பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வராத இடி அமின் அரசு... தினகரன் குற்றச்சாட்டு!
பெங்களூரு : மக்களின் சிரமத்தை பார்த்து போக்குவரத்து தொழிலாளர்களே வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், நீதிமன்றம் தொழிற்சங்கங்களுமே பேசி ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளதாகவும், அரசு கவுரவம் பார்த்துக் கொண்டு இடியமின் அரசு போல இருந்ததாக டிடிவி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை டிடிவி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது : ஜனவரி 31 வரை சசிகலா மவுனவிரதம் இருப்பதால் உறவினர் என்ற முறையில் அவரை நான் சந்தித்தேன். என்னுடன் சி.ஆர்.சரஸ்வதி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
பேப்பரில் எழுதிக் காட்டினோம், அவர் அதற்கு 'யெஸ்', 'நோ' என்று மட்டும் பதில் எழுதினார். சட்டசபைக்கு நான் போனதைக் கூறினேன், மேதகுகள் சடநது கொண்ட விதம் பற்றி சசிகலாவிடம் கூறினேன், சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு டிவியில் பார்த்ததாக தெரிவித்தார். வெற்றிவேல் மீது சசிகலா கோபமாக இருப்பார் என்று ஊடகங்கள் கூறின, ஆனால் இன்று அவர் தான் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். தவறான நோக்கத்தில் வெற்றிவேல் வீடியோவை வெளியிடவில்லை என்பதை சசிகலாவும் புரிந்து கொண்டுள்ளார்.

தேர்தலுக்காக காத்திருக்கிறோம்
கட்சி என்பதைத் தாண்டி வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நாங்கள் அனைவருமே நண்பர்கள். எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொருத்திருந்து பாருங்கள், உள்ளாட்சித்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம், சட்டசபை தேர்தலையே எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

நிச்சயம் வெளிவரும்
திரும்பத் திரும்ப சொல்கிறேன் ஸ்லீப்பர் சல் நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் வெளி வரும். எனக்கு ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் ஆதரவு, நிர்வாகிகளின் ஆதரவு இருக்கிறது, அதோடு ஸ்லீப்பர் செல்களின் ஆதரவும் இருக்கிறது நேரம் வரும் போது ஆட்சி கலையும்.

சுயகவுரவம் பார்க்கும் அரசு
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்ததை முடிவுக்கு கொண்டுவந்ததில் அரசுக்கு எந்த வேலையுமே இல்லை. தொழிற்சங்கத்தினர் மக்கள் சிரமப்படுவதை பார்த்து அவர்களாகவே தற்காலிகமாக இந்த வேலைநிறுத்த வாபஸ் முடிவுக்கு வந்துள்ளனர். இந்த அரசாங்கம் சுயகவுரவம் பார்த்துக் கொண்டு இடியமின் அரசு போல உட்கார்ந்திருக்கிறது.

அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறார்கள்
போக்குவரத்துத்துறை அமைச்சர் 23 முறை பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டது என்கிறார் ஏன் 24முறை அழைத்து பேச மாட்டார்களா, தொழிலாளர்களும் தமிழக மக்கள் தானே. ஆக நீதிமன்றம், தொழிற்சங்கம் பேசி தான் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. அற்பர்களுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்பதற்கு இதைத் தவிர வேறு உதாரணம் தேவையே இல்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!