For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூத்த திராவிடர் இயக்க ஆய்வாளர் முனைவர் பேரா. எம்.எஸ்.எஸ். பாண்டியன் காலமானார்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மூத்த திராவிடர் இயக்க ஆய்வாளரும் சமூக ஆய்வறிஞருமான பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் டெல்லியில் காலமானார்.

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் 1978ஆம் ஆண்டு பி.ஏ. முடித்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் சென்னை பல்கலைக் கழகத்தில் 1980ஆம் ஆண்டு எம்.ஏ. முடித்தார்.

பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் 1987ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற எம்.ஸ்.எஸ். பாண்டியன், சென்னை எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் ஆய்வாளராக பணியாற்றினார். அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

Veteran Dravidian Movement Scholar Prof. MSS Pandian passes away

திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சனைகள், சாதிய சிக்கல்கள், தமிழ் சினிமா என பல துறைகளிலும் தம் ஆய்வுகளை விரிவுபடுத்தியிருந்தார் பாண்டியன்.

எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய "Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present" என்ற நூல் திராவிடர் இயக்கத்தைப் பற்றி விரிவாக அலசிய அறிவுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல் அவர் எழுதிய "The Image Trap: M G Ramachandran in Films and Politics" என்ற நூலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எக்கனாமிக்கல் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி உட்பட ஆங்கில ஊடகங்களில் தமிழ்ச் சமூக சிக்கல்களை திராவிடர் இயக்கப் பார்வையுடன் பதிவு செய்தவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்.

எம்.எஸ்.எஸ். பாண்டியன் மறைவு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவரான எழுத்தாளர் ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் அறிஞர் என மதிக்கத்தக்க ஒருசிலருள் முக்கியமானவரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இன்று (10.11.2014) மாலை 4 மணிக்கு டெல்லி AIIMS மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை அங்கு பேராசிரியராக இருக்கும் திரு. சந்திரசேகர் மூலம் அறிந்தேன். நேற்று இரவு ரத்த வாந்தி எடுத்த அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால் அங்கு அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என பேரா.சந்திரசேகர் தெரிவித்தார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பாண்டியன் திராவிடக் கருத்தியலை ஏற்றுக்கொண்டு குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தவர். எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லியில் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது Image Trap என்ற ஆங்கில நூல் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை முன்வைத்து தமிழக அரசியலில் சினிமாவின் செல்வாக்கை ஆராய்ந்த முக்கியமானதொரு நூலாகும்.

பாண்டியனுக்கும் எனக்குமான உறவு நட்பும் பிணக்கும் கொண்டது. திராவிட அரசியல் குறித்த எனது கருத்துகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. அதுபோலவே எனக்கும் அவரது அணுகுமுறைமீது விமர்சனங்கள் இருந்ததுண்டு. திமுகவைப் பற்றி உயர்ந்த மதிப்பை ஏற்படுத்தும் விதமாக ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை எழுதிய பாண்டியன், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

ஈழப் பிரச்சனை தொடர்பான எனது கட்டுரைகளின் தொகுப்பான ' தமிழராய் உணரும் தருணம்' என்ற நூலுக்கு அவர் முன்னுரை எழுதித் தந்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒரு இலக்கிய மாநாட்டில் பேச என்னை அழைத்திருந்தார்கள். நான் போகமுடியவில்லை. எழுத்தாளர் அம்பைதான் அந்த அமர்வை ஒருங்கிணைத்தார்.

மாற்று ஏற்பாடாக யாரைக் கூப்பிடலாம் என அம்பை என்னிடம் கேட்டபோது நான் பாண்டியன் அல்லது ராஜன்குறையைக் கூப்பிடுங்கள் என்றேன்.

உடல்நலம் குறித்து கொஞ்சமும் அவர் அக்கறை காட்டியதில்லை. JNU இல் வாய்த்த தனிமையை விரட்ட அவர் கையாண்ட வழிமுறை அவரது உடல் நலத்துக்குக் கேடாகிவிட்டது. அவர் எழுதத் திட்டமிட்டிருந்த பல நூல்களை அவர் எழுதாமலே போய்விட்டார். பாண்டியனின் இடத்தை நிரப்பக்கூடிய இன்னொருவர் இல்லை என்பதை நினைக்கும்போது அவரால் உண்டான வெற்றிடம் பெருகுகிறது.

அறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கு எனது அஞ்சலி.

இவ்வாறு ரவிக்குமார் எழுதியுள்ளார்.

English summary
Veteran Dravidian Movement Scholar Prof. MSS Pandian breathed his last at a Delhi AIIMS hospital on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X