திரிபுராவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?.. விரிவான அறிக்கை கோரிய ஹைகோர்ட்
குவாஹாட்டி: திரிபுரா மாநிலத்தில் சிறுபான்மையின சமூகத்தினர் மீதான தாக்குதல் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தியதாக வந்த சமூகவலைதள பதிவுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு திரிபுரா மாநில அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தில் குரானை சிலர் இழிவுப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில் அங்கு பெரிய அளவிலான வன்முறை ஏற்பட்டது. இந்துக்கள் மீதான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளும் கோயில்களும் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து திரிபுராவில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த மசூதி ஒன்றுக்கு சிலர் தீ வைத்ததாக சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையடுத்து அங்கு நிலையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சாம்திலா பகுதியில் மசூதியை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக கடந்த 26ஆம் தேதி சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
இது பொய்யான வீடியோ என போலீஸ் தரப்பு கூறுகிறது. இதுகுறித்து தகவல் மற்றும் கலாச்சார துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி கூறுகையில் திரிபுராவில் மசூதி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் சமூகவலைதளங்களில் பரவி வருவது போல் எந்த ஒரு மசூதியும் தாக்கப்படவில்லை.
திரிபுரா வன்முறை.. பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது.. எஸ்.டி.பி.ஐ. சாடல்
திரிபுராவில் அமைதி நிலவக் கூடாது என்பதற்காகவே வேண்டுமென்றே யாரோ திட்டமிட்டு பொய்யான புகைப்படத்தையும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்கள். அது போல் அவர்கள் திரிபுராவின் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது தொடர்பாக 3 பேர் கைதசு செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் மீது தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை திரிபுரா உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி இந்திரஜித் மஹாந்தி மற்றும் நீதிபதி சுபாஷிஷ் தலபத்ரா ஆகியோர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை வரும் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

சமூகவலைதளங்களில் புனையப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள், வன்முறையை தூண்டும் தகவல்கள் இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அதுகுறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகவலைதளவாசிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். உண்மைச் செய்தியை வெளியிட அனைத்து சமூக ஊடகங்களுக்கும் உரிமை உள்ளது. அதே நேரத்தில் பொய்யான செய்தியையும் மத வெறியையும் பரப்பும் வகையிலான செய்தியை பரப்ப அனுமதி இல்லை என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநில அரசு தரப்பு வைத்த வாதத்தில், மத வழிப்பாட்டு தலங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சிறுபான்மையினரின் வழிப்பாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. போலியாக சமூகவலைதளத்தில் வீடியோ, புகைப்படங்களை பதிவிட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.