For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பவளப்பாறை சுற்றுச்சுவர்: ராமேஸ்வரத்தின் 200 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் பாதுகாக்கப்படுமா?

By BBC News தமிழ்
|
சுற்றுச்சுவர்
BBC
சுற்றுச்சுவர்

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையோரத்தில் உள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் அழியும் நிலையில் உள்ளது. அதை பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டைய காலக் கோயில்கள் மட்டுமல்லாமல், பஞ்சம் வரும் காலங்களில் பயன்படுத்துவதற்காக தானியங்களை, விதைகளை சேமித்து வைக்கும் களஞ்சியங்களும் நம் முன்னோர்களின் கட்டடக்கலை மற்றும் தொழில்நுட்ப அறிவை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

சுவர்
BBC
சுவர்

இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து நடைப்பயணமாக ராமேஸ்வரத்துக்கு வரும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்காக சேது சீமையை ஆண்ட சேதுபதி மன்னர்கள் பல இடங்களில் சத்திரங்களை கட்டினர். சத்திரங்களில் தங்கும் பக்தர்களின் உணவு தேவைக்காக நெல் உள்ளிட்ட தானியங்களை சேமித்து வைக்க ஆங்காங்கே நெற்களஞ்சியங்களையும் அமைத்துள்ளனர்.

இரையாயிரம் கொண்டான்

நெற்களஞ்சியத்தை 'இரையாயிரம் கொண்டான்' எனவும் அழைப்பர். ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் இரையாயிரம் கொண்டான் என்ற ஒரு பெரிய நெற்களஞ்சியம் இருந்துள்ளது. அதே போல் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், அழகர்கோயில், திருப்பாலைத்துறை உள்ளிட்ட சில கோயில்களில் பழமையான நெற்களஞ்சியங்கள் தற்போதும் உள்ளது.

பழமை அமைப்பு
BBC
பழமை அமைப்பு

பாக் நீரினை கடற்கரைக்கு அண்மித்த பகுதியான மண்டபம், பாம்பன், ராமேஸ்வரத்திலும் சிறிய நெற்களஞ்சியங்கள் இருந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தற்போது அழிந்துவிட்டன. இந்த நிலையில், மண்டபம் கடற்கரையோரத்தில் உள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான,அழியும் நிலையில் உள்ள ஒரு நெற்களஞ்சியம் இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு பிபிசி தமிழிடம் பேசுகையில், "15 அடி உயரம் 50 அடி சுற்றளவில் வெயில் மழை மற்றும் கடல் காற்றால் பாதிக்காத வகையில் வட்டவடிவில் அமைந்துள்ள நெற்களஞ்சியம் கீழே அகன்றும், மேலே குறுகியும் குதிர் போன்ற அமைப்பில் உள்ளது. இதன் சுவர் 3 அடி அகலத்தில், பவளப்பாறைகள் சுண்ணாம்பு சாந்து கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதன் நடுவில் ஒரு சுவர் அமைத்து இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஜன்னல் அமைந்துள்ளது. இதன் வடக்குப்பகுதியில் 3 அடி உயரம் 2 அடி அகலத்தில் உள்ளே செல்ல வாசல் உள்ளது. கூம்பு வடிவிலான இதன் மேற்கூரை இடிந்து விழுந்து விட்டதால் உள்ளே மரங்கள் வளர்ந்துள்ளன. மழைநீர் சுவரில் படாமல் வழிந்தோடும் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் சுற்றுச்சுவர் கடற்கரைப் பாறைக் கற்களால் கட்டப்பட்டுள்ளதுடன் இதன் வெளிப்பகுதியில் விளக்கேற்ற ஒரு மாடக்குழி உள்ளது," என்றார்.

ராஜகுரு
BBC
ராஜகுரு

மேலும், சேதுபதி மன்னர்களால் தனுஷ்கோடி செல்லும் யாத்திரிகர்களுக்காக மண்டபத்தில் இரண்டு சத்திரங்கள் அமைத்துள்ளனர். இப்பகுதியில் நெல் விளைச்சல் இல்லை. என்பதால் சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்து வந்த நாட்டின் பிறபகுதிகளில் விளைந்த நெல், தானியங்களைச் சேமித்து வைத்து இப்பகுதிகளில் உள்ள சத்திரங்களுக்கு வழங்குவதற்காக மண்டபத்தில் இந்த நெற்களஞ்சியத்தை அமைத்திருக்கலாம் என்கிறார் ராஜகுரு.

சுற்றுச்சுவர்
BBC
சுற்றுச்சுவர்

பாதுகாக்க பிரம்மச்சாரிகள்

மேலும் ராஜகுரு, மன்னர்கள் காலத்தில் இக்களஞ்சியத்தைப் பாதுகாக்க பிரம்மச்சாரி இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காவலர்களாக இருந்த முனியசாமி, சன்னியாசி, பிச்சை, கருப்பையா, தொட்டிச்சி ஆகியோரின் சமாதிகள் களஞ்சியத்தின் அருகில் உள்ளன. இவற்றை களஞ்சியம் கோயிலாக இப்போதும் மக்கள் வழிபடுகின்றனர் என்று கூறினார்.

இதன் நினைவாக இப்பகுதி மக்களிடம் களஞ்சியம், களஞ்சியராஜா, களஞ்சியராணி என பெயர் வைக்கும் வழக்கமும் உள்ளது. சேதமடைந்து அழிந்து வரும் இந்த நெற்களஞ்சியத்தை பாரம்பரிய சின்னமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு இப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தார்.

Click here to see the BBC interactive

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
What is Coral Reef? Can 200 years old Paddy warehouse in Rameswaram be protected?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X