For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி

By BBC News தமிழ்
|
ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி
Getty Images
ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி

ரஜினிகாந்த் கட்சி துவங்கப்போவதாக அறிவித்தபோது, பா.ஜ.கவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்று அறிவித்தார்.

பிறகு ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தைக் கைவிட்ட நிலையில், தான் தனியாக கட்சி துவங்கப்போவதாக அறிவித்திருக்கிறார் அர்ஜுனமூர்த்தி.

ரஜினிக்கும் அவருக்குமான உறவு, அவருடைய கட்சியின் கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதெல்லாம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் அர்ஜுனமூர்த்தி. பேட்டியிலிருந்து:

கே. ரஜினிகாந்த் கட்சியைத் துவங்கப்போவதாக அறிவித்து, உங்களை ஒருங்கிணைப்பாளராக அறிமுகப்படுத்தியவுடன் யார் நீங்கள் என்ற ஆச்சரியம் எல்லோருக்குமே இருந்தது. உங்களுடைய பின்னணி என்ன?

ப. நான் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவன். என்னுடைய படிப்பெல்லாம் அங்கேதான். அங்குள்ள ராஜா கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல் படித்தேன். 1981ல் சென்னைக்கு வந்தேன். சென்னையில் குறைந்த காலத்திற்கு பாரி அண்ட் கம்பனியில் வேலை பார்த்தேன். அதற்குப் பிறகு மருந்துக் கம்பனிகளுக்குத் தேவைப்படும் ரசாயனங்களை வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு ஸ்பெஷாலிட்டி உணவு பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றை நடத்தினேன். தென்னிந்தியாவிலும் அந்தமான் - நிகோபாரிலும்கூட கிளைகளை வைத்திருந்தோம். கிட்டத்தட்ட 800 பேர் அப்போதே வேலை பார்த்தார்கள்.

அதற்குப் பிறகு ஒரு அமெரிக்க நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்தது. அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்தினோம். அதற்குப் பிறகு, டெலிகாம் துறையில் கால் பதித்தேன். பிஎஸ்என்எல்லில் காலிங் - கார்ட் அறிமுகமானபோது, நாங்கள்தான் இந்தியா முழுவதும் விநியோகம் செய்தோம். இந்த காலிங் - கார்ட் தொழில் நசிய ஆரம்பித்தபோது சில மென்பொருள் தயாரிப்புகளைச் செய்தோம். இதுபோன்றுதான் என் தொழில் நடந்துவருகிறது.

கே. எந்தக் கட்டத்தில் அரசியலுக்கு வந்தீர்கள்? பா.ஜ.க.தான் உங்கள் முதல் அரசியல் கட்சியா?

ப. ஆமாம். வாழ்வின் முதல் 60 ஆண்டுகளை பிறருக்காக செலவழித்துவிடுகிறோம். ஆகவே 2018ல் எனக்கு 58 வயதானபோது, இனி எனக்காக வாழ வேண்டும் என நினைத்தேன். தொழிலை என் பெரிய மகளிடம் கொடுத்துவிட்டேன். என்னிடமிருந்த அறிவை தமிழக இளைஞர்களிடம் கொடுக்க நினைத்தேன். அப்போது என்னுடைய சுவாமிஜியான ஓம்காரானந்தா என்னை பாரதிய ஜனதா கட்சியில் சேர்த்து விட்டார்.

கே. நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும்போது திடீரென ரஜினிகாந்த் உங்களை தன் கட்சியின் பொறுப்பாளராக அறிமுகப்படுத்தினார். அது எப்படி நடந்தது?

ப. நான் பா.ஜ.கவில் சேர்ந்தவுடன் ஒரு நல்ல ஆன்மாவிடம் ஆசீர்வாதம் வாங்க நினைத்தேன். ஜனவசியமுள்ள ஒருவரை சந்திக்க நினைத்தேன். நம் தமிழ்நாட்டில் அவரைவிட ஜனவசியமுள்ள மனிதர் இல்லை. அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து, நிறைய நேரம் பேசினோம். அவர் கையால் ருத்ராட்ச மாலை வாங்கி, ஆசீர்வாதமும் கிடைத்தது. அப்படித்தான் அவருடன் உறவு உருவானது. அதற்குப் பிறகு நான் தொடர்ந்து பா.ஜ.கவில் செயல்பட்டேன். சில மாதங்களுக்கு முன்பாக, ரஜினி அரசியல் கட்சி துவங்குவது தொடர்பாக பேச்சு வந்தபோது என்னுடைய ஆர்வத்தைக் கேட்டார்கள். "இது சிவன் கட்டளை; சேர்ந்து செயல்பட விருப்பம் இருக்கிறது" என்று சொன்னேன்.

கே. 2017ல் இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றிப் பேசிவந்தார். ஆகவே அவர் தன் அரசியல் கட்சிக்கான கொள்கைகளையும் வடிவமைத்திருப்பார். அவருடைய கொள்கைகள் எதன் அடிப்படையில் அமைந்திருந்தன?

ப. அடிப்படையில் ஆன்மீக அரசியல். அதாவது நேர்மையான, ஒழுக்கமான, அராஜகமில்லாத அரசைக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அவர் தமிழக அரசியல் நிலவரத்தைத் தொடர்ந்து கவனித்து வந்ததால், அவரிடம் தமிழகத்திற்கு என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்த யோசனை நிறைய இருந்தது.

https://www.youtube.com/watch?v=VBPKca7rsfQ&t=116s

கே. தமிழக அரசியலில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு போன்றவை முக்கியமான அம்சங்களாக இருந்திருக்கின்றன. ரஜினிகாந்த் இது குறித்தெல்லாம் என்ன கருத்துகளை வைத்திருந்தார்?

ப. அடிப்படையில் ரஜினி கருத்துகளை திறந்த மனதோடு அணுகக்கூடியவர். அவரும் என்னைப் போன்ற சிந்தனை உடையவர்தான். அவரை யாரும் வற்புறுத்த முடியாது. யாருடைய ஆசைக்கும் துணைபோக மாட்டார். அவர் உள்மன குரலைக் கேட்டுதான் முடிவெடுப்பார். இதுபோன்ற விஷயங்களைப் பொறுத்தவரை, எல்லாவற்றையும் மாத்தனும் என்று நினைத்தார்.

கே. இல்லை... மேல் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து அவர் என்ன நினைத்தார்?

ப. பொதுவாக சிஸ்டத்தை மாற்ற வேண்டுமென நினைத்தார். நிறைய சிந்தித்து வைத்திருந்தார். ஆனால், எந்த அளவுக்கு மாற்ற முடியும் என்பது குறித்தெல்லாம் அவர் என்னிடம் பகிர்ந்துகொள்ளவில்லை.

கே. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை திடீரென ஒரு செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். அதற்கு முந்தைய சில நாட்களில் என்ன நடந்தது? ஏன் இவ்வளவு அவசரம் அவசரமாக இதைச் செய்ய வேண்டும்?

ப. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. யாராலும் அவரை வற்புறுத்த முடியாது. இந்த நேரத்தில் இதைச் செய்தால் நன்றாக இருக்குமென அவருடைய மனதில் திடீரென தோன்றும் என நினைக்கிறேன். தோன்றியதை உடனே செய்ய வேண்டுமென நினைப்பார். இதில் ஒன்றும் புதிதாக இல்லையே, 2017ல் இருந்து சொல்லிவந்த விஷயம்தான். அன்றைய நிகழ்வு ஒன்றும் கட்சியின் துவக்க விழா அல்ல.

அரசியலுக்கு வர முடிவுசெய்த பிறகு, அவருடைய ரஜினி மக்கள் மன்றத்தை அரசியலுக்கான கட்டமைப்பாக மாற்ற நினைத்தார். அதை சிலர் ஒருங்கிணைக்க வேண்டுமென விரும்பினார். அதற்கான துவக்கம்தான் அன்றைய நிகழ்வு.

கே. கட்சி ஆரம்பிக்கப்போவதாகச் சொல்லி உங்களை அறிமுகப்படுத்திய பிறகு, திடீரென கட்சி துவங்கும் திட்டத்தை ரஜினி மாற்றிக்கொண்டார். அந்தத் தருணம் உங்களுக்கு எப்படி இருந்தது?

ப. அந்த முடிவு எனக்கு முன்பே கோடிட்டு காண்பிக்கப்பட்டுவிட்டது. எனக்கு அதிர்ச்சியெல்லாம் கொடுக்கவில்லை. முதல் நாளே அமர்ந்து தீவிரமாக விவாதித்தோம். நாங்கள் ஒத்த கருத்தோடு இருந்தோம். எல்லாமே அவரை வைத்துத்தானே. அவருடைய உடல்நலம் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

கே. அவருடைய ரசிகர்கள் கடுமையான ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள் என்பதை அவர் கணக்கில் கொண்டிருந்தாரா?

ப. கண்டிப்பாக. அவருக்கு அவருடைய ரசிகர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். தன்னுடைய உடல்நலம் காரணமாக மற்றவர்கள் துன்பமடையக் கூடாது என்பதை அவர் மிக முக்கியமாகக் கருதினார். என் விஷயத்தில் அவருக்கு மன வருத்தம்கூட இருக்கிறது. ஒரு கட்சிப் பதவியில் இருந்தவரை அழைத்துவந்து இப்படி செய்துவிட்டோம் நினைத்தார். அது அவருடைய அறிக்கையிலேயே வெளிப்பட்டது.

கே. இப்போது நீங்கள் கட்சி துவங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். உங்கள் கட்சியின் அடித்தளம் யார்?

ப. கடந்த ஐம்பதாண்டு கால அரசியல் சுழற்சியால் யாருக்கெல்லாம் மனதில் ஒரு அதிருப்தி இருக்கிறதோ அவர்கள்தான் இதன் அடிப்படை. தற்போது உள்ள தலைமுறைக்கும் நம்முடைய அரசியல் கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகவே யாராவது ஒருவர் இதற்கான இயக்கத்தை துவங்கினால் நன்றாக இருக்குமென நினைத்தேன். அது ரஜினி சாராக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், யாராவது ஒருவர் துவங்கித்தானே ஆக வேண்டும். விரைவிலேயே இது மிகப் பெரிய இயக்கமாக மாறுவதைப் பார்ப்பீர்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் அப்படித்தான் நடந்தது.

கே. தமிழ்நாட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்கிறீர்கள். எதை சுத்தம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

ப. முதலில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க முடியாது. ஆனால், இல்லாமல் செய்யலாம். அதற்கு சிறந்த உதாரணம் ஐடி துறை. அங்கே லஞ்சமே கிடையாது. அது ஒரு சுதந்திரமான துறையாக வளர்ந்ததால்தான் அப்படி நடந்தது.

கே. ஐடி நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள். ஒரு அரசு கட்டமைப்பையும் தனியார் நிறுவனங்களையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள். தனியார் நிறுவனங்களில் செய்வதைப் போல எப்படி அரசில் செய்ய முடியும்?

ப. அதைப் பற்றிய விவரங்களை எடுத்திருக்கிறோம். கட்சி துவங்கும்போது அதை விளக்குவோம்.

கே. லஞ்ச ஒழிப்பு தவிர, உங்கள் கட்சியின் அடிப்படையான கொள்கை என்ன?

அர்ஜுனமூர்த்தி
BBC
அர்ஜுனமூர்த்தி

ப. முக்கியமானது, எல்லோரையும் உள்ளடக்கிச் செல்வது - Inclusiveness. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு இடம் வேண்டும். பாலின சமத்துவம் தேவை. ஓட்டுக்காக பிரித்தாளும் வேலையை நிறுத்த வேண்டும்.

கே. பிரித்தாளும் வேலையை நிறுத்த வேண்டுமென்றால்...

ப. அதாவது, ஜாதியைப் பாதுகாக்கத்தான் ஜாதிக் கட்சிகளைத் துவங்குகிறார்கள்..

கே. ஒடுக்கப்படும் ஜாதிகள் தங்கள் உரிமையைக் கோர ஆரம்பிப்பதை எப்படி ஜாதிக் கட்சி என்பீர்கள்?

ப. அப்படி ஆரம்பித்துவிட்டு, பிறகு அதிகார மையப் புள்ளிக்குப் போய்விடுகிறார்கள். கலாசார ரீதியாக ஜாதி முக்கியம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

கே. கலாசார ரீதியாக ஜாதி முக்கியம் என நினைக்கிறீர்களா?

ப. அப்படி சொல்லவரவில்லை. ஆனால், அது இயற்கையில் இருக்கிறது. ஜாதியை மொத்தமாக வேரோடு அழிக்க முடியாது. நம்ம அமைப்பில் எல்லோருக்கும் ஒரு ஸ்பேஸ் வேணும்.

கே. வேறு என்ன விஷயங்களைச் செய்ய நினைக்கிறீர்கள்?

ப. சக மனிதர்களுக்கு மத்தியில் ஒரு பதற்றம் இருக்கிறது. அதை முதலில் குறைக்க வேண்டும். அதனால், அடிப்படையான சிரிப்பை நாம் இழக்கிறோமோ என்ற பயம் வந்திருக்கிறது. நம் தமிழகம் நகைச்சுவை உணர்வுள்ள மாநிலம். அது உங்கள் உடல்நலத்திற்கு மிக நல்லது. இதனால் நம்முடைய அமைதியின்மை, தூக்கமின்மை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, மனிதர்களிடம் இருக்கும் பதற்றத்தைக் குறைப்பதற்கு பெரிய அளவில் திட்டங்கள் இருக்கு. அதைக் கண்டிப்பாக வெளிப்படுத்துவேன்.

கே. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காவிட்டாலும், அவருடைய மனைவி ஒரு கட்சியைத் துவங்கலாம் என்று சில செய்திகள் வருகின்றனவே...

ப. அதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. அதைப் பற்றிய சிந்தனையே எனக்குத் தேவையில்லை.

கே. உங்களுடைய கட்சியில் ரஜினியின் தொண்டர்கள் வந்து சேர்வார்கள் என நம்புகிறீர்களா?

ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி
Getty Images
ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி

ப. என்னால் 0.001 சதவீதம்கூட ரஜினி மனவேதனைப் படக்கூடாது. என்னுடைய முயற்சி என்பது தமிழ்நாட்டின் நன்மைக்காக இருக்க வேண்டுமே தவிர, யாருடைய துன்பத்திற்காகவும் இருக்கக்கூடாது. அவருடைய ரசிகர்களைப் பொறுத்தவரை, என்னுடைய உழைப்பு, என் கருத்துகளில் நம்பிக்கை வைத்து ஆதரித்தால் சந்தோஷம்.

கே. உங்கள் கட்சியை எப்போது ஆரம்பிப்பதாக இருக்கிறீர்கள்..

ப. இன்னும் ஒரு வாரத்தில் துவங்கிவிடுவேன்.

கே. இந்தச் சட்டமன்றத் தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுவீர்களா?

ப. கண்டிப்பாக. அது தொடர்பான ஆய்வுகளை முடித்துவிட்டோம். மக்களின் இன்றைய மனநிலையிலிருந்து பத்தாண்டுகள் முன்னோக்கி எடுத்துச்செல்வது குறித்து யோசித்திருக்கிறோம். அதற்கேற்றபடி வேட்பாளர்களைத் தேர்வுசெய்வோம். இதற்காக பல கேள்வித் தாள்களை உருவாக்கியிருக்கிறோம். அந்தக் கேள்விகளுக்கு யாரால் பதிலளிக்க முடியுமோ, அவர்களால் வேலை செய்ய முடியும். அவர்களைத் தேர்வுசெய்வோம்.

கே. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், களத்தில் உங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென நினைக்கிறீர்களா?

ப. கண்டிப்பாக ஏற்படுத்த முடியும். அதிலென்ன பிரச்சனை? நேசமணியின் தலையில் சுத்தியல் விழுந்தது ஒரே நாளில் பிரபலமாகவில்லையா? மக்களிடம் சென்றெல்லாம் கஷ்டப்பட வேண்டாம். இந்தியாவிலேயே அதிக ஸ்மார்ட் போன் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது. கொண்டுபோய் சேர்க்க வேண்டியது இனி பெரிய காரியமில்லை. மக்கள் அதைப் புரிந்துகொள்வார்கள். நாங்கள் அறிவிக்கும்போது எங்கள் அரசியலைப் புரிந்துகொள்வீர்கள்.

கே. அரசியல் கட்சி ஒன்று, கொள்கையின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கும். அல்லது கவர்ச்சிகரமான தலைவரை நம்பி களமிறங்கும். இதில் நீங்கள் எந்த வகை?

ப. மக்களின் நினைவில் நாங்கள் இல்லை. புதிதாகத்தான் களமிறங்குகிறோம். அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். மக்களைப் பொறுத்தவரை, சொல்வதை இவர்கள் செய்வார்களா என்று பார்ப்பார்கள். அந்த நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டால், புதிதாக ஒருவரை தேர்வுசெய்ய மக்கள் தயங்க மாட்டார்கள்.

கே. வரவிருக்கும் தேர்தலில் எது முக்கியப் பிரச்சனை என நினைக்கிறீர்கள்?

ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி
Getty Images
ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி

ப. வேலைவாய்ப்புகள்தான். நம்மிடம் நிறைய கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், அதிலிருந்து வெளிவருபவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது குறைவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக இருக்கிறது. வளர்ச்சியடையாத மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை இல்லை. அவர்கள் அவ்வளவு தூரம் படிக்கவில்லை.

தவிர, கோவிட் பரவலால் கீழ், மத்தியதர வர்க்கம் வேலை வாய்ப்புகளை கடுமையாக இழந்திருக்கிறது. அதை சரிசெய்யவில்லையென்றால் மிக மோசமான பிரச்சனைகள் வரும்.

கே. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லையென்றவுடன் திரும்பவும் பா.ஜ.கவில் இணையாமல், ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்கிறீர்கள்?

ப. சாரோட தலைமையில் இருந்துவிட்டு...வேறு இடத்திற்கு செல்வது கஷ்டம். இதை myth, மாயை என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

கே. உங்கள் பதில்களில் ஆன்மீகம், மாயை போன்ற வார்த்தைகள் அடிக்கடி வருகின்றன. இதற்கெல்லாம் தமிழக அரசியலில் இடம் இருக்கிறதா?

ப. நிறைய இருக்கிறது. இவங்க எல்லோருமே வேஷம்கட்டி, வேஷம்கட்டி வந்துவிட்டார்கள். இப்ப இந்த வேஷத்தை உடனே கலைக்க முடியாது. இதுவரை, தெய்வ நம்பிக்கைக்கு எதிராக இருந்தவர்கள், பொய்யான தெய்வ நம்பிக்கை இருப்பதைப் போல காட்டுகிறார்கள். அவர்கள் மிகுந்த அபாயகரமான கட்டத்தில் இருக்கிறார்கள். இதனால், மிக மோசமாக கீழிறங்குவார்கள். ஏனென்றால் அவர்களிடம் கொள்கையில்லையே. என்றைக்கு ஒரு பதற்றமும் பயமும் ஒரு அரசியல் அமைப்புக்கு வந்துவிட்டதோ, அப்போதே அது கீழறங்க ஆரம்பித்துவிட்டது என்றுதான் அர்த்தம்.

கே. நீங்கள் தி.மு.கவைச் சொல்கிறீர்களா?

ப. எல்லோரும்தான். இவர்கள் தங்களை அப்-டேட் செய்துகொள்ளவில்லை. ஐம்பது வருடமாக எதையுமே யோசிக்காமல் இருந்துவிட்டார்கள். இப்போது புதிதாக வாக்களிக்க வந்திருப்பவர்களிடம் என்ன சொல்வதெனத் தெரியவில்லை. ஆகவே எது எதையோ முயன்று பார்க்கிறார்கள். ஆகவே சீக்கிரமாக அவர்கள் பிடிமானம் போய்விடும்.

கே. இந்தக் கட்சிகள் ஐம்பதாண்டுகளாக எதையும் யோசிக்கவில்லை என்கிறீர்கள். அப்படியானால், இந்த ஐம்பதாண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி எப்படி வந்தது என நினைக்கிறீர்கள்?

ப. தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்தவரை, அரசியல், அதிகாரம், அரசாங்கக் கொள்கை இதையெல்லாம்விட, தமிழ் மக்களின் பொது அறிவு மிகச் சிறப்பாக இருக்கிறது. தமிழர்களுக்கு இயற்கையிலேயே சிறப்பான ஐ.க்யூ இருக்கிறது. ஆகவே இந்த வளர்ச்சியெல்லாம் தமிழ் மக்களின் வளர்ச்சிதானே ஒழிய, அரசியல் கட்சிகளின் சிந்தனையின் வளர்ச்சி என்று சொல்வதற்கு ஒன்றும் கிடையாது.

கே. இந்தத் தேர்தல் முடிவு எப்படியிருக்குமென நினைக்கிறீர்கள்..

ப. மிகப் பெரிய மாற்றம் இருக்கும். நான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதால் அதைச் சொல்லவில்லை. இந்தத் தேர்தல் அரசியல் சம்பந்தப்பட்ட தேர்தலே அல்ல. இது முழுக்க முழுக்க ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். தேர்தல் நெருங்க நெருங்க இதை நீங்கள் உணர்வீர்கள். நான் ஒரு Visionary என்பதால், இதை முன்பாகவே சொல்ல முடிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Arjunamurthy has announced that he will start the party alone as Rajini has abandoned his plan to start the political party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X