'பாஜகவில் இருப்பதே மாபெரும் பாவம்..' பரிகாரம் செய்துவிட்டு திரிணாமுல் காங்.-இல் இணைந்த பாஜக எம்எல்ஏ
அகர்தலா: திரிபுரா பாஜக எம்எல்ஏ சர்மா ஆஷிஸ் தாஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையும் முன், தனது பாவங்களை எல்லாம் தூய்மைப் படுத்தி கொள்ளாவதாகக் கூறி பூஜை சடங்கை மேற்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் பாஜக எம்எல்ஏவாக உள்ள சர்மா ஆஷிஸ் தாஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையக் கொல்கத்தா சென்றார்.
ஆனால் அதற்கு முன்பு அவர் செய்த காரியம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரிபுராவில் திரிசங்கு நிலையில் பாஜக அரசு? மமதா பானர்ஜி கட்சிக்கு தாவும் பாஜக எம்.எல்.ஏ.!

பரிகார பூஜை
கட்சியின் சேரும் முன் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளும் வகையில் சடங்கு பூஜை மேற்கொண்ட பின் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது. இந்த சடங்கைத் தொடர்ந்து, சுத்தபத்தமாக குளித்துவிட்டு அவர் மொட்டை அடித்துக் கொண்டார். பின்னர், கலிகத்தில் உள்ள கங்கை ஆற்றில் மூழ்கி நீராடினார்.

திரிணாமுல் காங்கிரஸ்
இவ்வளவு ஆண்டுகளாக பாஜகவில் இருந்ததற்கு பரிகாரம் செய்யும் வகையில் இந்த சடங்கை மேற்கொண்டதாக தாஸ் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பு, தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதற்காகச் சடங்கைச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் மூத்த தலைவர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு தாஸ் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மம்தா பிரதமராக வேண்டும்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மம்தா பானர்ஜி பிரதமராக வரவேண்டும் என மக்கள் பல அமைப்புகள் விரும்புகின்றனர். மம்தா வங்காளியாக இருப்பதால் அவர் பிரதமராக உயர்வது முக்கியத்துவம் பெறுகிறது. அரசின் சொத்துக்களை மோடி தலைமையிலான அரசு தனியார் நிறுவனங்களுக்கு விற்று வருகிறது.

மோடியின் ஜோக்
மோடி சொல்வது ஒரு காலத்தில் அனைத்து தரப்பினரிடமும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நானும் ஊழல் செய்யமாட்டேன் மற்றவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என மோடி தெரிவித்திருந்தார். தற்போது இது பிரபல ஜோக்காக மாறியுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக சர்வாதிகாரி போல் செயல்படுகிறது" என்றார். திரிபுரா மாநிலத்தில் தற்போது பாஜக ஆளும்கட்சியாக உள்ளது. அங்கு வரும் 2023ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.