கொரோனா பரவல் அதிகரிப்பு: மே.வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடல்
கொல்கத்தா: கொரோனா பரவல் அதிகரித்து வரும் மேற்கு வங்க மாநிலத்திலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன.
நாட்டில் கொரோனா பரவல் படுவேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,500 ஐ தாண்டி உள்ளது.
பிரதமரை வரவேற்பது நமது கடமை.. அரசியல் கருத்தியல் வேறு, வரவேற்பு வேறு.. கனிமொழி எம்பி
மொத்தம் 23 மாநிலங்களில் ஓமிக்ரா பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 27,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 284 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

மாநிலங்களில் இரவு லாக்டவுன்
நாட்டின் பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதேபோல் மேற்கு வங்க மாநிலத்திலும் கொரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

மே.வங்கத்திலும் கட்டுப்பாடுகள்
மேற்கு வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. மால்கள், உணவகங்கள், திரை அரங்குகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள், ஜிம்கள், பியூட்டி பார்லர்கள் மூடப்படும். பொழுதுபோக்கு மையங்கள், பூங்காக்கள், சுற்றுலாதலங்கள் ஆகியவற்றையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் குறைப்பு
இது தொடர்பாக மேற்கு வங்க தலைமை செயலாளர் ஹெச்.கே. திவேதி கூறுகையில், கொல்கத்தாவில் இருந்து மும்பை, டெல்லிக்கு இனி வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமை என 2 நாட்கள் மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என்றார்.

ஒடிஷாவில் ஓமிக்ரான்
இதனிடையே ஒடிஷா மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 8,000-த்தை தாண்டக் கூடும் என அம்மாநில கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் சஷாங் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார். உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று மட்டும் 3,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.