For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி?

By BBC News தமிழ்
|

தேசத் தந்தையின் மனைவியாக இருந்தாலும், இறுதி சுவாசத்தை அரண்மனையின் சிறைச்சாலையில் விட்ட கஸ்தூர்பாவின் உடல் எரிந்தபோதிலும், அவர் கை வளையல்கள் சாம்பலாகவில்லை.

மகாத்மா காந்தி பம்பாய் சிவாஜி பூங்காவில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முதல் நாள், 1942 ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியன்று அவர் பம்பாய் பிர்லா ஹவுஸில் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

காந்தி கைது செய்யப்பட்ட பிறகு, அடுத்த நாள் நடைபெறவிருந்த முக்கியமான கூட்டத்திற்கு யார் தலைமையேற்பது என்ற கேள்வி சவாலாக உருவெடுத்தது. காந்தியைப் போன்ற உயர் தலைவர்கள் யாரும் அப்போது பம்பாயில் இல்லை. அந்த இக்கட்டான சூழ்நிலையில் 'கவலைப்படாதீர்கள், நான் கூட்டத்தில் பேசுகிறேன்' என்று கஸ்தூர்பா காந்தி கைகொடுத்தார்.

கஸ்தூர்பாவின் இந்த வார்த்தைகளை கேட்ட அனைவரும் திகைத்துப் போனார்கள். அதற்கு காரணம் இதுபோன்ற பெரிய பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றியது இல்லை என்பது மட்டுமல்ல, அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சமும் நிலவியது. கஸ்தூர்பாவின் உடல்நிலை மிகவும் நலிந்திருந்தது.

கூட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் பேசவிருப்பதை சுஷீலா நய்யாரிடம் 'டிக்டேட்' செய்த கஸ்தூர்பா, சிவாஜி பூங்காவிற்கு செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்துவிட்டார். ஒன்றரை லட்சம் பேர் கூடியிருந்த சபையில் உரையாற்றினார் கஸ்தூர்பா. உரையை கேட்ட மக்கள் உணர்ச்சி வசப்பட, பலரின் கண்கள் ஈரமாகின.

கஸ்தூர்பாவின் உரை முடிந்ததும், அங்கிருந்த போலிசார் அவரையும், சுஷீலா நய்யாரையும் கைது செய்தனர். 30 மணி நேரம் வரை சாதாரண குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அறையில் வைக்கப்பட்ட அவர்கள் இருவரும், பிறகு புனேயில் உள்ள ஆஹா கான் அரண்மனை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தான் காந்தியும் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

கஸ்தூர்பா
Keystone/Getty Images
கஸ்தூர்பா

மூன்று முறை மாரடைப்பு

இரண்டு மாதங்களுக்குள் கஸ்தூர்பாவின் ஆரோக்கியம் மிகவும் சீர்குலைந்தது. தீவிர 'மூச்சுக்குழாய் அழற்சி'யால் பாதிக்கப்பட்ட அவருக்கு மூன்று முறை மாரடைப்பும் ஏற்பட்டது. மிகவும் பலவீனமான அவர் படுத்த படுக்கையாகிவிட்டார்.

தினசரி கஸ்தூர்பாவிடம் வந்து அமர்ந்திருப்பார் கணவர் காந்தி. அவரின் கட்டிலுக்கு அருகே சிறிய மர மேசை உருவாக்கி கொடுத்து, உணவு உண்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தார் காந்தி.

கஸ்தூர்பா காலமான பிறகு, மனைவியின் நினைவு வரும்போதெல்லாம் காந்தி அந்த மேசையையே பார்த்துக் கொண்டிருப்பார். எங்கு சென்றாலும் அந்த சிறிய மேசையை தன்னுடனே கொண்டு செல்வார் காந்தி.

பென்சிலின் ஊசி போடுவதற்கு அனுமதிக்காத காந்தி

கஸ்தூர்பா இன்னும் அதிக நாட்கள் உயிர் பிழைக்கமாட்டார் என்று 1944 ஜனவரி மாத்திலேயே காந்திக்கு தெரிந்துவிட்டது. கஸ்தூர்பா காலமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜனவரி 27ஆம் தேதியன்று அவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், பிரபல மருத்துவர் டாக்டர் தின்ஷாவை கஸ்தூர்பாவிற்கு சிகிச்சை அளிக்க அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

கஸ்தூர்பாவை கவனித்துக் கொள்ள தனது பேத்தி கனு காந்தியையும் அவருடன் தங்க அனுமதி கோரினார் காந்தி. கஸ்தூர்பாவுடன் தங்கிய கனு, பக்தி பாடல்களை பாடி, உடல் நலிவுற்றிருந்த கஸ்தூர்பவின் மனதுக்கு ஆறுதல் வழங்குவார்.

கஸ்தூர்பாவின் இறுதி நாட்களில் மருத்துவர் வைத்ய ராஜ் சிறைக்கு வெளியே தன்னுடைய காரில் அமர்ந்தபடியே உறங்குவார். ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் திருமதி காந்தியின் உடல்நிலை மோசமாகலாம் என்பதை அவர் அறிந்திருந்தார்.

கஸ்தூர்பாவை காப்பாற்றும் இறுதி முயற்சியாக அவரது மகன் தேவ்தாஸ் காந்தி, கல்கத்தாவில் இருந்து பென்சிலின் ஊசி மருந்தை வரவழைத்தார். ஆனால் மனைவிக்கு பென்சிலின் ஊசி போட கணவர் காந்தி அனுமதிக்கவில்லை. அந்த காலத்தில் பென்சிலின் மருந்து செலுத்துவது மிகவும் அரிது.

மனைவியின் கரங்களை பிடித்தவாறே அமர்ந்திருப்பார் காந்தி. மகன் ஹரிலால் தனது இறுதி காலத்தில் தாயை பார்க்க வந்தபோது, மது அருந்தியிருந்ததை கண்டு வேதனையுடன் தலையில் அடித்துக்கொண்டார்.

கஸ்தூர்பா பிழைக்க முடியாது என்று பிப்ரவரி 22ஆம் தேதியன்று தெரிந்து போனதும், மதியம் மூன்று மணி சுமாருக்கு மகன் தேவ்தாஸ் புனிதமானதாக கருதப்படும் கங்கை நீரை தாய்க்கு இறுதியாக வாயில் விட்டார்.

மனைவியை குளிப்பாட்டிய காந்தி

மாலை ஏழரை மணிக்கு கஸ்தூர்பாவின் தனது மூச்சை நிறுத்திக்கொண்டார். சுஷீலா நய்யார் மற்றும் மீரா பென்னின் உதவியுடன் மனைவியை குளிப்பாட்டினார் காந்தி. பிறகு அவருக்கு அணிவிக்கப்பட்ட செந்நிற புடவை, சில நாட்களுக்கு முன்னர் காந்தியின் பிறந்த நாளுக்கு கஸ்தூர்பா கட்டியிருந்தது என்பது காந்திக்கு தெரியும்.

தனது கையால் மனைவிக்கு நெற்றியில் இறுதி திலகமிட்டார் காந்தி. திருமணமானதில் இருந்து கஸ்தூர்பா வலது கையில் இருந்த ஐந்து கண்ணாடி வளையல்கள் அப்போதும் காணப்பட்டன.

கஸ்தூரிபாவின் தகனம் பகிரங்கமாக செய்யப்படுவதை பிரிட்டன் அரசு விரும்பவில்லை. கஸ்தூர்பாவின் இறுதி சடங்குகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது தான் மட்டுமே தனியாக சடங்குகளை செய்வேன் என்று காந்தியும் பிடிவாதமாக இருந்தார்.

சந்தனக்கட்டைகளை கொண்டு சிதையா?

கஸ்தூர்பாவை சிதையூட்ட எந்த வகை கட்டைகளை பயன்படுத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. சந்தனக்கட்டைகளை அனுப்புவதாக காந்தியின் நலன் விரும்பிகள் தெரிவித்தாலும், காந்தி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கு அவர் காரணம், ஏழை ஒருவனின் மனைவியை தகனம் செய்ய சந்தனக்கட்டை தேவையில்லை.

சிறையில் ஏற்கனவே சந்தனக் கட்டைகள் இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தார்கள். அது எதற்காக கொண்டு வரப்பட்டது தெரியுமா? 1943 பிப்ரவரியில் காந்தி 21 நாட்கள் வரை உண்ணா நோன்பு இருந்தாரே, அப்போது பயன்படும் என்று அவர்கள் அதை சேகரித்து வைத்தார்களாம்!

இந்த சந்தனக்கட்டைகளை பயன்படுத்த காந்தி சம்மதித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், 'என்னுடைய சிதைக்காக வாங்கப்பட்ட கட்டைகளைக் கொண்டே என்னுள் பாதியான என் மனைவியை தகனம் செய்யலாம், பரவாயில்லை'.

இறுதிவரை அமர்ந்திருந்த காந்தி

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு 150 பேர் கூடினார்கள். அதே இடத்தில்தான் சில நாட்களுக்கு முன்னர் மகாத்மா காந்திக்கு நெருக்கமான மஹாதேவ் தேசாயின் உடல் சிதையூட்டப்பட்டது.

கஸ்தூர்பாவின் உயிரற்ற உடலை அவரது இரு மகன்கள், கணவர் மற்றும் ப்யாரே லால் என நான்கு பேரும் தோளில் சுமந்து வந்தனர். மகன் தேவ்தாஸ் சிதையை எரியூட்ட, காந்தி சிதையின் முன்பு ஒரு மரத்தின் கீழே அமர்ந்து சிதை அணையும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தார்.

சிறை வளாகத்திலேயே நடந்த இறுதி சடங்கில் பகவத்கீதை, குரான், பைபிள், பார்சி மக்களின் மத நூல் ஆகியவற்றிலிருந்து சில பகுதிகள் படிக்கப்பட்டன. என்னுள் இருந்த சிறந்த பாதி இறந்துவிட்டது. நான் இப்போது என்ன செய்யப் போகிறேன் என்று கூறி காந்தி வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

சிதையூட்டப்பட்ட பிறகு காந்தியை அறைக்கு திரும்பி செல்லச் சொல்லி அனைவரும் வற்புறுத்தினார்கள். ஆனால் அதை மறுத்த காந்தி, "அவருடன் 62 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இன்னும் சில மணித்துளிகள்தான் அவரை நான் உணரமுடியும். அதை தவறவிடமாட்டேன். அப்படி செய்தால் கஸ்தூர்பா என்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்" என்று சொன்னார்.

பிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபஜல் மற்றும் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரமோத் கபூர்
BBC
பிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபஜல் மற்றும் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரமோத் கபூர்

என்றும் மறையா கஸ்தூர்பா

இறுதி சடங்குகள் முடிந்த நான்காவது நாள் கஸ்தூர்பாவின் மகன்கள் தாயின் அஸ்தியை சேகரித்தபோது, தாயின் உடல் முழுவதும் சாம்பலாகியிருந்தாலும், அவரது கையில் இருந்த ஐந்து கண்ணாடி வளையல்கள் மட்டும் அப்படியே இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார்கள்.

இது காந்திக்கு தெரிந்தபோது, "கஸ்தூரிபா நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை, நம்முடனே இருப்பார் என்பதை உணர்த்திவிட்டார்" என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

(காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரமோத் கபூருடனான உரையாடலின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை)

பிற செய்திகள்

BBC Tamil
English summary
தேசத்தந்தையின் மனைவியாக இருந்தாலும், இறுதி சுவாசத்தை அரண்மனையின் சிறைச்சாலையில் விட்ட கஸ்தூர்பாவின் உடல் எரிந்தபோதிலும், அவர் கை வளையல்கள் சாம்பலாகவில்லை.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X