For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூர் கோர்ட் பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் விஜயகாந்த், பிரேமலதா முறையீடு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அவதூறு வழக்கில் ஆஜராகாததால் திருப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் முறையீடு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் காளிவேலம்பட்டியில் கடந்த ஆண்டு நவம்பர் 6-ந் தேதி தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக மாவட்ட அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்ரமணியம் சார்பில் திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 29-ந் தேதி அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜராகக் கோரி விஜயகாந்த், பிரேமலதாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவர்கள் ஆஜராகவில்லை.

பிடிவாரண்ட் பிறப்பிப்பு

பிடிவாரண்ட் பிறப்பிப்பு

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடர்புடையவர்கள் சார்பில் யாரும் ஆஜராகாத காரணத்தால் விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

விழுப்புரம் கோர்ட்டிலும்...

விழுப்புரம் கோர்ட்டிலும்...

மேலும் இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே விழுப்புரத்தில் 2012 ஆகஸ்ட் 30-ந் தேதி நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதேபோல, 2014 பிப்ரவரி 2-ந்தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டத்திலும், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அப்போது எம்எல்ஏக்களாக இருந்த பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர், தமிழக முதல்வரையும், அரசையும் விமர்சித்துப் பேசியதாக புகார் தெரிவித்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பொன்.சிவா வழக்குத் தொடுத்தார்.

கண்டனம்

கண்டனம்

இந்த வழக்குகளின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் ஆஜராக விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரும், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு விலக்கு பெற்றனர். மேலும், உச்ச நீதிமன்றத்திலும் தடை ஆணை பெற்றிருந்தனர். இதனால், வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, வழக்கில் தொடர்புடைய விஜயகாந்த், பிரேமலதா, வெங்கடேசன், பார்த்தசாரதி ஆகியோர் நேற்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். ஆனால் இவ்வழக்கு விசாரணையின் போது பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் ஆஜராகினர். விஜயகாந்த், பிரேமலதா ஆஜராகவில்லை. அவர்களுக்காக, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது, இந்த வழக்குக்காக பட்டியலில் உள்ள விழுப்புரம் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், புதிய வழக்கறிஞர் ஆஜராவது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் தொடர்ந்து ஆஜராகாமல் வழக்கை தாமதப்படுத்தி வருவதாக நீதிபதி கண்டிப்பு தெரிவித்தார்.

ஆகஸ்ட் 9-க்கு ஒத்திவைப்பு

ஆகஸ்ட் 9-க்கு ஒத்திவைப்பு

இதற்கு, உரிய அனுமதியுடன் இந்த வழக்கில் ஆஜராவதாக தெரிவித்த வழக்கறிஞர் விஜயகாந்த் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கும், உச்ச நீதிமன்ற தடை ஆணையும் பெற்றுள்ளதையும் குறிப்பிட்டார். இந்த வழக்கின் விசாரணைக்கு விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் அடுத்த முறை கண்டிப்பாக ஆஜராகி, தடை ஆணை பெற்றுள்ளது குறித்த ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்றார். இந்த வழக்கும் ஆகஸ்ட் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்

சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்

இதனிடையே திருப்பூர் நீதிமன்றம் தங்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த், பிரேமலதா இருவரும் இன்று முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் இருவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு தடை உள்ள நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதனை ரத்து செய்ய வேண்டும் என முறையிட்டார். இந்த அவதூறு வழக்குகள் தொடர்பான மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

English summary
A petition has been filed in the Supreme Court by DMDK leader Vijaykanth against the warrant issued by a Tirupur court in connection with a defamation case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X