For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகலாய ஆட்சி இந்தியாவின் களங்கமா? புகழா?

By BBC News தமிழ்
|
முகலாய ஆட்சி இந்தியாவின் களங்கமா? புகழா?
Getty Images
முகலாய ஆட்சி இந்தியாவின் களங்கமா? புகழா?

தாஜ்மஹால் தொடர்பாக உருவான சர்ச்சைகள், முகலாய அரசர்களையும் விட்டுவிடாமல் தொட்டுச்செல்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்கள் முகலாயர்கள் தொடர்பான அடையாளங்கள் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளனர். அதில் தலையை உயர்த்திப் பார்க்க வைக்கும் தாஜ்மஹால் தொடங்கி, குனிந்து பூமியைப் பார்க்கச் செய்யும் சாலைகளின் பெயர்களும் அடங்கும்.

பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், 'முகலாய ஆட்சி இந்திய கலாசாரத்துக்கு ஒரு கறை' என்று கூறினால், மத்திய அமைச்சர் பி.கே. சிங்கும் சளைக்காமல் இன்னொரு கருத்தைச் சொல்கிறார்.

டெல்லியில் இருக்கும் அக்பர் சாலையின் பெயரை மஹாராணா பிரதாப் சாலை என்று மாற்றவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு முன்பே ஒளரங்கசீப் சாலையின் பெயர் அப்துல் கலாம் சாலை என்று மாற்றப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த ஆண்டு மே மாதம் பாஜக தலைவர் ஷாய்னா என்.சி, முகலாய அரசர் அக்பரை ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசினார். ''அக்பர் சாலையின் பெயரை மஹாராணா பிரதாப் சாலை என்று மாற்றவேண்டும். இஸ்ரேலில் எந்தவொரு சாலைக்காவது ஹிட்லரின் பெயர் வைக்கமுடியுமா? உலகிலேயே நம் நாட்டைப் போல் வேறு எங்கும் அடக்குமுறையாளர்களை மதிப்பதில்லை'' என்று ஷாய்னா தனது டிவிட்டர் செய்தியில் கூறியிருக்கிறார்.

நரேந்திர மோடி
Getty Images
நரேந்திர மோடி

இதுபோன்ற விமர்சனங்கள் இந்திய அரசியலில் புதியது கிடையாது என்றாலும், இந்தமுறை விவாதத்தை கடுமையாக்கியது பாரதிய ஜனதா கட்சிதான். மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைவர்கள் வெளியிடும் கருத்துகள், பல்வேறுவிதமாக பொருள் கொள்ளப்படுகின்றன.

இதில் எழும் கேள்வி என்னவென்றால், பாஜக தலைவர்கள் முகலாய அரசர்களை பற்றி எதன் அடிப்படையில் விமர்சிக்கின்றனர், அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?

ஜெர்மன்-அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆண்ட்ரே கண்டர் ஃபிராங்க் 1998ஆம் ஆண்டில் எழுதிய "ரீஓரியண்ட்: குளோபல் எகானமி இன் தி ஏஷியன் ஏஜ்" (Reorient: Global Economy in the Asian Age) புத்தகத்தில், "இந்தியாவும் சீனாவும் பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது உண்மைதான். இந்த காலகட்டத்தில் இந்தியாவை ஆண்டது முகலாய ஆட்சியாளர்கள்".

இந்த இரு நாடுகளும் முழு உலகையும் ஆதிக்கம் செலுத்தியதாக ஃபிராங்க் குறிப்பிட்டுள்ளார். இங்கிருந்துதான் பல வரலாற்றாசிரியர்கள் இந்த கருத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பா விரிவுபடுத்தப்பட்டு பல நாடுகளை காலனிகளாக்கியபோது நிலைமை மாறியது. இந்த நேரத்தில்தான் இந்தியாவை பிரிட்டிஷ் கைப்பற்றியது.

முஸ்லிம் என்பதால் உதாசீனமா?
Getty Images
முஸ்லிம் என்பதால் உதாசீனமா?

முஸ்லிம் என்பதால் உதாசீனமா?

இந்த விவாதங்களுக்கு இடையில், திரையுலக பிரபலமும், பாடகருமான ஜாவேத் அக்தர் தனது டிவிட்டரில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். முஸ்லிம்கள் தொடர்பான விவரங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார். அறிவு, நுண்ணறிவு, ஒழுக்கம் ஆகியவற்றுக்கும் வரம்பிருப்பதாக அவர் எழுதியுள்ளார்.

மேலும் அக்பரை எதிர்ப்பவர்களுக்கு, கிளைவ் மீது எந்த வருத்தமும் இல்லை, அதேபோல், ஜஹாங்கீரை விமர்சிப்பவர்கள், ஹாஸ்டிங்க்ஸ் பற்றி குறிப்பிடுவதே இல்லை என்பதும் வியப்பளிப்பதாக ஜாவேத் அக்தர் பதிவிட்டிருக்கிறார்.

முகலாய ஆட்சி இந்தியாவின் களங்கமா? புகழா?
Getty Images
முகலாய ஆட்சி இந்தியாவின் களங்கமா? புகழா?

''சங்கீத் சோம் சொல்லும் வரலாறு அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. அவருக்கு ஆறாம் வகுப்பின் வரலாறு புத்தகத்தை பரிசாக கொடுத்தால் நன்றாக இருக்கும். சர் தாமஸ் ரோ, ஜஹாங்கீரின் காலத்தில் வந்தவர். இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் ஆங்கிலேயர்களைவிட சிறப்பாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்'' என்றும் சங்கீத் சோமை சாடுகிறார் ஜாவேத் அக்தர்''.

இந்த விவகாரத்திற்கு சத்குரு ஜக்கியே காரணம் என்றும் குற்றம்சாட்டும் ஜாவேத், ''இந்தியாவிற்கு வெளியே செல்வத்தை ஷாஜகான் கொண்டு செல்ல முடியாதற்கு காரணம் போக்குவரத்து வசதிகள் இல்லாததே என்று சத்குரு ஜக்கி சொல்கிறார். இது அறியாமை மற்றும் அபத்தத்தின் உச்சகட்டம்'' என்று காட்டமாக கூறுகிறார்.

வரலாற்று கண்ணோட்டம்
Getty Images
வரலாற்று கண்ணோட்டம்

வரலாற்று கண்ணோட்டம்

இந்தியாவின் இடைக்கால வரலாற்றை பார்ப்பதற்கு பல்வேறுபட்ட அணுகுமுறைகள் உள்ளன. அதில் ஒன்று இடதுசாரி வரலாற்றாளர்கள். அவர்களின் கருத்துப்படி, இந்தியாவின் இடைக்கால வரலாறு பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. இடைக்கால காலப்பகுதியில் விரைவான நகரமயமாக்கல், கட்டிடக்கலை சிறப்பு முக்கியத்துவம் பெற்றது மற்றும் மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறை உருவாக்கப்பட்டது என்பது அவர்களின் நம்பிக்கை.

பிரிட்டிஷ் அரசர் முதலாம் ஜேம்ஸின் முதல் அதிகாரப்பூர்வ தூதரான சர் தாமஸ் ரோ, வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை கண்டறிவதற்காக 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.

ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு சர் தாமஸ் ரோயின் பயணம், வரலாற்று ஆதரமாக கருதப்படுகிறது. ஜஹாங்கிர் காலத்தின் முக்கியமான வரலாற்று ஆதாரமாக சர் தாமஸ் ரோவின் எழுத்துகள் கருதப்படுகின்றன. 1615 முதல்1619 வரை தாமஸ் தாமஸ் ரோ இந்தியாவில் இருந்தார்.

இந்தியா மற்றும் சீனாவின் ஆதிக்கம்

இந்தியாவின் மத்தியகால வரலாற்று நிபுணரான பேராசிரியர் ஹர்பன்ஸ் முகியாவின் கருத்துப்படி, ''எந்தவொரு காலகட்டத்திலும், செல்வந்தர்கள், மத்திய வர்கத்தினர், ஏழைகள் என மூன்று வகையாக பிரிக்கலாம். அதுபோன்றுதான் இந்தியாவின் மத்திய காலத்திலும் மூன்று வர்கத்தை சேர்ந்த மக்களும் இருந்தனர்.''

நிலைமை இப்படியிருக்கும்போது, பாஜக தலைவர்கள் மனதில் ஏன் முகலாய ஆட்சியாளர்கள் குறித்து எதிர்மறையான கருத்து நிலவுகிறது? புகழ்பெற்ற இடைக்கால வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் சொல்கிறார், ''பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான பிரச்சனை முகலாய ஆட்சியாளர்கள் முஸ்லிம்கள் என்பதே. முஸ்லிம்கள் வெளிநாட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதே அவர்களின் நினைப்பு''.

விவசாயிகளின் நிலை சிறப்பாக இல்லையா?
Getty Images
விவசாயிகளின் நிலை சிறப்பாக இல்லையா?

விவசாயிகளின் நிலை சிறப்பாக இல்லையா?

இருந்தாலும், முகலாய ஆட்சியில் பொருளாதார முன்னேற்றம், மகிழ்ச்சி பற்றி இடைக்கால வரலாற்றில் பாண்டித்யம் பெற்ற மீனாட்சி ஜெயினின் கருத்து வேறானதாக இருக்கிறது. வலதுசாரி வரலாற்றாசிரியாக கருதப்படும் மீனாட்சி ஜெயின். இடைக்கால வரலாறு மற்றும் அயோத்தி பற்றி எழுதிய புத்தகங்கள் மிகவும் சர்ச்சைக்குரியவை. இருந்தபோதிலும், மீனாட்சி தன்னை நடுநிலைவாதி என்றே சொல்லிக்கொள்கிறார்.

முகலாயர்களின் ஆட்சியில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமானதாக இருந்த்தாக கூறும் மீனாட்சி, ''கில்ஜியின் ஆட்சியில் விவசாயிகள் வேதனையுற்றிருந்தார்கள். கராஜ் (நில வரி), கரி (வீட்டு வரி) மற்றும் ரரி (மேய்ச்சல் வரி) என மூன்று விதமான வரிகள் விதிக்கப்பட்டன''.

''துக்ளக்கின் ஆட்சியில் வரிகள் மேலும் அதிகமாயின. விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்த்தாகவும், மூன்று நிலையில் இருந்த விவசாயிகளும் நிம்மதியாக இல்லை'' என்று வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பர்னியும் கூறுகிறார்.

யாருக்கும் இலவசமாக வேலை இல்லை
Getty Images
யாருக்கும் இலவசமாக வேலை இல்லை

யாருக்கும் இலவசமாக வேலை இல்லை

முகலாயர்களின் ஆட்சியில் ஏழைகளின் நிலை என்ன? ஹர்வம்ஷ் முகியா கூறுகிறார், ''ஏழ்மை நிலை இருந்தாலும், இந்தியாவில் பிச்சை எடுப்பவர்கள் என்று யாரையுமே பார்க்கமுடியவில்லை என்று முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த ஐரோப்பிய பயணிகள் இதுகுறித்து வியப்பு தெரிவித்தார்கள்''.

"பஞ்சம்-பட்டினி என்பது எல்லா காலங்களிலும் ஏற்படுவது, அதேபோல் வெள்ளமும் ஏற்படும். ஆனால் இதுபோன்ற பேரழிவுகளை சமாளிக்க முழுமையாக உதவி வழங்கும் வகையில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. முகலாய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. இலவசமாக வேலை செய்ய யாருமே அனுமதிக்கப்படவில்லை".

முகலாய காலத்தில் நகரமயமாக்கல் துரிதமானது

முகலாயர்களின் ஆட்சியில் இந்தியா மற்றும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% ஆக இருந்ததற்கான முக்கியத்துவம் என்ன?

ஹர்பன்ஸ் முகியா கூறுகிறார், "அந்த நேரத்தில் ஜி.டி.பி என்ற கருத்தாக்கமே கிடையாது. இது கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் அளவிடப்பட்டு, மதிப்பிடப்பட்டதே''.

அக்பரின் ஆட்சியில் நகரமயமாக்கல் விரைவாக நடைபெற்றது. அக்பரின் காலத்தில் மட்டுமே சுமார் நான்காயிரம் நகரங்கள் உருவாகியதாக வரலாற்றாசிரியர் நிஜாமுதீன் அஹ்மத் பக்ஷி கூறுகிறார்,

''அக்பரின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இருந்த அளவு நகரங்கள் உலகின் வேறு எந்த சம்ராஜ்ஜியத்திலும் இருந்த்தேயில்லை. பொருளாதார முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு மொத்த உற்பத்தியை கணக்கிடும்போது, நகரமயமாக்கலும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது''.

''ஜவுளி வர்த்தகம் முகலாயர் காலத்தில் பிரபலமானது. கைவினைக் கலைகளும் ஏற்றம் கண்டன. இந்திய பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் கிராக்கி இருந்தது. தேவை அதிகரித்ததால் உற்பத்தி அதிகரித்தது. கைவினைஞர்களின் வருவாயும் கணிசமாக அதிகரித்தன."

முகலாய சாம்ராஜ்ஜியத்தில் அக்பர் ஆட்சிக்காலத்தில் ஆட்சி மையப்படுத்தப்பட்டது. பேரரசர் அக்பரின் தலைமையில் முகலாய சாம்ராஜ்ஜியம் ஆலமரமாக விரிவடைந்தது.

பாரிஸைவிட பணக்கார நகரம் டெல்லி
Getty Images
பாரிஸைவிட பணக்கார நகரம் டெல்லி

பாரிஸைவிட பணக்கார நகரம் டெல்லி

ஹர்பன்ஸ் முகியா கூறுகிறார், ''முகலாய காலத்தில் முறையான அமைப்பு பணியாற்றியது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தால், அதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியும்.

கொள்ளையடிக்கும் சம்பவங்கள் கணிசமாக குறைந்திருந்தன. அந்த கால ஓவியங்கள் வறுமையை சித்தரித்தாலும், மக்கள் பசியால் இறப்பது போன்ற ஓவியங்கள் இல்லை. கவிதைகளும் இதையே பிரதிபலிக்கிறது.

டெல்லியும் ஆக்ராவும் பாரிஸைவிட பணக்கார நகரங்களாகக் இருந்ததாக சர் தாமஸ் ரோவ் கூறினார். அவரைப் போன்றே பலரும் கருதினார்கள்".

பாபர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தார், ஹுமாயூனும் இந்தியாவுக்கு வெளியில் பிறந்தவர். ஆனால் அக்பருக்கு பிறகு ஆட்சி செய்த அனைத்து முகலாய ஆட்சியாளர்களும் இந்தியாவிலேயே பிறந்தவர்கள்.

அவர்கள் வெளிநாட்டிற்கு சென்றதில்லை. முகியா கூறுகிறார், "ஒவ்வொரு ஆட்சியாளரும் தனது சாம்ராஜ்ஜியத்தை நீட்டித்தார்கள். அசோக சக்ரவர்த்தி, சந்திரகுப்தா மௌரியா முதல் அக்பர்வரை அனைத்து அரசர்களும் இதைத்தான் செய்தார்கள்."

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
'இந்தியாவிற்கு வெளியே செல்வத்தை ஷாஜகான் கொண்டு செல்ல முடியாததற்கு காரணம் போக்குவரத்து வசதிகள் இல்லாததே என்று சத்குரு ஜக்கி சொல்கிறார். இது அறியாமை மற்றும் அபத்தத்தின் உச்சகட்டம்'' என்று காட்டமாக கூறுகிறார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X