
எல்லாம் இந்த அரை ஜான் வயித்துக்காகத்தான்.. போலீசாரையே தலை சுற்ற வைத்த கொலை வழக்கு!
கொல்கத்தா: சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இயற்கையாக இறந்த தனது சகோதரனை தானே கொலை செய்ததாகக் கூறி போலீசாரை ஒருவர் நம்ப வைத்த சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. என்ன காரணத்திற்காக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டார் என்பதுதான் போலீசாரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
பெரும்பாலும் கொலை சம்பவங்களில் போலீசுக்கு பயந்து உண்மைக் குற்றவாளி தலைமறைவு, தப்பி ஓட்டம் போன்ற செய்திகளைத்தான் நாம் அதிகம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் கொல்கத்தாவில் நடந்த இந்த வழக்கு சற்று வித்தியாசமானது.
6 மாநிலம்! துப்பாக்கிச்சூடு முதல் துணை முதல்வர் வீட்டை நொறுக்கியது வரை! அக்னிபாத்தால் நடந்தது என்ன?
சம்பந்தப்பட்ட அந்த நபரின் பெயர் சுபாஷிஷ் ஆகும். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சகோதரனைத் தானே கொலை செய்து விட்டதாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்த பார்த்த போது, அவரின் சகோதரரான தெபாஷிஷின் சடலம், முகம் தலையணையால் அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது போன்று கிடைத்துள்ளது.

பிரேதபரிசோதனை
திரும்பத் திரும்ப தனது சகோதரனை தான் கொன்று விட்டதாக போலீசிடம் சொல்லி இருக்கிறார் சுபாஷிஷ். இதனால் தெபாஷிஷின் மரணத்தைக் கொலை என முடிவு செய்து சுபாஷிஷைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சரி, வழக்கு இவ்வளவு சுலபமாக முடிந்து விட்டதே என போலீசார் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு டெபாஷிஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி வழக்கின் திசையையே மாற்றி விட்டது.

சினிமாவை விஞ்சும் திரைக்கதை
அதாவது 48 வயதான தெபாஷிஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்படவில்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால் போலீசார் குழப்பமடைந்தனர். மூளை பக்கவாதத்தால் (cerebral stroke) தெபாஷிஷ் மரணமடைந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு ஏன் சுபாஷிஷ் தனது சகோதரனைக் கொலை செய்ததாக பொய் கூறினார் என விசாரித்தபோது தான், சினிமாவையே மிஞ்சும் திரைக்கதை அதன் பின்னால் இருப்பதைக் கண்டு போலீசார் ஆச்சர்யமடைந்தனர்.

பென்ஷனில் வாழ்க்கை
அதாகப்பட்டது, சுபாஷிஷின் அண்ணன் தெபாஷிஷ் ஆவார். திருமணமாகாத சகோதரர்கள் இருவரும் தனது தாயுடன் வசித்து வந்துள்ளனர். ஜாதவ்பூர் செராமிக் இன்ஸ்ட்டியூட்டில் பணி புரிந்து ஓய்வு பெற்றவரான அவரது தாயார் மாதம் ரூ. 35,000 பென்ஷன் பெற்று வந்துள்ளார்.

உடல்நலப் பிரச்சினை
அதே நிறுவனத்தில் வேலை பார்த்த தெபாஷிஷ், பார்வைக் கோளாறு பாதியிலேயே வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அவருக்கும் ரூ. 15,000 ஓய்வூதியம் கிடைத்து வந்துள்ளது. சுபாஷிஷ் வேலைக்கு செல்லாததால், இந்த இருவரின் ஓய்வூதியத்தில்தான் அந்தக் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.

அண்ணனின் கவலை
கடந்த மே மாதம் சுபாஷிஷின் தாய் மரணமடைந்ததால் அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. எனவே சகோதரர்கள் இருவரும் முன்பிருந்த வீட்டைக் காலி செய்து விட்டு, சிறிய வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்து விட்டனர். ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தெபாஷிஷ், தனது மரணத்திற்குப் பிறகு தனது சகோதரர் சாப்பாட்டிற்கு என்ன செய்வார் என மிகவும் கவலைப்பட்டுள்ளார்.

ஐடியா மணி
எனவே அவர் தான் இந்தத் திரைக்கதையைத் தயாரித்து தனது தம்பியிடம் தந்துள்ளார். அதாவது தான் இறந்து விட்டால், தன்னைக் கொலை செய்து விட்டதாகக் கூறி, போலீசில் சரணடைந்து விட அவர் ஐடியா கொடுத்துள்ளார். அதன்மூலம், சுபாஷிஷ் தன் வாழ்நாள் முழுவதும் சாப்பாட்டிற்கும், தங்குமிடத்திற்கும் கவலையில்லாமல் அரசு செலவிலேயே சிறையில் நிம்மதி இருக்கலாம் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

வெளிச்சத்திற்கு வந்த உண்மை
போலீசாரின் விசாரணையில் இந்த உண்மைகள் எல்லாம் தெரிய வந்துள்ளது. சினிமாக் கதையை மிஞ்சும் அளவிற்கு திரைக்கதை எழுதி, போலீசாரை தலை சுற்ற வைத்து விட்டனர் இந்த சகோதரர்கள். ஆனால் பிரேத பரிசோதனையில் மாட்டிக் கொள்வோம் என அவர்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை போலும்.