திரிபுரா: உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக.. திரிணாமுல் வென்ற இடங்கள் எத்தனை தெரியுமா?
அகர்தலா: திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் காலை முதல் எண்ணப்பட்டது. மொத்தமுள்ள 334 இடங்களில் ஆளும் பாஜக 329 இடங்களைக் கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தலா ஒரு இடங்களைக் கைப்பற்றின.
தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!
திரிபுராவில் அகர்தலா மாநகராட்சியின் 51 வார்டுகள், 13 நகராட்சிகள், 6 நகர் பஞ்சாயத்துகள் என மொத்தம் 334 நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 112 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

222 வார்டுகளுக்கான தேர்தல்
இதர 222 இடங்களுக்கான வாக்குப் பதிவு அண்மையில் நடைபெற்றது. இந்த 222 இடங்களில் மொத்தம் 785 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஏற்கனவே 36 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர்.

திரிபுராவில் மும்முனைப் போட்டி
திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக- திரிணாமுல் காங்கிரஸ்- சிபிஎம் என மும்முனைப் போட்டி இருந்தது. இத்தேர்தலின் போது மிகப் பெரிய வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாக பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் புகார் தெரிவித்தன. மேலும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் சாயோனி கோஷ் கைது செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தில் புகார்
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை பாஜகவினர் போலீசார் துணையுடன் கொடூரமாக தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டன. ஆனால் திரிபுரா உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே மறுத்திருந்தது.

வாக்கு எண்ணிக்கை- பாஜக முன்னிலை
இதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமையன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவின் போதும் முறைகேடுகள் நடைபெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அகர்தலா மாநகராட்சி மற்றும் பல நகராட்சி, நகர் பஞ்சாயத்து வார்டுகளை ஆளும் பாஜகவே கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 334 இடங்களில் ஆளும் பாஜக 329 இடங்களைக் கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம், திப்ரா மோதா தலா ஒரு இடங்களைக் கைப்பற்றின. அகர்தலா மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளிலும் பாஜக மொத்தமாக வென்றுள்ளது. மேலும். திரிபுராவில் உள்ள 13 நகராட்சிகளையும் பாஜகவே கைப்பற்றியது.