியில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்படுகிறது. இதன்மூலம், இரண்டு லட்சம் ரூபாய் வரை, வருமானம் கிடைப்பதால், வாகன உரிமையாளர்கள் சிலரும், இத்தொழிலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. லாரிகளில் செம்மரங்கள் ஏற்றப்பட்டு, அதன் மேல், பழவகைகள் மற்றும் கருவாடு உள்ளிட்ட, உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு, கொல்கத்தாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அனுப்புவதால், கடத்தல்காரர்களுக்கு, 1 டன்னுக்கு, 8 லட்சம் ரூபாய் வரை, வருமானம் கிடைக்கிறது.

எப்படி சாத்தியம்

ஆந்திராவின் கடைசி தொகுதியாக சத்தியவேடும், தமிழகத்தின் முதல் தொகுதியான, கும்மிடிபூண்டியும் ஒன்றை ஒன்று, ஒட்டி அமைந்துள்ளது. ஆந்திரா, தமிழகத்தை இணைக்கும், மூன்று முக்கிய சாலைகள் இத்தொகுதிகளில் உள்ளன. தடா மற்றும் ஊத்துக்கோட்டையில் மட்டுமே, இரு மாநில சோதனைச் சாவடிகள் உள்ளன. திருப்பதியில் இருந்து வரதைய்யபாளையம், காளஹஸ்தி, சத்தியவேடு வழியாக, தமிழக எல்லையான மாதர்பாக்கத்தை அடையமுடியும். மேலும், திருப்பதியில் இருந்து, ஆரம்பாக்கம் தோப்பு சாலை வழியாகவும், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். ஆனால், இவ்விரு சாலைகளில், சோதனை சாவடிகள் இல்லாதது கடத்தல்காரர்களுக்கு சாதகமாக உள்ளது.

தமிழக தொழிலாளர்கள்

இந்த மரங்களை, மலை சூழ்ந்த காடுகளில் இருந்து, வெட்டும் பணியில், தமிழகத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட, மாவட்ட விவசாய கூலிகள் பலர், இதில் அடக்கம். இவர்கள் மலையேறுவதிலும், அங்கேயே தங்கி மரம் வெட்டுதிலும் பழக்கப்பட்டவர்கள். ஆனால் கடத்தல்காரர்கள் இவர்களுடன், நேரடி தொடர்பு வைத்துக் கொள்வது கிடையாது. புரோக்கர்கள் மூலம், இவர்களை அழைத்து சென்று, மரம் வெட்ட பயன்படுத்துகின்றனர்.

குறைந்த கூலிக்கு

செம்மரங்களை வெட்டும் விவசாய கூலிகளுக்கு, ஏழு நாட்களுக்கு, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் தரப்படுகிறது. காட்டில் தங்கி மரம் வெட்டுவதற்கு தேவையான கருவிகள், உணவு, தண்ணீர், மதுபானம் உள்ளிட்டவைகளும் தரப்படுகின்றன. சமீபகாலமாக, விவசாயம் பொய்த்து போனதால், இதுபோன்ற கணிசமாக வருமானம் கிடைக்கும் தொழிலில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விலைமதிப்பில்ல உயிர்கள்

மரம் வெட்டும் அப்பாவி தொழிலாளர்கள், புரோக்கர்கள், கடத்தல் வாகன ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள் மட்டுமே, பெயருக்கு கைது செய்யப்படுகின்றனர். முன்பு, ஆந்திர போலீசார் மற்றும் வனத்துறையிடம் கைதாகியும், காட்டு விலங்குகள், விஷ உயிரினங்கள் கடித்தும், விவசாய கூலித்தொழிலாளர்கள் இறந்தனர். ஆனால், இவ்விஷயம் வெளி உலகிற்கு தெரியாமலே மறைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட, விழுப்புரத்தை சேர்ந்த தமிழக விவசாய தொழிலாளர், ஆந்திர போலீசார் துப்பாக்கி சூட்டில் பலியானார்.

அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு

உயிரை பணயம் வைத்து தமிழகத்தில் இருந்து கூலித் தொழிலாளர்கள் செம்மரம் வெட்டச் செல்கின்றனர். இதில் அரசியல் புள்ளிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளதாக தெரிகிறது. அதிக அளவில் பணத்தாசை காட்டியே மரம் வெட்ட அழைத்துச் செல்கின்றனர். இதற்காக அப்பாவித் கூலித்தொழிலாளர்களை சுட்டுக்கொலை செய்வது எப்படி நியாமாகும் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.

கடந்த மாதமே எச்சரிக்கை

செம்மரம் வெட்ட வரும் தொழிலாளர்களை சுட்டுக்கொல்வோம் என கடந்த மாதமே ஆந்திரா வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். எனினும் மரம் வெட்டச் சென்ற தொழிலாளர்களை சுட்டுக்கொன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு நடவடிக்கை எடுக்குமா?

ஆந்திரா - தமிழக அரசுகளும் இணைந்து, செம்மரக் கடத்தல் தொழிலை கட்டுப்படுத்தி, அப்பாவி விவசாய தொழிலாளர்கள் உயிரை காக்க வேண்டும். தமிழக முதல்வர், இந்த விஷயத்தில் நேரடியாக கவனம் செலுத்தினால், இப்பணிக்கு தமிழகத் தொழிலாளர்கள் போகாமல் ஓரளவு தடுக்க முடியும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

English summary
TN workers from the northern districts have fallen victims at the hands of red wood smuggling gangs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X