படுதோல்வியால் பரிதாபம்! மேற்கு வங்க பாஜகவில் வெடித்த உட்கட்சி மோதல் - மாநில குழு செயலாளர் ராஜினாமா
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்த நிலையில் அக்கட்சியில் மாநிலக் குழு செயலாளரும் எம்.எல்.ஏவுமான கௌரி சங்கர் கோஸ் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி, சத்தீஸ்கரின் கைராகர் சட்டப்பேரவைத் தொகுதி, பீகாரின் போசாஹன் சட்டப்பேரவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் உற்று நோக்கப்பட்டன.

மேற்கு வங்க அரசியல்
அதற்கு முக்கிய காரணம் அம்மாநிலத்தில் அரங்கேறிய அண்மைகால அரசியல் நிகழ்வுகள். மேற்குவங்க ஆளுநருக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான மோதல், மேற்கு வங்க அரசுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள், மாநிலங்களில் ஏற்பட்ட குற்றச்செயல்களால் இந்த இடைத் தேர்தல் முடிவுகளை மாநில மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பாஜக எம்.பி. ராஜினாமாவால் காலியான தொகுதி
இதில், அசான்சோல் மக்களவைத் தொகுதி எம்.பியாக இருந்த பாஜகவை சேர்ந்த பாடகர் பபுல் சுப்ரியோ கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகினார். இதனால் அவரது எம்.பி பதவியும் பறிபோனது. இதனை தொடர்ந்து அசான்சோல் மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

சத்ருகன் சின்ஹா
இதனை தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில், பாஜகவிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து பாஜகவை சேர்ந்த அக்னிமித்ரா பால் போட்டியிட்டார்.

திரிணாமூல் காங்கிரஸில் சீட்
அதேபோல், மேற்கு வங்க அமைச்சராக இருந்த சுப்ரதா முகர்ஜி கடந்த ஆண்டு காலமானதை தொடர்ந்து அவரது பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜகலிருந்து விலகிய பபுல் சுப்ரியோவை வேட்பாளராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிறுத்தியது.

இரண்டிலும் திரிணாமூல் வெற்றி
இன்று நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில், அசான்சோல் மக்களவைத் தொகுதியில் சத்ருகன் சின்ஹா பாஜக வேட்பாளரை விட 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று பிரமாண்ட வெற்றிபெற்றார்.
அதேபோல் பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பபுல் சுப்ரியோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சாய்ரா ஷா ஹலிமைவிட 20,030 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பாஜகவுக்குள் கோஷ்டி பூசல்
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியவர்களை வைத்தே பல இடங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. ஆனால், தற்போது பாஜகவில் பல ஆண்டுகளாக கட்சியில் இருந்தவர்களுக்கும் வேறு கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கும் இடையே உட்கட்சிப் பூசல் தொடர்ந்து வருகிறது.

பாஜக மாநிலக்குழு செயலாளர் ராஜினாமா
குறிப்பாக திரிணாமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியின் ஆதிக்கம் மேற்கு வங்க பாஜகவில் அதிகம் இருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். இந்த நிலையில், நேற்றைய இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் மாநிலக்குழு செயலாளராக இருந்து வந்த எம்.எல்.ஏ. கௌரி சங்கர் கோஷ் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து எம்.எல்.ஏ. கஞ்சன் மிஸ்ராவும் ராஜினாமா செய்திருக்கிறார்.