காதலர் தினம்: பெங்களூரில் இருந்து 50 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி
பெங்களூர்: காதலர் தினத்தையொட்டி பெங்களூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 50 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
காதலர் தினம் வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தை கொண்டாட உலக காதலர்கள் தயாராகி வருகிறார்கள். காதலர் தினம் என்றால் ரோஜாக்கள் இல்லாமலா. காதலர்கள் ரோஜாக்கள் அதிலும் குறிப்பாக சிவப்பு நிற ரோஜாக்களை காதலிகளுக்கு அளித்து மகிழ்வார்கள்.

பெங்களூரின் சிவப்பு ரோஜாக்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி இந்த ஆண்டு பெங்களூரில் இருந்து ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 50 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இது குறித்து தென்னிந்திய மலர் சாகுபடி மைய தலைவர் கூறுகையில்,
கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் 50 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் ஜனவரி மாத இறுதியில் துவங்கி பிப்ரவரி மாதம் 14ம் தேதி வரை ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
இந்த ஆண்டு காதலர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் விற்பனையில் 10 சதவீதம் சரிவு ஏற்படலாம் என்றார்.